
விருந்தும் மருந்தும் மூன்று நாள்!
இந்த பழமொழியை நாம் எல்லோருமே கேட்டிருப்போம். முன்னோர்கள் எதற்காக இவ்வாறு கூறினார்கள் ? இதற்கான ஒரு சில விளக்கங்களை இப் பதிவில் பார்க்கலாம்..
உறவினர், நண்பர், மிக மிக நெருங்கிய உறவினர், என யார் வீட்டிற்கும் நாம் விருந்தோம்பலுக்கு சென்றால் மூன்று நாட்களுக்கு மேல் தங்கினால் நமக்கு மரியாதை இருக்காது என்று அப்போதே நம் முன்னோர்கள் கூறி விட்டார்கள்.
அதைப் போல உடல் நிலை சரியில்லை என்றால் அந்த நாட்களில் வீட்டிலேயே பாட்டி வைத்தியம் முறையை தான் கையாண்டார்கள். வீட்டிலியே இருக்கும் மூலிகை பொருட்களையும் மிளகு, சீரகம், இஞ்சி, மஞ்சள் போன்ற பொருட்களையும் உடல்நிலையில் இருக்கும் பிரச்சனைகளுக்கு உகந்தவாறு சேர்த்து மருந்துகளை தயாரித்து மூன்று நாட்களுக்கு மூன்று வேளை வீதம் என கொடுப்பார்கள். பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை மூன்று நாட்களில் நன்றாக குணமாகிவிடும். அப்படி ஒருவேளை மூன்று நாள் ஆகியும் சரியாக வில்லை என்றால் தான் மருத்துவரை நாடுவார்கள். முக்கால் வாசி பேருக்கு மூன்று நாட்களிலேயே குணமாகி விடும். ஆகவே தான், விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்று கூறினார்கள்.
இன்னொரு விளக்கத்தில் சித்த மருத்துவர்களின் கருத்துப் படி...
ஞாயிறு, செவ்வாய், வியாழன் - இவை மூன்றும் சூரிய நாட்கள்.
திங்கள், புதன், வெள்ளி - இவை மூன்றும் சந்திர நாட்கள்.
சனி - பொது நாள்.
சந்திர நாட்களில் விருந்தும், சூரிய நாட்களில் மருந்தும் எடுத்து கொள்ள வேண்டும் என்று சித்த மருத்துவர்கள் வலியுறுத்தினர்.
சந்திர நாட்களில் விருந்துண்டால் ஜீரணமாவது எளிது. அதைப் போல மருந்து உட்கொள்பவர்கள் சூரியன் நாட்களாகிய ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் இந்த மூன்று நாட்களில் எதாவது ஒரு நாளில் மருந்தை எடுத்து கொள்ள ஆரம்பிக்கலாம் என்பதே அவர்களின் கருத்தாக இருந்தது.
இதைத் தான் விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு என்று கூறினார்கள்.
விருந்தும் மருந்தும் மூன்று நாள், அப்போ இருந்தது... இப்போ?
இப்போதைய நிலையில் விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்ற பழமொழி ஒத்து போகுமா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லவே இல்லை என்பது தான் பதில்.
இப்போதெல்லாம் மருந்தை பொறுத்த வரையில் ஒரு காய்ச்சல் வந்தால் கூட குறைந்த பட்சம் ஐந்து நாட்களுக்கு மருந்து எடுத்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. மூன்று நாட்கள் கணக்கெல்லாம் எப்போதோ மறைந்து விட்டது. எப்போது உணவுப் பொருட்களும் காய்கறிகளும் பழங்களும் செயற்கை முறையில் தயாரிக்கப் பட்டனவோ அப்போதே நம் உடல் நிலையும் இயற்கைக்கு ஒத்துழைக்காமல் போய் விட்டது.
அடுத்தபடியாக விருந்தை பொறுத்த வரையில் யாருக்கு இப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறது உறவினர்கள் வீட்டிற்கு செல்வதற்கு?
திருமணமோ இல்லை வேறு எதாவது function க்கு போனால் கூட எல்லோரும் தன் வசதிக்கு ஏற்றவாறு லாட்ஜிலோ அல்லது function நடக்கும் ஹாலிலோ அல்லது மண்டபத்திலியே தங்கி விட்டு திரும்பி விடுகிறார்கள். இப்போதெல்லாம் எல்லா சடங்குகளையும் ஒன்றாக சேர்த்து மண்டபத்திலேயே செய்து விடுகிறார்கள்.
ஆக மொத்தத்தில் விருந்துக்கெல்லாம் யாரும் இப்போது முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எப்போதாவது இஷ்டமிருந்தால் சென்று விட்டு ஒரு வேளை சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு bye என்று சொல்லி விட்டு வந்து விடுகிறோம். விற்கும் விலை வாசியை பார்த்தால் விருந்தை பொறுத்த வரையில் ஒரு நாளே அதிகமாக தோன்றுகிறது!