உலகில் பெண்கள் மட்டுமே வாழும் ஒரே கிராமம் ‘உமோஜா’! அதன் பின்னால் இருக்கும் சோகக் கதை!

Umoja Village
Umoja Village

கென்யாவின் தலைநகரான நைரோபியிலிருந்து 380 கிலோமீட்டர் தொலைவில் சம்பூர் பகுதியில் அமைந்திருக்கும் உமோஜா (Umoja) எனும் கிராமத்தில் பெண்கள் மட்டுமே வசிக்கின்றனர். இது உண்மை. உண்மையைத் தவிர வேறு எதுவும் இல்லை.

பெண்களுக்கு எதிரான வன்முறையில் உயிர் பிழைத்து வீடற்றுப் போன பெண்கள், சம்பூர் இனப் பெண்களில் கட்டாயத் திருமணம் அல்லது பெண் பிறப்புறுப்பு சிதைவு ஆகியவற்றுக்கு உடன்படாமல் வீட்டிலிருந்து வெளியேறிய இளம் பெண்கள், அனாதைப் பெண்கள் என்று இந்தக் கிராமம் முழுவதும் பெண்கள் மட்டுமே இருக்கின்றனர்.

இந்தக் கிராமம் உருவானதில் ஒரு சோகமான வரலாறும் இருக்கிறது.

ம்பூர் இனப் பெண்கள் தங்கள் சமூகத்தில் கீழ்நிலையிலேயே இருந்து வந்திருக்கின்றனர். இப்பெண்களுக்கு அவர்கள் சமூகத்தில், நிலம் அல்லது கால்நடைகள் போன்ற பிற வகையான சொத்துக்களைச் சொந்தமாக வைத்திருக்க அனுமதியில்லை. பெண்கள், அவர்களது கணவரின் ஒரு சொத்தாகவேக் கருதப்படுகிறார்கள். இச்சமூகத்தில் பெண் பிறப்புறுப்புச் சிதைவு, பெரியவர்களுடன் கட்டாயத் திருமணம், கற்பழிப்பு மற்றும் குடும்ப வன்முறைக்கு உட்படுத்தப்படுதல் போன்றவை சாதாரணமாக இருந்து வந்தன.

இந்நிலையில், 1990 ஆம் ஆண்டில் இவ்வினப் பெண்களில் பலர் பிரித்தானிய இராணுவத்தினரின் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர். பிரித்தானிய இராணுவத்தினரால் பாதிக்கப்பட்ட பெண்களை இச்சமூகத்தினர் அசுத்தமானவர்கள் என்று ஒதுக்கினர். அப்பெண்களின் கணவர்கள், அவர்களை ஏற்க மறுத்து வீட்டை விட்டு வெளியேற்றினர்.

வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட பெண்களில் ஒருவரான ரெபேக்கா லோலோசோலி என்பவர், தன்னைப் போலவே வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட மேலும் 14 பெண்களைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு, தங்களுக்கான வீடுகளைத் தாங்களே உருவாக்கி, தங்களுக்கென்று ஒரு கிராமத்தை உருவாக்கத் திட்டமிட்டார்.

சம்பூர் இனப் பெண்களுக்குச் சொத்து வாங்கும் உரிமை அளிக்கப்படாத நிலையில், அவர்களது கிராம உருவாக்கத்திற்கான முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. ஆண்கள் பயன்பாட்டிலில்லாத ஒரு இடத்தைக் கண்டறிந்து, அந்த இடத்திற்குச் சென்று அவர்கள் ஒற்றுமையாக வசிக்கத் தொடங்கினர். அவ்விடத்திற்கு, ‘ஒற்றுமை’ என்று பொருள் தரும் சுவாஹிலி மொழிச் சொல்லான ‘உமோஜா’ எனும் பெயரையும் வைத்தனர்.

அப்பகுதியில் அவர்கள் விவசாயம் செய்ய நினைத்த போதும், அவர்களுக்கு விவசாயம் செய்யத் தெரியாததால், அப்பணியைச் செய்ய முடியவில்லை. எனவே, அவர்கள் அருகிலிருந்த விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை வாங்கி விற்கத் தொடங்கினர். ஆனால், அதில் அவர்களுக்குத் தேவையான வருமானம் கிடைக்கவில்லை. எனவே, அத்தொழிலைக் கைவிட்டனர்.

அதன் பின்னர் அவர்கள், அப்பகுதிக்குச் சுற்றுலா வரும் பயணிகளுக்கு, தங்களது மரபு வழியிலான கைவினைப் பொருட்களைச் செய்து விற்பனை செய்யத் தொடங்கினர். அதில் கிடைத்த வருமானம் அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பின்பு, அவர்களது தொழில்களுக்கு உதவியாக, கென்யா அரசின் மரபு வழிச் சமூக சேவைகள் மற்றும் பண்பாட்டு அமைச்சகத்தின் உதவி கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்கள் கிராமம் சிறிது முன்னேற்றம் கண்டது.

க்கிராம்ம் பற்றிய தகவல்களை அறிந்த ஐக்கிய நாடுகள் அவை, 2005 ஆம் ஆண்டில் இக்கிராமத்தின் தலைவியான ரெபேக்கா லோலோசோலியை ஐக்கிய நாடுகள் அவைக்கு அழைத்துச் சிறப்பித்தது. அதன் பின்பே, உலகில் பெண்கள் மட்டுமே வாழும் தனிக்கிராமம் உமோஜா இருப்பது உலகத்திற்குத் தெரிய வந்தது.

ரெபேக்கா லோலோசோலி ஐக்கிய நாடுகள் அவைக்குச் சென்று வந்ததை ஏற்க முடியாத சம்பூர் இன ஆண்கள், உமோஜா கிராமத்தை மூட வேண்டுமென்று அங்கிருந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 2009 ஆம் ஆண்டில் இக்கிராமத் தலைவியான ரெபேக்கா லோலோசோலியின் முன்னாள் கணவர் அக்கிராமத்திலிருந்த அனைவரையும் தாக்கி, அங்கிருந்தவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தார்.

அவரது அச்சுறுத்தலுக்குப் பயந்த அக்கிராமத்திலிருந்த பெண்கள் அனைவரும் அக்கிராமத்தை விட்டு வெளியேறிச் சென்றனர். சிறிது காலம் கழித்து திரும்பி வந்தனர்.

இதையும் படியுங்கள்:
மரணத்தின் ஒத்திகையைப் பார்க்கும் மகளிரினம்!
Umoja Village

ற்போது அந்தக் கிராமத்தின் நிலம் முழுவதும் அந்தப் பெண்களுக்குச் சொந்தமானதாக இருக்கிறது. 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, மேய்ச்சல் நிலத்தின் மீது சமூக உரிமைக்கான அக்கிராமத்துப் பெண்களின் விண்ணப்பம் கென்ய அரசின் பரிசீலனையில் இருந்து வருகிறது.

இக்கிராமத்திலிருக்கும் பெண்கள், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், குடும்பத்தால் கைவிடப்பட்ட பெண்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் பல்வேறு செயல்களைச் செய்து வருகின்றனர். வீட்டை விட்டு வெளியேறிய பெண்கள் மற்றும் சிறுமிகள், வன்முறைகளிலிருந்து தப்பி வரும் பெண்கள், அனாதைப் பெண்கள், கைவிடப்பட்ட குழந்தைகள், எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளான குழந்தைகள் போன்றவர்களை இக்கிராமத்துப் பெண்கள் தங்களுடன் சேர்த்துக் கொள்கின்றனர்.

க்கிராமத்தில் வசிக்கும் பெண்கள் அனைவரும் சம்பூர் இன மக்களின் வழக்கப்படியிலான மரபு வழி ஆடைகள் மற்றும் அணிகலன்களைக் கட்டாயமாக அணிந்து கொள்ள வேண்டும். இக்கிராமத்தில் பெண் உறுப்புச் சிதைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் புகைப்பிடித்தல் கூடாது, இக்கிராமத்தில் ஆண்கள் தங்கியிருக்க அனுமதி இல்லை. இக்கிராமத்தில் வளர்க்கப்படும் சிறுவர்கள் பதினெட்டு வயதானதும், இக்கிராமத்தை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று சில கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.

2005 ஆம் ஆண்டில் இக்கிராமத்தில் 30 பெண்கள், 50 குழந்தைகள் இருந்தனர். 2015 ஆம் ஆண்டில் 47 பெண்கள் மற்றும் 200-க்கும் அதிகமான குழந்தைகள் இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை மேலும் சிறிது அதிகரித்திருக்கக் கூடும். இக்கிராமத்திலிருக்கும் குழந்தைகள் படிப்பதற்காக, 50 பேர் கல்வி கற்கக்கூடிய தொடக்கப்பள்ளி ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

இக்கிராமத்தில் வசிப்பவர்கள் பெண்களின் உரிமைகளை மேம்படுத்தவும், பெண் உறுப்புச் சிதைப்புக்கு எதிராகப் பரப்புரை செய்யவும் மற்ற கிராமங்களுக்குச் செல்கிறார்கள்.

இக்கிராமத்திலிருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய நிலையில், ரெபேக்கா லோலோசோலி தலைமையில் ஒரு மரத்தடியில் கூடிக் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்கின்றனர். இந்த மரத்தினை அவர்கள், தங்களுக்கான பேச்சு மரம் என்றழைக்கின்றனர். இங்கிருக்கும் அனைத்துப் பெண்களுக்கிடையே உயர்வு, தாழ்வு என்று எந்த வேறுபாடுகளும் பார்க்கப்படுவதில்லை. இங்கிருக்கும் அனைவரும் ஒருவருக்கொருவர் சமமானவர்களாகவேக் கருதப்படுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com