நடை நல்லது...

ஆரோக்கியம் காப்போம்!
நடை நல்லது...

காலை ஆறு மணிக்கு தெருவில் நடந்தால் பேப்பர் போடும் பையன்கள், பெரிய பால் கேன்களை இருசக்கர  வாகனத்தில் வைத்துக் கொண்டு சர்ரென விரையும் பால்காரர்களுக்குப் போட்டியாக ஓய்வு பெற்ற முதியவர்கள், நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் ‘விசுக்கு’ விசுக்கு என என சாலையை அடைத்துக் கொண்டு நடப்பதைக் காணலாம். தற்போது வாக்கிங் போவது ஒரு ஃபேஷனாகவே ஆகிவிட்டது. நடப்பதற்கு என்று சில விதிமுறைகள் இருக்கின்றன.

எப்படி நடக்கணும் தெரியுமா?

மெதுவாக நடப்பதெல்லாம் நடை பயிற்சிக்கு ஒவ்வாத விஷயம். இரு கைகளையும் வீசிப்போட்டு வேகமாக நடக்க வேண்டும். நடப்பதற்கு முன் ஒரு வார்ம் அப் செய்து கொண்டோ அல்லது முதலில் மிதமான வேகத்திலோ நடக்கத் துவங்கி பத்து நிமிடங்களில் வேகம் கூட்டி நடக்க வேண்டும். ஒரு நாளைக்கு பத்தாயிரம் அடிகளாவது இலக்கு வைத்துக் கொண்டு நடக்க வேண்டும். ஆரம்பத்தில் ஆயிரம், இரண்டாயிரம் அடிகள் நடக்கத் துவங்கினால் ஒரு வாரத்தில் பத்தாயிரத்தை எட்டிவிடலாம். மெல்ல வயிற்றை உள்ளிழுத்துக் கொண்டு நடந்தால் தொப்பையார் சீக்கிரமே காணாமல் போவார்.

வடைக்குப் போடணும் தடை:

பொதுவாக மக்கள் நடைபயிற்சி செய்யும் சாலையின் ஓரத்திலோ தெருமுனையிலோ கட்டாயம் இரண்டு மூன்று ஹோட்டல்களாவது இருக்கும். எங்கள் ஊரில் ஜி. ஹெச்சிற்கெதிரே புதிதாக ஆரம்பித்த கடை ஒன்றில் ‘ஒரு டீ அல்லது காபி குடித்தால் ஒரு போண்டா இலவசம்’ என அறிவிப்புப் பலகை வைத்தனர். அங்கே நடைப் பயிற்சியாளர்கள் புகுந்து ஒரு கட்டுக்கட்ட ஆரம்பிக்க, ஹோட்டல்காரர் மிக விரைவில் கல்லா கட்டினார். அவர்கள் வாடிக்கையாய் வர ஆரம்பித்த கொஞ்ச நாட்களில் காபியுடன் இலவச போண்டா திட்டம் ரத்து செய்யப்பட்டாலும், பழக்கதோஷம் காரணமாக எக்ஸ்ட்ரா பணம் கொடுத்து அன்பர்கள் போண்டாவை சுவைக்கத் தவறுவதில்லை.

இதுபோன்ற கடைகளில் இருந்து ‘கம கம’ வென உளுந்து வடை, பருப்பு வடை அல்லது போண்டாவின் வாசனை காற்றில் கலந்து நம் நாசியை எட்டி, ‘வா! வந்து ஒரு வாய் ருசி பாரேன்’ என அழைப்பு விடுக்கும்’. அந்தக் கடையை நோக்கி நடைபோடும் முன் குனிந்து, நம் உடல் சேர்த்து வைத்திருக்கும் பெரும் சொத்தான தொப்பையை பார்த்துக் கொண்டால் கால்கள் தாமாக பிரேக் போட்டுக் கொள்ளும். அப்படியே யு - டர்ன் போட்டு வீட்டிற்கு போய் துளியுண்டு நாட்டுச்சர்க்கரை போட்டுக் கலந்த காபி என்ற திரவத்தை மனைவி கையால் வாங்கி குடிப்பது உத்தமம். அதைவிட சர்க்கரை, பால் சேர்க்காத கிரீன் டீ அல்லது பிளாக் டீ இன்னும் உத்தமம்.

என்ன கெட்டப்பில் வாக்கிங் போகணும்?

வாக்கிங் போவது என தீர்மானித்தவுடன் என்ன உடை அணியலாம் என்று யோசனை எழுகிறதா? தற்போது ஐந்து வயது சிறுவன் முதல் எண்பது வயதுத் தாத்தா வரை ஆண்களின் தேசிய உடையாகிப் போன ஷார்ட்ஸ், டி-ஷர்ட், ட்ராக் பேண்ட் என  நிறையப் பேர் இதில்தான் கவனம் வைக்கிறார்கள். அணிந்திருக்கும் உடை வேட்டியோ, பேண்ட்டோ, சேலையோ, சுடிதாரோ அது முக்கியமல்ல. காலுக்கு மென்மையான, தரமான நல்ல ஷூக்கள் தேவை. நமது மொத்த உடலின் எடையையும் தாங்கி நிற்பது நமது கால்கள்தான். எனவே சரியான காலணிகள் அணிந்து நடப்பது தான் நன்று.

நடைப்பயிற்சியில் எதிர்கொள்ள வேண்டிய பயங்கரங்கள்:

1. ன்னித்தீவு சிந்து பாத் போல, தெருநாய்க் கூட்டங்கள் நம் கூடவே சேர்ந்து நடந்து வரும். சில நம் முகம் பார்த்து குரைக்கும். சில ‘ஈ’ என பல்லைக்காட்டி மிரட்டும். அவற்றிற்கு பிஸ்கட், பொறை என வாங்கிப் போட்டு கூல் செய்து வைத்திருப்பது மிக மிக அவசியம். அப்போதுதான் நம்மால் நிம்மதியாக வாக்கிங் போக முடியும்.

2. புதிதாக டிரைவிங் கற்றுக் கொள்ளும் ‘எல் போர்டு’ வண்டிகள் தூரத்தில் வரும் போதே சுதாரித்து ரோட்டை விட்டு விலகி சட்டென நடைபாதையில் ஏறிக் கொள்வது ஷேமம். இல்லையெனில் நடுரோட்டில் நம்மை டான்ஸாட வைத்துவிடுவர்.

3. பாதை ஓரமாக வெயிங் மிஷினுடன் அமர்ந்துகொண்டு கொலஸ்ட்ரால், ஷுகர் பரிசோதனை செய்ய அழைக்கும் கும்பல். ‘பக்க விளைவுகள் அற்ற கேப்சூல்ஸ் வாங்கிக் கொள்ளுங்கள். மூன்று மாதத்திற்கு ஜஸ்ட் 5000 ரூபாய் தான். நீங்கள் மூன்று கஸ்டமர்களை பிடித்துக் கொடுத்தால் 2500 ரூபாய் உங்களுக்கு டிஸ்கவுன்ட்’ என நம்மிடம் பேரம் பேசுவர். அவர்களின் டீலிங்கில் மயங்கினால் தொலைந்தோம். பர்சின் பருமன் வேண்டுமானால் குறையும். உடல் எடை நூறு கிராம் கூட குறையாது. அதனால் அவர்களின் பக்கம் லேசாகக் கூட பார்வையை திருப்பாமல், நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையுமாக சென்று விட வேண்டும். 

4. டூவீலரில் வரும் நெருங்கிய, தெரிந்த அன்பர்கள், ‘வாங்க சார், டிராப் செய்கிறேன்!? என அன்புத் தொல்லை தந்து நம் நடைப்பயிற்சிக்கு எண்ட் கார்டு போட  முயல்வர். அவர்கள் அப்படிக்கா வந்தால் நீங்கள் இப்படிக்கா தப்பிப் போய்விடுங்கள்.

5. ‘வீட்டில் ட்ரெட்மில் வாங்கி அதுல வாக்கிங் போ’ அல்லது ‘மாசத்துக்கு 4500 தானாம். ஒரு மணி நேரம் போதும். புதுசாத ஏ சி ஜிம் திறந்திருக்கிறான்’ என யாராவது ஜிம்மிற்கு அழைத்தால் ‘அரசாங்கம் போட்ட சாலையில் சூரியனாரின் ஒளி வெள்ளத்தில் இலவசமாக நனைந்து, உடலில் என்டார் பின்கள் சுரக்க, மனதில் உற்சாகம் பிறக்க, நடக்கும் பயிற்சியே போதும்ப்பா’ என கும்பிடு போட்டு அனுப்பி விடுங்கள். 

6. யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து காரிலோ டூ வீலரிலோ ஏறி ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி சிலர் நடக்க ஆரம்பிப்பர். நம் வீட்டை விட்டு வெளியே கால் வைத்தவுடன்,  நம்முடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொள்ள விரும்பி ஒரு பெருங்கூட்டம் நம்மை துரத்தப்போகிறதா என்ன? நாம் ஒன்றும் விஜய்யோ, அஜித்தோ அல்லவே? அப்பாவி பொதுஜனம் தானே? ‘ஒய் பிளட், சேம் பிளட் ரகம் தானே? எனவே  வீட்டிலிருந்தே நடந்து செல்லுங்கள். அதனால் நடக்கும் தூரம் அதிகமாகும். திரும்பி வரும்போது அப்படியே அருகிலுள்ள மார்கெட் அல்லது பழமுதிரில் நுழைந்து இனிய இல்லாளுக்கு காய்கறிகள், பழங்கள் என வாங்கி வந்தால், ப்ரெஷ் பாலில் போட்ட காபி கிடைக்கும். எனவே ‘நடை நல்லது’ நண்பர்களே. தினமும் நடப்போம் ஆரோக்கிய வாழ்வை நோக்கி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com