
ஹாலிவுட் படங்களுக்கு, அதுவும் இயற்கைப் பேரழிவுப் படங்களுக்கு, ஒரு டெம்ப்ளேட் இருக்கும்.
அது அமெரிக்காவை மட்டுமே தாக்கும். மாட்டிக் கொள்வதில் ஒரு குடும்பம் கதாநாயகனுடையது. பலமான இரண்டு பெண்மணிகள் இருப்பார்கள். ஓர் இந்திய வம்சாவளி ஆள் இருப்பார். ஒரு கொடிய கொலைகாரன் அல்லது கடத்தல்காரன் இருப்பான். அதில் மாட்டிக் கொள்ளும் ஆள்களிலிருந்து ஒரு ஜோடி காதல் வயப்படும். நாம் எதிர்பார்க்கும் ஒரு கதாபாத்திரம் / எதிர்பார்க்காத ஒரு பாத்திரம் அகால மரணம் அடையும். எல்லாம் முடித்து வைக்க உயிரைப் பணயம் வைத்து ஹீரோ வருவார். அதற்கு அரசுத் தரப்பிலிருந்து ஒரு ஆதரவும் ஓர் எதிர்ப்பும் கண்டிப்பாக இருக்கும். விநோதமான மிருகங்கள் வந்து போகும். இவை ஒரு சாம்பிள் தான்… இன்னும் சில சேர்க்கலாம். இவை அனைத்தும் இருக்க வந்திருக்கும் ஒரு தொடர் தான் லா பிரியா.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் மத்தியில் ஒரு பெரிய பள்ளம் எழுகிறது. அதில் விழும் அல்லது அந்த விபத்தில் சிக்கிக் கொள்ளும் ஒரு கும்பல் கிறிஸ்து பிறப்பதற்குப் பத்தாயிரம் வருடங்களுக்கு முன் சென்று விடுகிறார்கள். அங்கு நடப்பவை எல்லாம் கதாநாயகனுக்கு மங்கலான காட்சிகளாக மாயத் தோற்றங்கள்போல வந்து போகின்றன. தனது குடும்பம் உயிரோடு தான் இருக்கிறது என்று நம்புகிறார்.
ஒத்த கருத்துடைய அரசு அதிகாரி ஒருவரிடம் இதைச் சொல்கிறார். அவர் தொடர்புடைய ஒரு ஆளும் இதுபோலக் காணாமல் போய்விட்டதால் ஹீரோவின் முயற்சிக்கு உதவி செய்ய ஒத்துக் கொள்கிறார்.
நாயகன் உள்ளே சென்றாரா, குடும்பத்தை மீட்டாரா, உள்ளே விழுந்தவர் கதி என்ன என்பது தான் கதை.
இந்தத் தொடரில் முக்கியமாகக் குறிப்பிடப் பட வேண்டிய ஒரு விஷயம் இதில் எழுதப் பட்டிருக்கும் பெண் கதாபாத்திரங்கள். ஹீரோயின், போலீஸ் அதிகாரியாக வரும் ஒரு பெண், டாக்டரின் மகள், பாதிக்கப்பட்ட அக்கா தங்கை பாத்திரங்கள், விஞ்ஞானி, ஆதிவாசி பெண் தலைவியென அனைவரும் மனதில் நிற்கின்றனர். கதாநாயகன், அவர் நண்பன், மகன், காவல் அதிகாரியின் மகன் என அனைவரும் இவர்கள் முன்னால் காணாமல் போகிறார்கள்.
எட்டு எபிசோட்களில் ஒவ்வொரு அத்தியாயம் முடிவிலும் ஒரு சின்னத் திருப்பம், அதில் ஏதாவது ஒரு சுவாரசியம், எனப் போரடிக்காமல் செல்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் சில பாத்திரங்கள் வலிந்து திணிக்கப் பட்டது தெளிவாகத் தெரிகிறது. பிளாக் ஹோல் பற்றிய விவரங்கள் சரியாக விளக்கப்படவில்லை.
சில பாத்திரங்களின் உறவுச் சிக்கல்கள் இப்படித் தான் முடியும் என்று முதல் பிரச்சினைகளை வைத்தே கணிக்க முடிவது ஒரு பலவீனம்… அந்தக் காலக் கதை என்பதைக் காட்டுவதற்காகச் சில பல மிருகங்களை மட்டும் கிராபிக்ஸ் செய்து உலவ விட்டுச் சமாளிக்கிறார்கள்.
ஆனாலும் முதல் காட்சியிலேயே கதைக்குள் செல்வது, நிழல் காலத்தையும், கடந்த காலத்தையும் இணைக்க இவர்கள் செய்யும் சில முயற்சிகள், அது தொடர்பான அறிவியல் விளக்கங்கள் எனத் தொடர்ந்து பார்க்க வைத்தது தான் இந்தக் குழுவின் சாமர்த்தியம். ஒளிப்பதிவு, இசை, கிராபிக்ஸ், எனச் சற்றே மெனக்கெடல் தெரிகிறது. ஆனாலும், ஒரு காட்டில் நடப்பதாக மொத்தத் தொடரையும் அமைத்த விதத்தில் புரொடக்ஷன் டிசைன் கஞ்சத் தனம் எட்டிப் பார்க்கிறது.
ரோலண்ட் எமரிச்சின் படங்கள், ஸ்பீல்பெர்க் படங்கள், ஆர்மகெட்டன் போன்ற படங்கள் பார்த்து ரசிக்கும் மக்களுக்கு இந்தத் தொடர் கண்டிப்பாகப் பிடிக்கும். டைம் வேஸ்ட் என்று சொல்ல வைக்காமல் டைம் பாஸ் ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு வார இறுதியில் இதைப் பார்த்து ரசிக்கலாம்.
சொல்ல வேண்டாம்… உங்களுக்கே புரிந்திருக்கும்… அடுத்த சீசனுக்கான லீடுடன் தான் முடிக்கிறார்கள்.