அழகால் அதிரவைத்த நாட்டியத் தாரகை! 92 வயதிலும் கொஞ்சும் இவரது சலங்கை!

Vyjayanthimala
Vyjayanthimala
Published on
mangayar malar strip
mangayar malar strip

'சாதுர்யம் பேசாதேடி... என் சலங்கைக்கு பதில் சொல்லடி...' வஞ்சிக்கோட்டை வாலிபனில் வரும் பாடல் வரிகளுக்கு கம்பீர அசைவுகளுடன், மருண்ட விழிகளில் மந்தகாசத்துடன் கர்வம் சுழல, மின்னும் ஆபரணங்களுக்கு போட்டியாக அழகில் ஜொலித்த அந்த அழகு மங்கையின் நடனத்தில் மயங்கி அவரை கனவுக்கன்னியாக ஏற்றவர்கள் அன்று ஏராளம். நாட்டியப் பேரொளி பத்மினியுடன் இவர் ஆடியது காலத்தால் அழியாத காவியமாக இன்றும் பேசப்படுகிறது. யார் இவர்?

வைஜெயந்திமாலா எனும் அந்த அழகுப்பதுமை தற்போது தனது 92ஆவது அகவையில் ஆரோக்கியமான உடல் நலத்துடன் உள்ளார். இன்றும் கண்களைக் கவரும் ஒப்பனையுடன் வலம் வரும் வைஜெயந்திமாலா நம் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.

தமிழ், ஹிந்தியில் நடித்து தனது அழகால் உலகமெங்கும் புகழ்பெற்றவர் வைஜெயந்திமாலா. சென்னை திருவல்லிக்கேணியில் 1936 இல் பிறந்த அவர் சமீபத்தில் (ஆகஸ்ட் 13) தனது 92 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்தார். பள்ளிப்படிப்பை திருவல்லிக்கேணியில் முடித்தவர் நாட்டியத்தை நேசித்து புகழ்பெற்ற குருமார்களிடம் கற்றுத் தேர்ந்து தனது 13 ஆவது வயதில் அரங்கேற்றம் செய்தவர்.

1949-ம் ஆண்டு ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த 'வாழ்க்கை' படத்தின் கதாநாயகியாக நடித்ததன் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர் தமிழில் ‘இரும்புத்திரை’, ‘தேன்நிலவு', 'பார்த்திபன் கனவு’ உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இந்திமொழிப் படங்கள் சுவீகரித்துக் கொண்ட இவர் தமிழில் நடித்த படங்கள் குறைவு எனினும், 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில் 'கண்ணும் கண்ணும் கலந்து...' என்ற பாடலுக்கு ஆவேசத்துடன் இவர் ஆடிய போட்டி பாடல் இன்னும் நல்ல வரவேற்பை பெறுவது சிறப்பு.

அதே போல் இந்தியில் நாகின் (1954) திரைப்படத்திலிருந்து 'மேன் டோல் மேரா டான் டோல்' வெளியானபோது மிகவும் பிரபலமானது. பார்வையாளர்கள் திரையில் நாணயங்களை வீசினர். அந்த மாயாஜால தருணம் அவரை உச்சத்திற்கு அழைத்துச் சென்று வணிக இந்தி சினிமாவில் அவருக்கு இடத்தைப் பெற உதவியது. இதுபோல பல இந்திப் பாடல்கள் இவரது நடனத்தால் பெரும் ஹிட்.

இந்தித் திரையுலகில் நுழைந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தென்னிந்தியாவிலிருந்து அகில இந்திய அளவில் புகழ் பெற்ற முதல் நடிகை எனும் பெருமைக்குரியவரானார்.

சுமார் 20 ஆண்டுகள் திரையுலகில் ஜொலித்தவர் பெண்கள் வரத்தயங்கிய அரசியலிலும் கால் பதித்து மக்களவை, மாநிலங்களவை என இரண்டிலும் எம்.பி.யாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி உள்ளார்.

வைஜெயந்திமாலா உயரிய இந்திய விருதான 'பத்ம விபூஷன் (2024) · பத்மஸ்ரீ (1968) · கலைமாமணி (1979) , சங்கீத நாடக அகாடமி விருது (1982) மற்றும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுகள் என பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

புகழின் உச்சத்தில் இருந்த போதே சமன்லால் பாலி என்பவரை மணமுடித்து வாய்ப்புகள் வாசலுக்கு வந்து கதவைத் தட்டினாலும் வைராக்கியத்துடன் நடிப்பதை நிறுத்தி ஆச்சரியப்பட வைத்தார்.

இதையும் படியுங்கள்:
WOW! சூரிய சக்தி விமானம்... ஒரு புதிய சகாப்தம்!
Vyjayanthimala

சமீபத்தில் தனியாருக்கு அளித்த பேட்டியில் அவர், "கடவுள் அருளால் 92 வயதில் இன்னும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். என் வாழ்க்கையையும் கரியரையும் திரும்பிப் பார்க்கும்போது, எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் செய்தவற்றில் ஆழ்ந்த திருப்தி மட்டுமே உணர்கிறேன்" என்று கூறியிருப்பது வாழ்வின் நிறைவான தருணங்களில் அவர் மகிழ்திருப்பதை சுட்டிக் காட்டுகிறது.

2007-இல் தனது சுயசரிதை நூலை வெளியிட்ட வைஜெயந்தி மாலா தனது 90 வயதில் அயோத்தியில் பரதநாட்டியம் ஆடி அசத்தினார். அவரது பரதநாட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இத்தனை வயதிலும் அவரது உறுதியான நடனம் கண்டு மக்கள் 'ஆஹா.. வயதானாலும் நடனம் சூப்பர்' என வியந்து ரசித்தனர். ஏறக்குறைய 63 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள அவர் ஐ.நா.சபையில் நடனம் ஆடிய பெருமையைக் கொண்டவர்.

இதையும் படியுங்கள்:
எண்ணங்கள் உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கும் தெரியுமா?
Vyjayanthimala

சென்ற வருடம் இவர் மறைவு குறித்து தவறான வதந்தி பரவிய நிலையில் இவரது மகன் சுசீந்திர பாலி தனது 91 வயதான தாயார் நலமாக இருப்பதாகவும், அவர் காலமானதாக வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் புகழ்பெற்ற பன்முகத்திறமை கொண்ட பழம்பெரும் நடிகையான வைஜெயந்தி மாலா நூறாவது பிறந்த நாளையும் கொண்டாட வாழ்த்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com