

பக்தைக்காகத் தன் தலையைச் சாய்த்துக் கொண்ட ஈசன்... யானைகளால் கூட நிமிர்த்த முடியாத சிவலிங்கத்தை ஒரு பக்தனின் பக்தி எப்படி நேராக்கியது தெரியுமா? சோழர் காலத்துச் சிறப்புமிக்க கும்பகோணம் திருப்பனந்தாள் காசி விஸ்வநாதர் கோவிலின் வியக்க வைக்கும் தல வரலாறும், பெண்களின் தோஷம் போக்கும் அற்புத ரகசியங்களும் உங்களை ஆச்சரியப்படுத்தும். ஆன்மீகமும் வரலாறும்சங்கமிக்கும் இக்கோவிலின் மர்மங்களை முழுமையாக அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!
கோவில் அமைவிடம்:
இக்கோவில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள திருப்பனந்தாள் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இது கும்பகோணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
கோவில் அமைப்பு:
இத்திருக்கோவிலில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக தோன்றி அருள் பாலிக்கின்றார். மேற்கில் ஏழு நிலை ராஜ கோபுரமும், கிழக்கில் ஐந்து நிலை ராஜகோபுரம், 3 பிரகாரங்களுடன் கோவில் அமைந்துள்ளது. இது சோழர் காலத்தில் கட்டப்பட்டதாகும்.
கோவிலின் சிறப்பு:
இத்திருக்கோவிலில் சித்திரை மாதத்தில் சில நாட்களில் சிவபெருமான் சிலையின் மீது சூரிய ஒளி விழும். தேவாரம் பாடல்களில் 274 பாடல்களின் 39 ஆவது தேவார ஸ்தலமாக இத்திருக்கோவில் அமைந்துள்ளது.
இங்கு சர்ப்ப தோஷம் (நாக தோஷம்), செவ்வாய் தோஷம் போன்ற தோஷங்கள் இருப்பவர்கள் இத்திருக்கோவிலில் உள்ள எம்பெருமானை வழிபடுவதன் மூலம் அந்த தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. மேலும் இத்திருத்தலம் பெண்களுக்கான தோஷ நிவர்த்தி ஸ்தலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
தல வரலாறு:
முற்காலத்தில் தாடகை என்ற பெண் ஒருத்தி இருந்தாள். அவள் மிகுந்த சிவபக்தையாக இருந்தாள். தினம்தோறும் எம்பெருமானுக்கு மலர் மாலைகளைத் தொடுத்து எம்பெருமானுக்கு சூட்டித் தன்னுடைய சிவ வழிபாட்டை தவறாது மேற்கொண்டு வந்தாள். அதேபோல் ஒருநாள் எம்பெருமானுக்கு மாலை தொடுத்து சூட்டி அணிவிக்கும் போது அவளது மேலாடை சற்றே விலகியது. அதை ஒரு கையால் சரி செய்து ஒரு கை கொண்டு மாலை போட முயன்ற போது அவளால் சிவபெருமானுக்கு மாலை சூட்ட முடியவில்லை.
எம்பெருமானுக்கு மாலை சூட்ட முடியவில்லை என்ற வெறுப்பாலும் ஆடை விலகி விட்டது என்ற சங்கடத்தினாலும் அவள் மிகுந்த மனவேதனை அடைந்து செய்வதறியாது தவித்தாள். தன்னுடைய பக்தையின் இந்த நிலையைப் புரிந்து கொண்ட சிவபெருமான் பக்தையின் அன்புக்கு இறங்கி தன்னுடைய தலையை சிறிது சாய்த்து கொண்டார். தாடகை எம்பெருமானுக்கு மாலையை சூட்டினாள்.
இவ்வாறு சிவபெருமான் தன்னுடைய பக்தைக்காக தலையை சாய்த்த பெருமையைக் கொண்டது இத்திருக்கோயில். பின் சிவபெருமானின் சாய்ந்த தலையைக் கண்ட அந்நாட்டு மன்னன் அதை நேராக வைப்பதற்காக பல யானைகளை சங்கிலியால் பிணைத்து சிவலிங்கத்தின் மீது போட்டு இழுத்தான்.
இருப்பினும் லிங்கத்தின் தலை நேராக வில்லை. அப்பொழுது அங்கு வந்த நாயன்மார்களில் ஒருவனான குங்குலிய நாயனார் மன்னனிடம் “கருணை கடலான சிவபெருமான் பக்தனின் உண்மையான பக்திக்கு மனம் இறங்குவாரே தவிர பலத்திற்கு அல்ல” என்று கூறி எம்பெருமானின் ஐந்தெழுத்து மந்திரமான "நமசிவாய" என்ற மந்திரத்தை கூறி சங்கிலியை தன் கழுத்திலும் சிவபெருமானின் கழுத்திலும் போட்டு எம்பெருமானை நினைத்து “தம்முடைய தலை நேராக வேண்டும்; இல்லை என் தலை மண்ணில் சாய வேண்டும்” என்று கூறி சிவபெருமானை இழுத்தார்.
பக்தனின் பக்திக்கு இறங்கிய எம்பெருமான் தலையை நேராகினார். இவ்வாறு எம்பெருமான் மீது பக்தன் கொண்ட தீராத பக்தியையும், பக்தனின் அன்பை ஏற்றுக்கொண்ட சிவபெருமானின் கருணையையும் இத்திருக்கோயிலில் இருக்கும் சிலைகளில் செதுக்கப்பட்டிருப்பதை நாம் காண முடியும்.
இத்தலத்தின் ஆன்மீக வரலாற்றையும் அற்புதங்களையும் அறிந்துகொள்வதன் மூலம், உங்களின் தோஷங்கள் நீங்கி வாழ்வில் புதிய நேர்மறை ஆற்றலையும் மன அமைதியையும் பெறலாம்.