

சிவகங்கைச் சீமையிலே பிறந்து வளர்ந்த வேலு நாச்சியார்(Velu Nachiyar), பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியாரை எதிர்த்த முதல் பெண்ணரசி!
பதினெட்டாம் நூற்றாண்டில் ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதியின் ஒரே மகளாக 1730ல் பிறந்தார். ஆண் வாரிசு இல்லாததற்காக ஆதங்கப்படாத மன்னர், தன் மகளை ஆணுக்கு இணையாக வளர்க்கிறார். வீரம், கல்வி இரண்டையும் இரு கண்களாக்கி மகிழ்கிறார். 1746ல் முத்து வடுக நாதருக்கு மணமுடித்துக் கொடுக்கிறார். மன்னரின் மறைவுக்குப் பின் 1780 லிருந்து 1783 வரை அரசியாகக் கோலோச்சுகிறார் நாச்சியார்.
பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியார் வரி கேட்டு வம்பு செய்து, அவரின் திருப்பத்தூர் கோட்டையை அடித்துப் பிடுங்கி, அவர்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருகின்றனர்.
மருது சகோதரர்கள் மற்றும் நன்னியம்பலம் ஆகியோரைத் தளபதிகளாக நியமித்து, ரகசியமாகப் பெரும் படையைத் திரட்டுகிறார். அப்போது பலவிடங்களிலும் மறைந்து வாழ்கிறார். இந்த நிலையில் ஹைதர் அலியைச் சந்திக்கிறார். அவரிடமும், அவர் படையினரிடமும் அவர் சரளமாகப் பேசிய உருது மொழி, அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த, நாச்சியார் மீது அவர்கள் அனைவரும் பெரும் மதிப்பும் மரியாதையும் கொள்ளச் செய்கிறது. முடிந்த உதவிகளையும் செய்ய முன் வருகின்றனர்.
தன் அயராத உழைப்பாலும், ராஜ தந்திரத்தாலும் பிரிட்டிஷாரை மிரளச் செய்கிறார். படைத் தளபதி நன்னியம்பலம் தலைமையில் 3000 வீரர்களுடன் 8 பீரங்கிகளையும் அனுப்பி, திருப்பத்தூர் கோட்டையை மீட்கிறார். ஆங்கிலேயர்கள் அயர்ந்து நின்றனர்.
வேலு நாச்சியாரின் வாழ்வில் எத்தனையோ சிறந்த தருணங்கள் உண்டு. அவற்றில் ஹைலைட்டான ஒன்றைப் பார்ப்போமா?
பிரிட்டிஷ் கவர்னர் தன் அலுவலகத்திற்கு வேலு நாச்சியாரின் கணவரை அழைக்கிறார். வேலு நாச்சியாரும் உடன் செல்கிறார். கணவரை மட்டும் உள்ளே அனுப்பி விட்டு அவர் ஜன்னல் பக்கமாக மறைந்து நிற்கிறார். உள்ளே சென்ற முத்து வடுக நாதரைத் தன் ஆங்கிலத்தில் புரட்டி எடுக்கிறார் கவர்னர். பாவம்! வடுக நாதருக்கோ ஆங்கிலம் தெரியாது.
அன்றைக்கென்று பார்த்து டிரான்ஸ்லேட்டர் தாண்டவராயன் பிள்ளையும் உடன் இல்லை. கவர்னரோ “என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஏன் வரிப்பணம் இன்னும் வந்து சேரவில்லை? வரி வசூலிக்க வந்த எங்கள் ஆட்களை அவமரியாதை செய்து திருப்பி அனுப்பி இருக்கிறீர்கள். ஆங்கிலத்தை வேறு கற்றுக்கொள்ளாமல் எங்களை அவமதிக்கிறீர்கள்!” என்று குதிக்க, கவர்னரின் மொழிபெயர்ப்பாளரான நம்மவரோ, வடுக நாதர் வாங்கிக் கட்டிக் கொள்ளட்டும் என்று நமட்டுச் சிரிப்புடன் அமைதி காக்கிறார்.
பொறுமையிழந்த வேலு நாச்சியார் உடன் உள்ளே சென்று, “கவர்னரே! பிழைக்க இங்கு வந்தவர்கள் நீங்கள்! நீங்கள் தான் எங்கள் மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதனைக் கற்றுக் கொண்டு எங்களிடம் பேச வேண்டும். அதை விட்டு விட்டு உங்கள் மொழி எங்களுக்குத் தெரியவில்லையென்று ஏளனம் செய்வது நியாயமாகாது! எங்கள் நாட்டிற்குள் நீங்கள் தான் வந்திருக்கிறீர்கள். இதை மனதில் இறுத்துங்கள்” என்று ஆழமான ஆங்கிலத்தில் அவர் பேசியதைக் கேட்டு அந்தக் கவர்னர் விக்கித்துப் போனாராம்!
‘கணவர் ஆங்கிலம் அறியாமல் இருக்க, இந்த அம்மாவோ இந்தப் போடு போடுகிறதே!’என்று அவர் அதிர்ந்திருந்த நேரத்தில், “உங்களுக்கு ஆங்கிலம் மட்டுந்தான் தெரியும்! இதையே நான் மலையாளத்திலும், கன்னடத்திலும், உருதுவிலும் கூடச் சொல்வேன்.” என்று சொன்னதும், ‘நமக்கு ஒரு மொழி மட்டுமே தெரியும் என்பதை இப்படிக் குத்திக் காட்டுகிறாளே!’ என்று எண்ணித் தலை கவிழ்ந்தாராம்!
நாச்சியாருக்கு ஐந்து மொழிகள் அத்துபடியாம்!
வேலு நாச்சியார் வீரத்தைப் போற்றிப் பாராட்டும் விதமாக, சிவகங்கை மாவட்டம் சூரக்குளத்தில் ரூ. 60 லட்சம் செலவில் நினைவு மண்டபத்தை அந்நாளைய தமிழக முதல்வி (தலைவன்-தலைவி;செல்வன்-செல்வி என்பதைப் போல முதல்வருக்குப் பெண் பால் பெயராக முதல்வி என்றழைப்பது ஏற்புடையதுதானே!) ஜெயலலிதா அவர்கள், காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்கள். அந்த நினைவு மண்டபத்தில் அரசி பயன்படுத்திய ஈட்டி, வாள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வேலு நாச்சியாரின் நினைவைப் போற்றும் விதமாக, மத்திய அரசு 31 டிசம்பர் 2008ல் நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டது.