
1. 'குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்'
இந்தப் பழமொழி பிழையாக வழங்கப்பட்டு வருகிறது. 'மோதகக் கை' என்பது 'மோதிரக் கை' என்று மருவி விட்டது. மோதகத்தை அதாவது கொழுக்கட்டையைக் கையில் வைத்திருப்பவனாகிய விநாயகப் பெருமானிடம் குட்டுப் பெற வேண்டும் என்பதே இப்பழமொழியின் உண்மையான பொருள்.
2. 'சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்'
சட்டி - சஷ்டி ; அகப்பை - அகத்தில் உள்ள பை அதாவது கருப்பை
சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை வரும். இதுவே பின்னர் 'சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' என்று மருவி விட்டது.
3. 'அடியாத மாடு படியாது'
இதன் உண்மை பொருள் என்னவென்றால் மாட்டின் கால்களுக்கு லாடம் அடித்தால்தான் அதனால் கடுமையான வேலைகளை (உழுதல் போன்ற ) செய்ய முடியும் என்பது தான்.
4. 'ஆறிலும் சாவு நூறிலும் சாவு'
கர்ணன் குந்தி தேவியின் வேண்டுகோள் படி பாண்டவர்கள் பக்கம் சேர்ந்து ஆறு எனும் எண்ணிக்கையில் இருந்தாலும் மரணம் வரும். அப்படியின்றி கௌரவர்களுடன் சேர்ந்து நூறில் ஒருவனாக இருந்தாலும் மரணம் உண்டு. இதுவே இப்பழமொழியின் உட்பொருள்.
5. 'புண்பட்ட மனதை புகைய விட்டு ஆத்து'
பழமொழி ஒருவரை நல்வழிப்படுத்துமே தவிர, தீய வழியை ஒருபோதும் காட்டாது. மனம் புண்பட்டால், புகை பிடிக்க வேண்டும் என்பது போல அனைவரும் அர்த்தம் புரிந்து கொள்கிறார்கள். உண்மையான அர்த்தம் அதுவல்ல. 'புண்பட்ட மனதை புக விட்டு ஆற்று' என்பதுதான் உண்மையான பழமொழி.
மனம் புண்பட்டிருக்கும் நேரம், துன்பத்தை எண்ணியெண்ணி வருந்திக் கொண்டிருக்காமல், மனதைத் திசைதிருப்பித் துன்பத்தை போக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அதன் உண்மையான விளக்கம்.
6. 'இடத்தைக் கொடுத்தால் மடத்தை பிடுங்குவான்'
இறைவனுக்கு நம் உள்ளத்தில் இடத்தைக் கொடுத்தால், இறைவன் நம்மில் உள்ள மடம் அதாவது அறியாமையை வேரோடு பிடுங்கி எறிவான் என்பதே இப்பழமொழியின் உண்மையான பொருள்.
7. 'மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா'
குதிர் என்பதற்கு மேடு என்பது பொருள். ஆற்றில் தண்ணீர் குறைவாக இருக்கின்ற போது ஆற்றின் நடுவில் மேடு போன்ற பகுதி (குதிர்) தெரியும். தண்ணீர் அற்ற பகுதி என்று நினைத்து நாம் அதில் கால் வைத்தால் அந்த மேடு (குதிர்) நம்மை ஏமாற்றுவது போல் உள்வாங்கிக் கொள்ளலாம். எனவே, 'அது போன்ற மேட்டில் கால் வைக்காதே' என்பதுதான் இதன் மெய்யான பொருள். குதிர் என்பது குதிரை என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது.
8. 'ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்'
சித்த வைத்தியத்தில் வேர்தான் மூலாதாரம். பல வேர்களைப் பற்றி அறிந்து கொண்டால்தான் வைத்தியம் கற்றுக்கொள்ள முடியும். “ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்” என்று இருந்த பழமொழிதான் காலப்போக்கில் மருவி வைத்தியரைக் கொலைகாரர் ஆக்கிவிட்டது!
9. 'களவும் கற்று மற'
'களவும் கத்தும் மற' என்பதுதான் உண்மையான பழமொழி. 'கத்து' என்ற சொல்லுக்கு பொய் என்று அர்த்தமும் உண்டு. களவும், பொய் சொல்வதையும் தவிர்த்து விடு என்பதை வலியுறுத்தும் பழமொழி இது. நாளடைவில் 'களவும் கற்று மற' என்று ஆகிவிட்டது.
10. 'கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?'
கோரைப் புல்லில்தான் பாய் தைப்பார்கள். 'கழு' என்பது ஒருவகை கோரைப்புல். அந்த கழு என்ற கோரைப்புல்லைப் பயன்படுத்தித் தைக்கப்பட்ட பாயில் கற்பூர வாசனை வருமாம். இதைச் சொல்வதற்குதான் 'கழு தைக்கத் தெரியுமாம் கற்பூர வாசனை' என்று சொன்னார்கள். காலப்போக்கில் 'கழுதைக்கு' என்று ஆகி விட்டது.