பொதுவாக, மனிதர்கள் அனைவரும் ஒருவர் மேல் உள்ள அன்பை மற்றொருவருக்கு தெரியப்படுத்துவதற்கு இதயக் குறியீட்டை பயன்படுத்துவது வழக்கம். அது பார்ப்பதற்கு இதயத்தின் குறியீடு போன்று இல்லாவிட்டாலும் நாம் அனைவரும் அதுதான் இதயத்தின் குறியீடு என நம்புகிறோம். ஏன் இதயத்தை அன்பினை வெளிப்படுத்தும் குறியீடாக பயன்படுத்த வேண்டும்?
நம் தாயின் கருவறையில் கருவாக உருவாகும் போது நம் உடலில் முதன் முதலில் தோன்றும் உறுப்பு இதயம் தான். ஒரு குழந்தையின் கரு உருவாகி 4 வாரங்கள் அல்லது 24 ஆவது நாட்களில் இதயத்துடிப்பை கேட்க முடியும். மனிதர்களுக்கு மட்டுமல்ல முதுகெலும்பு உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் முதலில் உருவாகும் உறுப்பு இதயம் தான். இதயம் உருவான பின்பு தான் ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜன் மற்ற செல்களுக்கு அனுப்பப்பட்டு சருமம், எலும்பு, கல்லீரல், மூளை போன்ற உறுப்புகள் உருவாகும். அதே சமயத்தில் நச்சு பொருள்களை வெளியேற்றும் வேலையையும் இதயம் செய்கிறது.
அதே சமயம் ஒரு மனிதன் இறந்த பின் அவனது உடலில் முதலில் செயல் இழக்கும் உறுப்பும் இதயம் தான். அதனால்தான் பெரும்பாலும் ஒரு மனிதன் மயக்கத்தால் கீழே விழுந்தவுடன் முதலுதவியை இதயத்தில் செய்கிறோம். இதயத்துடிப்பை மீண்டும் கொண்டு வந்து விட்டால் மனிதனை காப்பாற்றுவதற்கான சாத்திய கூறுகள் மிகவும் அதிகம். இப்படியாக நம் உடலின் ஒட்டு மொத்த இயக்கத்தையும் கட்டுப்படுத்துவதில் இதயம் முக்கிய பங்காற்றுகிறது. நம் உடல் என்னும் ஆட்சி பீடத்தில் ஆட்சி செய்வது மூளையாக இருந்தாலும், அதற்கு சரியான ஆலோசனை சொல்லி வழி நடத்தும் முக்கிய மந்திரியாக இருப்பது நம் இதயம் என்று தான் சொல்ல வேண்டும்.
நம் உடலில் மிகவும் கடினமான, அதே சமயம் ஓய்வில்லாமல் ஒரு வேலையை செய்யக்கூடிய உறுப்பு என்றால் அது இதயம் தான். இதயம் சீரான முறையில் சுருங்கி விரிந்து உடல் முழுவதும் ரத்தக் குழாய்களின் வழியாக ரத்தத்தை எடுத்துச் செல்ல உதவுகிறது. அவ்வாறு எடுத்துச் செல்லப்படும் ரத்தம் ஆக்சிஜனையும் ஊட்டச்சத்துக்களையும் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் பிரித்தளிக்கிறது. அதே சமயம் உடலில் உருவாகும் கார்பன் டை ஆக்சைடு போன்ற கழிவுகளையும் நுரையீரலுக்கு எடுத்துச் செல்லும் வேலையையும் செல்வதற்கு காரணம் இதயம் தான்.
இதயத்துக்கு மூளைக்கும் இருக்கும் தொடர்பு மிகவும் அதிகம். பெரும்பாலும் நாம் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும் மூளையில் தோன்றும் எண்ணங்களுக்கும் எப்போதும் சிறிது முரண்பாடு இருந்து கொண்டே இருக்கும். மூளையின் செயல்பாடுகள் அறிவுப்பூர்வமாகவும், இதயத்தின் செயல்பாடுகள் உணர்வுபூர்வமாகவும் இருப்பதை நம்மால் பல நேரங்களில் எளிதாக உணர முடியும்.
நம் உடலில் மிகவும் பராமரிக்கப்பட வேண்டிய உறுப்புகளில் முதலிடத்தில் இருப்பது இதயம் என்று சொன்னால் அது மிகையாகாது. நம் உணவு பழக்க வழக்கங்களாலும், சுற்றுப்புறத்தாலும் அதிகம் பாதிக்கப்படுவது முதலில் இதயம் தான். நமது உடலின் இயக்கம் சுவாசத்தை பொறுத்து உள்ளதால், சுவாசத்தை மையமாக வைத்து செயல்படும் இதயம் தான் முதலில் எந்த வித தாக்குதலையும் எதிர்கொள்கிறது.
இன்றைய சூழலில் மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள், மற்றும் அன்றாட பழக்கவழக்கங்கள், சுற்றுச்சூழல் இவற்றின் காரணமாக இதய நோய்கள் அதிகரித்து வருகின்றன. முன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்டோர் தான் இதய நோயால் பாதிக்கப்பட்டு மாரடைப்பு, மூச்சுத்திணறல் போன்ற சிரமங்களுக்கு ஆளாகி வருபவர்களாக இருப்பார்கள். ஆனால் இப்போது எல்லாம் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் கூட இதய நோய்களால் பாதிக்கப்பட்டு மரணத்தை சந்திக்கிறார்கள்.
பெரும்பாலும் பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக இதய நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். சிலருக்கு குடும்ப மருத்துவ வரலாற்றின் படியும் இதய நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. மேலும் குறிப்பிட்ட வயதை தாண்டும்போது அந்த வயதுக்குரிய உணவு பழக்க வழக்கங்களை மேற்கொள்ளாத போதும் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
உணவு பழக்க வழக்கங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவுக்கு சுற்றுப்புற சூழலையும் சுகாதாரமாக பராமரிப்பதன் மூலமாகவே இதயத்தை பாதுகாத்து இனிமையான ஒரு வாழ்க்கையை நம்மால் வாழ முடியும்!