

பாலங்களும் சாலைகளும் வெறும் கான்கிரீட் அமைப்புகள் அல்ல. அவை நமது தினசரி வாழ்க்கையின் அங்கம். வேலைக்கு செல்லும் அவசரம், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், மருத்துவ அவசரத்தில் ஓடும் ஆம்புலன்ஸ் — இவை அனைத்துக்கும் உயிர்நாடி சாலைகளே.
நமது அரசாங்கம் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் மேம்பாலங்கள் அமைக்கிறது. போக்குவரத்து நெரிசல் குறைய வேண்டும், மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த வசதிகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் ஒரு கேள்வி — அந்த சாலைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதில் நமக்கு பொறுப்பு இல்லையா?
⚠ சாலை விபத்து – யாருடைய தவறு?
சாலை விபத்துகள் பெரும்பாலும் நமது அதிவேகம், அவசரம், கவனக்குறைவு ஆகியவற்றால் ஏற்படுகின்றன. ஒரு நிமிட அலட்சியம்… ஒரு குடும்பத்தின் ஆயுள் முழுவதும் துயரம் மிக்கதாக ஆக்கி விடுகிறது. விபத்தில் பாதிக்கப்படுவது ஒருவரே அல்ல. ஒரு குடும்பம். ஒரு தாய். ஒரு தந்தை. ஒரு மனைவி. ஒரு குழந்தை.
🗑 சாலை குப்பைத்தொட்டி அல்ல!
என் வீட்டிற்கு அருகிலுள்ள மேம்பாலங்களில் நான் தினமும் காணும் காட்சிகள் என்ன தெரியுமா?
சிதறிக் கிடக்கும் காலியான பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள்
ஜூஸ் பாட்டில்கள்
கிழிந்த பிளாஸ்டிக் கவர்கள்
உடைந்த மதுபான பாட்டில்கள்
பிறந்தநாள் கேக் பெட்டிகள்
பட்டாசு சிதறல்கள்
நடுரோட்டில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடுவது பெருமையா?
அடுத்த நாள் அதே வழியில் உங்கள் குடும்பம் பயணிக்க வேண்டியது நினைவிலில்லையா?
ஒரு விபத்து நடந்தால் “அரசாங்கம் சரியாக பராமரிக்கவில்லை” என்று குறை கூறுகிறோம்.
ஆனால் அந்த ஆபத்திற்கான காரணம் நாமே என்ற உண்மையை ஏன் மறக்கிறோம்?
ஒரு பிளாஸ்டிக் கவரின் விலை – ஒரு வாழ்க்கை!
முதல் விபத்து
என் தோழி ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தில் பாலத்தின் மேல் பயணிக்கும் போது, திடீரென எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு பிளாஸ்டிக் பை அவரது முன் சக்கரத்தில் மாட்டியதால், அவர் அதே இடத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். காலில் பலத்த அடியுடன் fracture ஏற்பட்டு விட்டது.
நல்லவேளை அந்த நேரத்தில் பின்புறம் எந்த வாகனமும் வரவில்லை. அதனால் அவர் உயிர் தப்பினார்.
இரண்டாம் விபத்து
என் சித்தப்பா ஒருவர் அதே போல் பாலத்தில் பயணிக்கும் போது, எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு பிளாஸ்டிக் பை அவரது முன் சக்கரத்தில் மாட்டியதால், அவர் நிலை தடுமாறி பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதி கீழே விழுந்து விட்டார்.
இந்த விபத்தால் கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் தன்னுடைய வாழ்க்கையின் 40 ஆண்டுகள் பின் சென்று அந்த நினைவுகளுடன் இன்றும் வாழ்ந்து வருகிறார். ஏதாவது ஒருமுறை தான் தற்கால நினைவு திரும்புகிறது. இதனால் அவரது குடும்பத்தார் படும் வேதனையை அளவிட்டு சொல்ல முடியவில்லை.
அந்த பிளாஸ்டிக் கவரை வீசி எறிந்தவர் இதை நினைத்தாரா?
அந்த இடத்தை சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்கள் பற்றி யோசித்தீர்களா?
நாம் ஒரு நிமிடம் கூட சிந்திக்காமல் வீசி எறியும் குப்பை, மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தாக மாறுகிறது.
நாம் வீசி எறிந்து சென்ற பொருட்கள் மழைநீர் வடிகால் குழாயில் சென்று அடைத்துக் கொண்டால், பாலம் முழுவதும் மழை நாட்களில் சகதியாக காணப்படும், விபத்துகள் அதிகரிக்கும்.
அப்போது பாதிக்கப்படுவது யார்?
நாமே.
🌱 மாற்றம் எங்கிருந்து தொடங்க வேண்டும்? நம்மிடம் இருந்து தானே?
சாலை என்பது குப்பைத்தொட்டி அல்ல.
மேம்பாலம் கொண்டாட்ட மண்டபமும் அல்ல.
வேகம் வீரத்துக்கு அடையாளம் அல்ல.
வீடாக இருந்தாலும், சாலையாக இருந்தாலும், பாலமாக இருந்தாலும் — அதை நமது சொந்த இடம் போல நேசிப்போம்.
மிதமிஞ்சிய வேகம் வாழ்க்கையை முன்னேற்றாது; அது வாழ்க்கையை முடித்து விடும்.
இளைஞர்களே…
நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள்.
நீங்கள் தான் உங்கள் குடும்பத்தின் கனவுகள்.
காலம் உங்கள் கையில் உள்ளது.
அதை பொற்காலமாக மாற்றுங்கள் —
ஒரு பொறுப்பான குடிமகனாக வாழ்ந்து காட்டுங்கள்.
சாலை நமதே. பாதுகாப்பும் நமதே. பொறுப்பும் நமதே. சாலை விதிகளை மதியுங்கள்! மகிழ்ச்சியுடன் வாழுங்கள்!