Queen Velu Nachiyar and Kuyili
Queen Velunachiyar

ஆங்கிலேயர்களை அலறவிட்ட 'சிங்கப் பெண்' வேலுநாச்சியார்... இழந்த கோட்டையை மீட்டெடுத்த 'திரில்லர்' கதை!

Published on
Mangayar malar strip
Mangayar malar strip

மிழ் மண்ணின் வீரத்திற்குச் சான்றாகத் திகழ்ந்தவர் ராணி வேலுநாச்சியார். அவர் ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதியின் ஒரே மகள். ஒரு இளவரசியாக இருந்தாலும், அவர் வளர்க்கப்பட்ட விதம் அசாத்தியமானது. சிலம்பம், வில்வித்தை, வாள்வீச்சு என அனைத்து வீரக்கலைகளையும் கற்றார். அதுமட்டுமின்றி, தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, உருது எனப் பல மொழிகளைப் பேசும் அறிவாற்றலும் அவரிடம் இருந்தது.

கோட்டையை இழந்த சோகம்

சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதரைத் திருமணம் செய்த வேலுநாச்சியார், மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். ஆனால், ஆங்கிலேயர்கள் வஞ்சகமாக சிவகங்கை மீது போர் தொடுத்தனர். காளையார் கோவில் போரில் மன்னர் வீரமரணம் அடைந்தார். தனது கணவரை இழந்த வேலுநாச்சியார், தன் கைக்குழந்தையுடன் தப்பிச் சென்றார்.

ஆனால், அவர் ஓடி ஒளிந்து கொள்ளவில்லை! "என் மண்ணை மீட்காமல் விடமாட்டேன்" என்று சபதம் எடுத்தார். திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாட்சியில் தங்கி, தனது படைகளைத் திரட்டத் தொடங்கினார்.

ஒரு புத்திசாலித்தனமான திட்டம்

ஆங்கிலேயர்களிடம் நவீனப் பீரங்கிகள் இருந்தன. சிவகங்கை கோட்டையைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு இருந்தது. கோட்டைக்குள் நுழைவது என்பது எளிதான காரியம் அல்ல. அப்போதுதான் வேலுநாச்சியாருக்கு ஒரு யோசனை தோன்றியது.

நவராத்திரி விழாவின் கடைசி நாளான விஜயதசமி அன்று, சிவகங்கை கோட்டைக்குள் இருக்கும் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலுக்குப் பெண்கள் சென்று வழிபாடு செய்வது வழக்கம். அன்று ஒரு நாள் மட்டும் பெண்களுக்குத் தடையிருக்காது.

குயிலியின் தியாகமும் தந்திரமும்

வேலுநாச்சியாரின் (Queen Velunachiyar) தளபதிகளில் ஒருவரான குயிலி, ஒரு துணிச்சலான முடிவை எடுத்தார். குயிலியும் மற்ற பெண் வீரர்களும் சாதாரணப் பெண்களைப் போல வேடமிட்டனர். பூக்கூடைகளுக்குள் கூர்மையான வாள்களையும், ஆயுதங்களையும் மறைத்து வைத்தனர்.

கோட்டைக்குள் நுழைந்தவுடன், குயிலி ஒரு அதிரடித் திட்டத்தைச் செயல்படுத்தினார். ஆங்கிலேயர்களின் மிகப்பெரிய பலமே அவர்களின் வெடிமருந்து கிடங்குதான். அதை அழித்துவிட்டால் அவர்கள் பலவீனமாகி விடுவார்கள்.

திடீரென, குயிலி தன் உடலில் நெய்யை ஊற்றிக்கொண்டு தீயைப் பற்றவைத்தார். ஒரு மனிதத் தீப்பந்தமாக மாறி, பாய்ந்து சென்று வெடிமருந்து கிடங்கிற்குள் குதித்தார்!

வெற்றி முழக்கம்

"டும்... டும்..." எனப் பயங்கரச் சத்தத்துடன் வெடிமருந்து கிடங்கு வெடித்துச் சிதறியது. வானமே அதிரும் வகையில் ஏற்பட்ட அந்தச் சத்தம், வெளியே காத்துக்கொண்டிருந்த வேலுநாச்சியாரின் படைகளுக்கு ஒரு சமிக்ஞையாக (Signal) இருந்தது.

உடனே வேலுநாச்சியார் குதிரையில் ஏறி வாளைச் சுழற்றிக்கொண்டு கோட்டைக்குள் புகுந்தார். மருது சகோதரர்களும், ஐதர் அலியின் படை வீரர்களும் மின்னல் வேகத்தில் ஆங்கிலேயர்களைத் தாக்கினர். ஆயுதங்களை இழந்த ஆங்கிலேயப் படை சிதறி ஓடியது.

இதையும் படியுங்கள்:
வேர்க்க விறுவிறுக்க ஓடிய காலம் போச்சு... இன்று கட்டைவிரல் மட்டுமே வேலை செய்கிறது!
Queen Velu Nachiyar and Kuyili

வீரத்தின் அடையாளம்

சிவகங்கை கோட்டையில் மீண்டும் வேலுநாச்சியாரின் வெற்றிக்கொடி பறந்தது. இழந்த நாட்டைத் தனது அறிவாலும், வீரத்தாலும் மீட்டு எடுத்தார். ஜான்சி ராணிக்கும் முன்பே, ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வென்ற முதல் இந்திய அரசி என்ற பெருமை இவரையே சாரும்.

logo
Kalki Online
kalkionline.com