

உமா, அம்மாவின் மூன்றாவது குழந்தை. பிறந்தது முதல் அம்மாவை விடமாட்டார். பள்ளிக்குப் போகவும் அடம் பிடிப்பார். சில சமயம் பள்ளி ஆசிரியரே வீட்டிற்கு வந்து அழைத்துச் செல்வார்.
எப்படியோ ஐந்தாவது முடித்துவிட்டார். ஆனால், ஆறாவது வகுப்பிற்குப் போகவும் அடம் பிடித்தார். வேறு காரணம் இல்லை; அம்மாவை விட்டுப் போக விரும்பவில்லை. அம்மா என்றால் உமாவிற்கு உயிர்.
எப்படியோ உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டார். இப்போதும் அம்மாவை விட்டு இருக்க அவர் விரும்பவில்லை.
கல்யாணம் நடந்தது. அவர் வருத்தத்தில் இருந்தார், அம்மாவை விட்டுப் போக வேண்டுமே என்று. ஆனால், சொந்த ஊரிலேயே மாப்பிள்ளை கிடைத்தார். அவர் புகுந்த வீட்டில் அவருக்கு மரியாதை இல்லை. கணவர் அனுசரணையாக இருந்தார். ஆனால் மாமியார் மற்றும் இரண்டு நாத்தனார்கள் உமாவைக் கொடுமைப்படுத்தினார்கள். சமயம் கிடைக்கும் போதெல்லாம் அம்மா வீட்டிற்கு வந்துவிடுவார் உமா. அவருக்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள்; ஒரு ஆண், ஒரு பெண். அம்மாதான் இரண்டு பிரசவமும் பார்த்தார். அம்மா வீட்டிற்கு வந்தால் சந்தோஷமாக இருப்பார்.
அம்மா உடம்பு முடியாமல் ஒரு தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். உமா மிகுந்த கவலை அடைந்தார். மூன்று நாட்கள் கழித்து டாக்டர் உமாவின் சகோதரரிடம், "ஒரு சிறுநீரகம் வேலை செய்யவில்லை, மற்றும் இன்னொரு சிறுநீரகம் 50 சதவீதம் மட்டுமே வேலை செய்கிறது. புதிய சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் வைக்க வேண்டும். இங்கு சிறுநீரகம் இல்லை; நீங்கள்தான் ஏற்பாடு செய்ய வேண்டும்," என்று கூறினார்.
உமா மிகுந்த கவலை அடைந்தார். அவர் டாக்டரிடம், "டாக்டர், நான் எனது சிறுநீரகத்தைத் தானம் செய்யலாம் அல்லவா?" என்று கேட்டார்.
"உங்களுக்குச் சர்க்கரை, அதிக ரத்த அழுத்தம் அல்லது வேறு நோய் ஏதேனும் இருக்கிறதா?"
"இல்லை டாக்டர்!"
"சரி, உங்கள் உடல்நலம் குறித்து அறிய மூன்று நாட்கள் நீங்கள் அட்மிட் ஆக வேண்டும். உங்கள் சிறுநீரகத்தைச் சோதனை செய்து பார்க்க வேண்டும்!"
"சரி டாக்டர்!"
வீட்டில் இதைச் சொன்னதும் பெரிய கலவரமே நடந்தது. "நீ யார் முடிவு எடுக்க?"
"இது என் அம்மா உயிர் பிரச்னை. நான் முடிவு எடுப்பதில் எனக்குப் பரிபூரண உரிமை உள்ளது!" என்று சொன்னார். உமா இப்படிப் பேசி அவர்கள் பார்த்ததே இல்லை. உமா தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
"நான் வருகிறேன்!" என்று சொல்லிவிட்டு மருத்துவமனை வந்து அட்மிட் ஆனார். எல்லா பரிசோதனைகளும் எடுக்கப்பட்டன. சிறுநீரகத்தைச் ஸ்கேன் செய்து பார்த்தார்கள்.
"மேடம், நீங்கள் சிறுநீரகம் தாராளமாகத் தரலாம். உங்கள் ஒரு சிறுநீரகம் 95 சதவீதம் வேலை செய்கிறது. நீங்கள் ஒரு கடிதத்தில் எழுதித் தர வேண்டும்!"
"சரிங்க டாக்டர்!"
அம்மாவைப் பார்த்துக் கலங்கிப் போனார். 'நாளை அறுவை சிகிச்சை... எனக்கும் என் அம்மாவிற்கும்!'
அறுவை சிகிச்சை நன்றாகவே நடந்தது. உமா சீக்கிரம் சுய நினைவுக்கு வந்தார். உடனே அவர் நர்சிடம் கேட்டது, "என் அம்மா எப்படி இருக்கிறார்?"
"அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது. இன்னும் சில மணி நேரங்களில் அவர் சுயநினைவு பெறுவார். கவலைப்பட ஒன்றும் இல்லை!"
மாலை அம்மா கண் திறந்தார். எதிரே மகனும், மகளும் இருந்தனர். உமா சிறுநீரகம் தானம் செய்ததை அவரிடம் சொல்லவில்லை. ஆனால், டாக்டர் கூறிவிட்டார்.
"உமா, நான் வாழ்ந்தாச்சு. நீ ஏன் உன் சிறுநீரகத்தைத் தானம் செய்தாய்?"
"அம்மா, அதைப்பற்றி எல்லாம் நீங்கள் யோசிக்க வேண்டாம்! நாளை மறுநாள் நீங்கள் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவீர்கள். எதற்கும் கவலைப்படாதீர்கள்!"
அம்மா அழுதார்; விம்மி விம்மி அழுதார். அவர் அழுதுகொண்டே சொன்னது...
"உமா...!"
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here