

திருமுருகன் - வள்ளி தம்பதி தீவிர சிவபக்தர்கள். திருமணம் முடிந்து பல வருடங்கள் கழிந்து இறையருளால் பிறந்த மகனுக்கு சிவநேசன் என்று பெயரிட்டனர்.
எந்நேரமும் கோயில், பூஜை, விரதம் எனப் பெற்றோர் இருக்க தற்குறியாய் வளர்ந்தான் சிவநேசன். மகனின் போக்கு சற்றே கவலையளித்தாலும் நாளடைவில் ஈசன் அருளால் சரியாகிவிடுவான் என நம்பினர்.
அன்று பிரதோஷம், சிவன் கோயில் சென்று வழிபட்டு வீடு திரும்பினர் வள்ளியும், திருமுருகனும்.
"என்னடா மகேசா திடீர்னு வந்து நிக்குற? வள்ளி உள்ள போய் கைகால் கழுவிட்டு மகேசுக்கு மோரும் எனக்குத் தண்ணீரும் கொண்டு வாயேன்."
வள்ளி உள்ளே போவதற்காகக் காத்திருந்த மகேஸ்வரன்...
"இங்க பாரு திரு, பூஜை, புனஸ்காரம், விரதங்களையெல்லாம் கொஞ்சம் தள்ளி வச்சிட்டு சிவநேசனைக் கவனிடா. பத்தாம் வகுப்பு கூடத் தாண்டல.... அவனோட சேர்க்கை எதுவும் சரியில்லை. கெட்ட சகவாசம்... சிகரெட் பிடிக்கிறான்னு காத்து வாக்குல தகவல் வந்துச்சு."
"என்னடா என்னென்னவோ சொல்லுற, அதெல்லாம் உண்மையா இருக்காதுடா. எதுன்னாலும் நாங்க கும்பிடற ஈஸ்வரன் கை விட மாட்டார்டா."
"மக்கள் சேவையே மகேஸ்வரன்சேவை. கேள்விப்பட்டிருக்கதான. ஒரு குடும்பத் தலைவன் மொதல்ல தன்னுடைய குடும்பம் மற்றும் குழந்தைகளைப் பேணும் வேலையை ஒழுங்காகச் செய்யணும். அதைத்தான் கடவுளும் விரும்புவார்."
வள்ளி கொண்டு வந்து கொடுத்த மோரைக் குடித்துவிட்டு நகர்ந்தார் மகேசன்.
இது நடந்து சில தினங்கள் கழித்து வீட்டில் அடிக்கடி பணம் காணாமல் போனது. அன்று பூஜைக்கு சாமான்கள் வாங்கித் திரும்பும் வழியில் சிவநேசன் சிகரெட் பிடிப்பதை திருமுருகனே பார்த்துவிட்டார்.
கையும் களவுமாக பிடிபட்டவனை வீட்டுக்கு இழுத்து வந்து அடி வெளுத்து வாங்கினார். "ஏண்டா கேடு கெட்டவனே... சதா சர்வ காலமும் ஈஸ்வரன் நெனைப்பாவே இருக்குற எங்களுக்குப் பொறந்துட்டு உன் புத்தி எப்படிடா இப்படிப் போகுது. இதுக்கு என் வயிறு பொறக்காமலே இருந்திருக்கலாம்." கதறினாள் வள்ளி.
அன்று இரவே பீரோவில் உள்ள இரண்டு பவுன் சங்கிலியை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி இருந்தான் சிவநேசன்.
மகேஸ்வரனின் உதவியுடன் மகனைத் தேடிக் கண்டுபிடித்த போதுதான் அவன் போதைப்பொருள் எடுத்துக் கொள்ளத் தொடங்கியிருந்தது தெரிந்தது. இடிந்து போயினர் பெற்றோர்.
"ஈஸ்வரா நீயே கதின்னு இருந்தோமே... எங்களைக் கைவிட்டுட்டியே..." அரற்றினான் திருமுருகன். புத்தி பேதலித்த நிலையில் இருந்தாள் வள்ளி. அமர்ந்த நிலையிலேயே தங்களை அறியாமல் அவர்கள் விழிகள் மூட.
"மகனே முருகா... அன்று உன் நண்பன் எச்சரிக்கையாய்ச் சொன்னானே. ஏன் உன் மகனை கவனிக்காமல் விட்டாய்? ஆமா நீயே போதையிலே இருக்கறப்போ... மகனை எப்படிக் கவனிக்க முடியும்?"
"என்னைப் பார்த்து இப்படி அபாண்டமாகச் சொல்ல உனக்கு எப்படி மனசு வந்தது ஈஸ்வரா... சதா சர்வ காலமும் உன்னைத் தவிர வேறு சிந்தனையே இல்லாமத்தானே இதோ பையனை போதைக்குத் தொலைச்சிட்டு நிற்கிறோம்?"
"அதைத்தான் சொல்கிறேன் மகனே. உங்க ரெண்டு பேருக்கும் அதீத பக்தி போதை. உங்க பையனுக்கு கவனிப்பார் இல்லாம தொற்றின பொருட்களின் போதை. இனியாவது பார்த்து நடந்துக்க... எல்லாம் சீக்கிரமே சரியாயிடும்."
மறுநாள் சிவநேசனை போதை மீட்பு சிகிச்சைக்காக மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்த திருமுருகன் - வள்ளி, மகனைக் கண்ணும் கருத்துமாக கவனிப்பதை தங்கள் பக்தியின் சமபங்காக்கினர்.
அளவுக்கு மிஞ்சும் பக்தியும் போதைதான். கவனம் மக்களே!