
-உமா கண்ணன், பெங்களூரு
நான் இப்போது வடாம் போடுவதில் இந்த அளவுக்கு எக்ஸ்பர்ட் ஆனதற்கு முக்கியமான காரணக் கர்த்தா என் மாமியார்தான். அவரும் வடாம் நிபுணிதான்! தானே மாவு மிஷினுக்குப் போய் பதமாக மாவு அரைத்து வருவார். அம்மியில் பச்சை மிளகாயும் உப்பையும் வைத்து ஓட்டி ஓட்டி நைஸாக அரைத்து, மாவுடன் கலந்து கிளறி எடுத்துக்கொள்வார்.
அகலமான பிளாஸ்டிக் ஷீட், விதவிதமான முறுக்கு அச்சுகளுடன் எதிர்வீட்டு மொட்டை மாடிக்கு ஏறும்போது அவர் முகத்தைப் பார்க்கணுமே... கல்பனா சாவ்லா கெட்டார் போங்க!
புளிப்பும் காரமும் நிறைந்த வடாம் மாவை வீட்டில் எல்லோரும் அல்வா மாதிரி சாப்பிடுவார்கள். ஆஃபீஸுக்குப் போன பேத்திக்கும் தனியாக ஒரு எவர்சில்வர் கிண்ணியில் வடாம் மாவு பத்திரப் படுத்திவைப்பார். எங்கள் வீட்டில் எல்லா சைசிலும் தேங்குழல் பிடிகள் உண்டு. ஒரே ஒரு உள்ளே போடும் குழலும் அதற்கு வெளியே போட தனித்தனியாக ஓமப் பொடி, தேன்குழல், முள்ளுத்தேன் குழல், ரிப்பன், கட்டை வடாம் குழல்களும் கொண்டது. இந்தப் பிடிக்கு 'பஞ்சபாண்ட வாள்' என்று பெயர் சொல்லுவார்.
ரிப்பன் அச்சின் நடுவில் டிசைன் மாதிரி இரண்டு கோடுகள் வந்தால், அதற்கு 'வைர முடி' என்கிற நாமம். வெகு இலகுவாகப் பிழியவரும் எங்கள் வீட்டுப் பிடியை வாங்கி உபயோகப்படுத்தின யாராவது "உங்கள் வீட்டுத் தேங்குழல் பிடி ரொம்ப நன்றாக இருந்தது" என்று சொல்லி விட்டால் போதும்.
அடுத்த முறை ஸ்ரீரங்கம் கோயில் கடையிலிருந்து அன்னாருக்கு தேங்குழல் பிடி சப்ளை செய்யப்பட்டு விடும். தன் மகள்கள், மருமகள்கள், பேத்திகள், பேரன் மனைவிகள் என்று அனைவருக்கும் ஆசை ஆசையாய் தேங்குழல்பிடி வாங்கிக் கொடுப்பார் என் மாமியார்.
வடாம் போட்ட மறுநாள், காய்ந்த வடாமைப் பொரித்துப் பார்க்கும் வைபவம் நடக்கும். வெள்ளை வெளேரென்று நீல வானில் தோன்றும் நிலா போல, வடாம் சீறிப் பொரிந்து மேலே வரும்போது, நான் எப்போது இதெல்லாம் செய்யக் கற்க போகிறேன் என்ற ஏக்கம் தோன்றியதுண்டு.
ஒருமுறை வடாம் சீசனில் பேத்தியின் பிரசவத்துக்கு அவர் ஊருக்குச் சென்றுவிட எனக்கு வடாம் போடும் ஆசை பிறந்தது. ஜவ்வரிசி வடாம்தான் ஈஸி. கஞ்சி மாதிரி காய்ச்சிவிட்டு, கரண்டிக் கரண்டியாய் ஊற்ற வேண்டியதுதானே என்று எண்ணி அரைக்கிலோ ஜவ்வரிசியைக் கிளறி கரண்டியால் வட்டவட்டமாய் ஊற்றி விட்டு வந்தேன். மாலை நாலு மணிக்குக் கண்ணாடிபோல இருக்க வேண்டிய வடாம் கறுத்து காணப்பட்டது. அப்போதுதான் நான் எலுமிச்சம்பழம் பிழிய மறந்தது நினைவுக்கு வந்தது.
அடுத்த முறை ஜவ்வரிசி வடாம் போட்டபோது நல்ல புளிப்பும் காரமும் உப்பும் இருக்கட்டுமென்று அரைகிலோ ஜவ்வரிசிக்கு நாலு எலுமிச்சம் பழத்தின் சாறை 'ஜலஜல' என்று பிழிந்தேன். வெள்ளை வெளேரென்று காய்ந்து கிடந்த வடாமைப் பார்த்து மனசு சந்தோஷப் பட்டது. அரைகுறையாய்க் காய்ந்த வடாத்தை அவசர அவசரமாகப் பொரித்தேன். என் சந்தோஷம் அரைநிமிஷம்கூட நீடிக்கவில்லை. பற்களில் பிசின்போல ஒட்டிக்கொண்ட வடாமை எடுக்க, படாத பாடுபட்டு நாக்கு புண்ணானதுதான் மிச்சம்.
பலமுறை படை எடுத்த கஜினி முகமது மாதிரி ஒவ்வொரு முறையும் எதாவது ஒரு தவறு செய்தே வடாம் போட கற்றேன். ஏப்ரல் மாதத்துக்குள் வடாம் போட்டுவிட வேண்டும். சித்திரைக்குப் பிற்பாடு போட்டால் காற்று குப்பையைக் கொண்டுவந்து கொட்டும்.
ஒரே நாளில் ஒரு கிலோ மாவு கிளறி வடாம் போட்டு கை வலியால் அவஸ்தை படுவதைவிட, இரண்டு தம்ளர் ஜவ்வரிசி அல்லது இரண்டு தம்ளர் மாவு வீதம் கிளறி, ஒரு நாள் விட்டு ஒரு நாள் வடாம் போட்டால் சுலபமாக இரண்டு அல்லது மூன்று கிலோ மாவுக்கு வடாம் போடலாம். இதெல்லாம் அனுபவத்தில் நான் கற்ற வடாம் பழி பாடங்கள்.
இப்போது எனக்கு முன்னால் யாராவது மாடியில் வடாம் போட்டால், வகுப்பில் புதியதாய் வந்த மாணவி, முதல் மார்க் வாங்கினால் ஏற்படும் பொறாமை வருகிறது. மறுநாள் எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும் விழுந்தடித்துக் கொண்டு வடாம் போட்டுவிடுவேன். போட்ட வடாம் சீறிப் பொரிந்து, வெண்மை நிறத்துடன் நீல வானத்து நிலா போல மேல் எழும்பி வரும்போது, என் மனசு எனக்குக் கொடுக்கும் பட்டம் என்ன தெரியுமா? 'வாரே வாவ் வடாம் ராணி!'