
முன்னொரு காலத்தில் இந்த பூமியில் பெரும் பகுதியை நீதிநெறி தவறாமல் ஆண்டு வந்தான் கர்த்தமன் என்ற அரசன். ஒரு நாள் அவரது அரண்மனைக்கு பிருகு முனிவர் வந்தார். அவரை வணங்கி வரவேற்று ஆசி பெற்ற கர்த்தமன் அப்போது "சுவாமி இந்த பூலோகம் முழுவதும் ஆள்கிறேன், ஏகபோக சுகங்களை அனுபவித்து வருகிறேன். இந்த நற்பாக்கியங்கள் எல்லாம் எனக்கு எப்படி கிடைத்தது? என்பதை தாங்கள் எனக்கு தெரிவிக்க வேண்டும்," என்றான்.
அதற்கு பிருகு முனிவர் "கர்த்தம ராஜனே, நீ முற்பிறவியில் ஒரு வணிகனாய் இருந்தாய். அப்போது நீ வறுமையில் சிக்குண்டு தவித்தாய். இதனால் வணிக தொழிலை விட்டாய். இதனால் உன் சொந்தங்கள் எல்லாம் பிரிந்து சென்றனர். மேலும் உன்னை திட்டித் தீர்த்தனர். இவற்றை கண்டு பொறுக்காமல் வீட்டை விட்டு ஓடி காட்டுக்குச் சென்றாய். அங்கு சவுபரி முனிவரைப் கண்டு அவரை வணங்கி உன் துர்பாக்கிய கதையை எடுத்துக் கூறினாய்.
உன் பரிதாபமான கதையை கேட்டு மனமிறங்கிய சவுபரி முனிவர் , உனக்கு விநாயகப் பெருமானின் திருமந்திரத்தை உபதேசித்தார். அந்த மந்திரத்தை நீ தினமும் அனுஷ்டித்து வந்தாய். அப்போது விநாயகர் சதுர்த்தி வந்தது. அந்த சதுர்த்தி விரதத்தை உன்னுடன் கூட இருந்து ஆகம விதிப்படி அம் முனிவர் முடித்து வைத்தார். அந்த சதுர்த்தி விரதத்தை கையாண்ட பாக்கியத்தினாலேயே விநாயகப் பெருமான் அருள் புரிந்து உன் வீடு முழுவதும் பொன்னும் மணியும் நிறைந்தது. அதை தவசீலரான சவுபரி முனிவர் தம் ஞான திருஷ்டியால் உணர்ந்து கொண்டு, உன்னை உன் வீட்டுக்குத் திரும்பி செல்லும் படி கூறினார்.
உடனே நீ முனிவரின் காலில் விழுந்து வணங்கி விட்டு உன் சொந்த ஊரை அடைந்தாய். ஏராளமான செல்வங்களோடு நீ வாழ்வதைக் கண்ட உன் உறவினர்களும், சுற்றத்தார்களும் உன்னை நாடி வந்தனர். நீ சகல செல்வ வளங்களுடன் ஆனந்தமாய் உன் காலத்தை கழித்து வந்தாய். மேலும் நீ விநாயக சதுர்த்தி விரதத்தை கடைபிடித்து வந்த காரணத்தால் அந்தப் பிறவியோடு மட்டுமல்லாமல் இந்த பிறவியிலும் உனக்கு அளவற்ற ஐஸ்வரியங்களைத் தந்து உன்னை ஏகச் சக்கரவர்த்தியாகவும் ஆக்கிவிட்டிருக்கிறது," என்று கூறினார்.
அதை கேட்ட பிறகு கர்த்தம மகாராஜா பெரும் மகிழ்ச்சி பெருக்கை அடைந்தவனாய் காணப்பட்டான். அதன் பிறகு வருடம் தவறாமல் விநாயக சதுர்த்தி விரதத்தை கடைபிடித்து வந்து தன்னுடைய மகனிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு விநாயகர் அருளால் யாருக்கும் எளிதாக கிடைக்காத பேரின்ப முக்தியை பெற்றான்.
விநாயகருக்கு மட்டுமே வினை தீர்க்கும் பல விரதங்கள் உள்ளன.
சதுர்த்தி விரதம் - செய்யும் தொழில் சிறக்க ஆவணி வளர் பிறை சதுர்த்தி தொடங்கி அடுத்த ஆண்டு புரட்டாசி சதுர்த்தி வரை ஒரு வருடம் அனுஷ்டிப்பது.
சங்கடஹர சதுர்த்தி விரதம் - மாசி மாத தேய்பிறை சதுர்த்தி தொடங்கி ஒரு ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தியில் விரதம் இருப்பது இதனால் எப்படிப்பட்ட துன்பமும் விலகி விடும்.
குமார சஷ்டி விரதம் - கார்த்திகை தேய்பிறை பிரதமை திதி முதல் மார்கழி வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள் இருக்கும் விரதம். இதனால் வீண் பயங்கள் எழுவது மறைந்து மனதில் தைரியம் அதிகரிக்கும்.
ஆயுள் பலம் அதிகரிக்க வெள்ளிக்கிழமை விரதம்: வைகாசி வளர்பிறை வெள்ளிக்கிழமை தொடங்கி, தொடர்ந்து 52 வெள்ளிக்கிழமைகளில் அனுஷ்டிக்கும் விரதம். செல்வ வளம் பெருக்கும்.
செய்வாய் விரதம்: தை அல்லது ஆடி முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி தொடர்ந்து 52 வாரங்கள் அனுஷ்டிக்கும் விரதம்.
பெண்கள் மட்டுமே அனுஷ்டிக்கும் தை மாத வெள்ளிக்கிழமை விரதம்: இந்த விரதத்தை கடைபிடிக்கும் பெண்களுக்கு செல்வ விருத்தியடையும், கன்னிப் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியமும் கிடைக்கும்.