

தலைமுறை இடைவெளியால் குலதெய்வம் எதுவென்று தெரியாமல் தவிக்கிறீர்களா? வாழ்வில் தொடரும் தடங்கல்களுக்கும் சிக்கல்களுக்கும் குலதெய்வ வழிபாடு அறியாததே முக்கியக் காரணமாக இருக்கலாம். உங்கள் குடும்பத்தின் குலதெய்வத்தை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி? இந்த ரகசியங்களை அறிந்து வளம் பெற தொடர்ந்து படியுங்கள்!
நாள் செய்யாததை கோள் செய்யும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும் என்பார்கள். நடக்காது என்று நினைத்த காரியங்களையும் கூட நடத்தித் தரும் தன்மை குல தெய்வங்களுக்கு உண்டு.
முன்பெல்லாம் தலைமுறை தலைமுறையாக ஒரே இடத்தில், ஒரே ஊரில் வாழ்ந்து வந்தனர். இதனால் குலதெய்வ வழிபாடு என்பது சரியாக நடைபெற்று வந்தது. ஆனால் வேலை காரணமாக ஊர் விட்டு ஊர் செல்வதும், வேறு ஒரு நாடு போய் வாழ்வதும் என இருப்பதால் குலதெய்வ வழிபாட்டை விட்டு விடுகின்றனர்.
இதனால் அடுத்த தலைமுறைக்கு தங்களுடைய குலதெய்வம் எது என்று தெரியாமலேயே போய்விடுகிறது. ஏதேனும் தடங்கல்கள், சிக்கல்கள், துன்பங்கள் வாழ்வில் நேரும்போது அவை தீர்வதற்காக ஜோதிடர்களைத் தேடி போனால் அவர்கள் முதலில் சொல்வது குலதெய்வ வழிபாட்டைத் தான்.
அதில் சிலர் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று பழைய மனிதர்களை சந்தித்து குலதெய்வத்தை கண்டுபிடித்து விடுகின்றனர்.
ஆனால் பலருக்கும் அந்தவிதமான வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படி குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் தங்களுடைய குலதெய்வத்தை கண்டுபிடித்து குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வது எப்படி?
முன்பெல்லாம் குலதெய்வத்தின் பெயர்கள் தான் குடும்பத்தில் குழந்தைகளுக்கு வைக்கும் வழக்கம் இருந்தது. பொதுவாக அழைக்கும் பெயர் ஒன்றாகவும் ஜாதகப் பெயர் ஒன்றாகவும் இருந்தாலும், ஜாதக பெயரைக் கொண்டு அறிய முயற்சிக்கலாம். ஏனெனில் ஜாதகப் பெயர்கள் பெரும்பாலும் குலதெய்வத்தின் பெயராகத்தான் இருக்கும்.
அதேபோல் குடும்பத்தின் குலதெய்வத்தை அறிந்து கொள்ள பெரியவர்களிடம் கேட்பது, ஜாதகம் பார்ப்பது மற்றும் பாரம்பரிய கிராமிய பிரார்த்தனைகள் செய்வது போன்ற எளிய வழிகள் உள்ளன.
குடும்பப் பெரியவர்கள் மூலம் அறிதல்:
நம் குடும்பத்தில் உள்ள வயதான தாத்தா, பாட்டி மற்றும் தந்தை வழி சொந்தங்களிடம் விசாரித்துப் பார்க்கலாம். தாய் வழி பெரியவர்களுக்கு அவர் திருமணம் ஆன குடும்பத்தின் குலதெய்வம் எது என்ற விபரம் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. எனவே அவர்களிடமும் விசாரித்துப் பார்க்கலாம்.
அல்லது நம் சொந்த ஊர், குலம் மற்றும் கோத்திரம் பற்றிய விவரங்களை சேகரித்து குலதெய்வத்தை பற்றி அறிந்து கொள்ள முயலலாம். இதற்கு சொந்த ஊருக்குச் சென்று அங்குள்ள முதியவர்கள் அல்லது குடும்பக் கோவில்களை விசாரிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம். முன்னோர்கள் வழிபாடு செய்த பழைய கோயில்கள் அல்லது குல வழக்கம் தெரிந்த கிராம பூசாரிகளிடம் கேட்கலாம்.
ஜோதிட முறை:
தகுதியான ஜோதிடரை அணுகி குடும்பத்தினரின் ஜாதகத்தை ஆய்வு செய்து குலதெய்வத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். தந்தை வழி வம்சாவளியைக் குறிக்கும் சூரியன் மற்றும் ஜாதகத்தில் 5 ஆம் இடம் (பூர்வ புண்ணியம்), 9 ஆம் இடம் (பித்ரு ஸ்தானம்) ஆகியவற்றை ஜோதிடர் மூலம் ஆராய்ந்து தெரிந்து கொள்ளலாம்.
பாரம்பரிய கிராம பிரார்த்தனை முறை:
குலதெய்வம் முற்றிலும் அறியாமல் இருந்தால், செவ்வாய்க்கிழமை அன்று நீர்நிலை அல்லது தோட்டத்தில் இருந்து சிறிதளவு களிமண் எடுத்து வந்து அதனை சிறிய பிரமிட் வடிவம் செய்து தட்டில் வைக்கவும்.
அதைக் குலதெய்வமாக நினைத்து சந்தனம், குங்குமம் இட்டு, மலர் சூட்டி தினசரி மனதார வேண்டிக் கொள்ள தெய்வம் பற்றிய தரிசனமோ அல்லது நிஜமான வழியோ தெரிய வரும்.
குலதெய்வம் யார் என்பது தெரிந்து விட்டால், அந்த களிமண் பொம்மையை எப்போது குலதெய்வ ஆலயத்துக்கு செல்வோமோ அப்போது அதை ஆலயத்துக்கு எடுத்துச் சென்று அங்குள்ள மரத்தின் அடியில் வைத்துவிட்டு பிரார்த்தனையை நிறைவு செய்த பின்பு திரும்பலாம். அதுவரை அந்தக் களிமண்ணால் செய்த உருவமே நம் குலதெய்வம் என்பதை மனதார நம்பி பூஜிக்க வேண்டும். இப்படி பிரார்த்தனையை துவங்கிய சில தினத்திலேயே நம் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகளும் குழப்பங்களும் குறையத் துவங்குவதை நம்மால் கண்கூடாக பார்க்க முடியும்.
நமக்கோ அல்லது நம் குழந்தைகளுக்கோ எங்கு முதன்முதலாக முடி காணிக்கை (மொட்டை) செலுத்தினீர்கள் என்பதை நினைத்துப் பார்த்தால், அந்த ஊரில் இருக்கும் கோயிலும் தெய்வமும் குலதெய்வமாக இருக்க வாய்ப்புள்ளது.
வெள்ளிக்கிழமைகளில் வீட்டின் பூஜை அறையில் குலதெய்வத்தை மனதில் நினைத்து தீபம் ஏற்றி, "எங்கள் குலதெய்வம் யார் என்று எங்களுக்குக் காட்டுங்கள்" என்று மனதார வேண்டிக் கொள்ளலாம். நிச்சயம் வழி பிறக்கும்.
சிலர் குலதெய்வம் எதுவென்று தெரிந்தும் வழிபாடு செய்யாமல் இருப்பார்கள். இது மிகவும் தவறு. எனவே வருடத்திற்கு ஒரு முறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்துக்கு செய்ய வேண்டிய அபிஷேகம், ஆராதனைகளைச் செய்து வழிபட குலம் தழைக்கும். வாழ்வில் பிரச்சனைகள் நீங்கி சந்தோஷம் நிலைக்கும். வீட்டில் திருமணம், குழந்தை பிறப்பு போன்ற விசேஷங்கள் வரும்பொழுது மறக்காமல் குலதெய்வத்தைச் சென்று வணங்கி வழிபட வாழ்வில் என்றும் சந்தோசம் நிலைக்கும்.
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம். குடும்பத்தின் வேர்களைத் தேடித் கண்டறிந்து, முன்னோர்களின் ஆசியுடன் தடையற்ற வாழ்வையும், வம்ச விருத்தியையும், நிம்மதியான மனநிறைவையும் உடனடியாகப் பெறலாம்.