
இளம் பெண்களுக்கு லெக்கின்ஸ் பிடித்தமான உடையாக இருக்கலாம். ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் லெக்கின்ஸ் அணியும் போது பல உடல் நலப் பிரச்னைகளை சந்திக்கிறார்கள். கர்ப்ப காலத்தில் லெக்கின்ஸ் அணிவதால் ஏற்படும் உடல்ரீதியான சில சிக்கல்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1. உடல் அசௌகரியம்:
லெக்கின்ஸ் இறுக்கமான ஆடையாக இருப்பதால், கர்ப்ப காலத்தில் உடலில் இயற்கையான மாற்றங்களை கட்டுப்படுத்தி அசௌகரியத்திற்கு வழிவகுக்கும். வயிறு மற்றும் முதுகில் அழுத்தம் ஏற்படும். இதனால் கீழ் முதுகு வலி மற்றும் இடுப்பு வலி போன்றவை தோன்றும். இது 50 சதவீத கர்ப்பிணிப் பெண்களை பாதிக்கிறது.
2. சுவாசிப்பதில் சிரமம்:
இறுக்கமான லெக்கின்ஸ் மார்புப் பகுதியை சுருக்கி ஆழமான சுவாசத்தை தடுக்கிறது. இதனால் கர்ப்பிணி பெண்கள் வசதியாக சுவாசிக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள்.
3. இரைப்பை குடல் பிரச்சனைகள்:
கர்ப்பிணிப் பெண்களுக்கு சில சமயங்களில் மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும். அவர்கள் லெக்கின்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை அணியும் போது அது மலச்சிக்கல் பிரச்சனையை இன்னும் மோசமாக்கும். இரைப்பை குடல் பிரச்சனைகளை தோற்றுவிக்கும். செரிமானக் கோளாறுகள் உண்டாகும்.
4. சுருள் சிரை நாளங்கள்:
கர்ப்பிணிப் பெண்களுக்கு இரத்த அளவு அதிகரிப்பு மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக சுருள் சிரை நாளங்கள் ஏற்படும். இறுக்கமான லெக்கின்ஸ் கால்களில் ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த நிலை அதிகரிக்கும்.
5. அதிக வெப்பம்:
இறுக்கமான லெக்கின்ஸ் அணியும் போது காற்றோட்டத்தைக் கட்டுப்படுத்தி உடல் அதிக வெப்பமடையும். இது கர்ப்ப காலத்தில் மிகுந்த அசவுகரியத்திற்கு வழிவகுக்கும்.
6. சரும எரிச்சல், வீக்கம்:
பல லெக்கின்ஸ்கள் செயற்கை துணிகளால் தயாரிக்கப்படுகின்றன. அவை அதிகப்படியான வியர்வையைத் தோற்றுவித்து காற்றோட்டத்தை தடுப்பதால் சருமம் பாதிக்கப்படுகிறது. சரும எரிச்சல் அல்லது வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
7. அரிப்பு:
கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் சரும உணர்திறன் மற்றும் அரிப்புகளை அதிகரிக்க வழி வகுக்கும். லெக்கின்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகள் அணியும் போது உடலில் அரிப்புகள் இன்னும் அதிகரிக்கும். வயிறு விரிவடையும்போது தோல் நீட்டிக்கப்படுகிறது. அதனால் வயிற்றுப் பகுதி மற்றும் மார்பகங்களை சுற்றி உள்ள பகுதிகளில் மாற்றங்களும் அரிப்பு போன்ற தொந்தரவுகளும் ஏற்படலாம்.
8. சரும அழற்சி:
சில பெண்களுக்கு லெக்கின்ஸில் பயன்படுத்தப்படும் சாயங்கள் அல்லது செயற்கை இழைகள் போன்ற பொருட்களால் எதிர்வினை ஏற்படலாம். இது சருமத்தில் சிவத்தல் தடிப்புகள் போன்றவற்றை ஏற்படுத்தும்.
மாற்று வழிகள்:
இத்தனை சிரமம் தரும் ரெகுலர் லெக்கின்ஸ்களை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்த்து விட்டு, கர்ப்ப காலத்தில் அணிவதற்கு என்று பிரத்தியேகமாக உள்ள மகப்பேறு லெக்கின்ஸ் அணிந்து கொள்ளலாம். இது காற்றோட்டமாக இருக்கும். மகப்பேறு லெக்கின்சில் பெரிதாகி வரும் வயிற்றை ஆதரிக்கும் வகையில் இடுப்புப் பட்டைகளுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் இவற்றை நீண்ட நேரம் அணிவதை தடுக்கவும்.
என்னதான் லெக்கின்ஸ் பிடித்தமான உடையாக இருந்தாலும் கர்ப்ப காலத்தில் இவற்றை தவிர்த்து விட்டு, வசதியான, உடலுக்கு பொருத்தமான, சௌகரியமான இறுக்கமில்லாத, தளர்வான ஆடைகளை அணிவது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது.