வாஷிங் மெஷின் (washing machine) இன்று ஒவ்வொரு வீடுகளிலும் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது. வாஷிங் மெஷின்கள் (Washing Machine) என்பவை துணிகளை எளிமையான முறையில் சுத்தமாக துவைக்க உதவும் இன்றியமையாத வீட்டு உபயோகப் பொருட்களாகும். இவை முக்கியமாக Fully Automatic (முழு தானியங்கி) மற்றும் Semi-Automatic (அரை தானியங்கி) என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. மேலும் இவை Top Load (மேல் திறப்பு) மற்றும் Front Load (முன் திறப்பு) முறைகளிலும் கிடைக்கின்றன. இதில் பயனர்கள் தங்களது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற மாடலை தேர்வு செய்து கொள்ளலாம். அந்த வகையில் வாஷிங் மெஷின்கள் இல்லத்தரசிகள் மற்றும் பேச்சிலர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாகும்.
ஆனால் அதைப் பயன்படுத்தும் முறை சரியாக இல்லையென்றால், துணிகள் விரைவில் கிழிவதோடு, நிறங்கள் மங்குவதும், சோப்பு படிமங்கள் படிவதும் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
வாஷிங் மெஷின் அனைத்து வகையான துணிகளையும் துவைக்கும் என்றாலும், சில வகையான துணிகளில் இதில் போடக்கூடாது. இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க, சில எளிய நடைமுறைகளை பின்பற்றினால், உங்கள் துணிகள் நீண்ட நாள் புதியது போல பளபளப்பாக இருக்கும். அதன்படி எந்த துணிகளை வாஷிங் மெஷினில் துவைப்பதை தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம் வாங்க...
வாஷிங் மெஷினில் துணி துவைக்கும் போது துணிகளைப் பிரித்து போடுதல், சரியான அளவு சோப்பு பயன்படுத்துதல் மற்றும் அளவான எடையுள்ள துணிகளை மட்டும் நிரப்புதல் மிகவும் அவசியம்.
அதேபோல் முதலில், ஒவ்வொரு ஆடையிலும் உள்ள 'பராமரிப்பு லேபிளை' பாருங்கள், அதுதான் உங்கள் முதல் வழிகாட்டி.
அதேபோல் ஒவ்வொரு துணிக்கும் தனித்தன்மை உண்டு. மென்மையான துணிகளுக்கு மென்மையான முறை (Gentle mode) பயன்படுத்தவும். வேலை உடைகள் அல்லது கடினமான அழுக்குகள் உள்ள துணிகளுக்கு வலுவான (Heavy mode) முறையைத் தேர்வு செய்யவும்.
அதிக அழுக்குகள், சேறும் சகதியுமான துணிகள், செல்லப்பிராணிகளுக்கு பயன்படுத்திய முடிகள் நிறைந்த போர்வை போன்றவற்றை வாஷிங் மெஷினில் துவைக்க கூடாது. அவை மெஷினை சேதமாக்கும். துணியும் முறையாக சுத்தப்படுத்தப்படாது.
வாஷிங் மெஷினின் வேகமான சுழற்சி, கழுத்துக்கு சப்போர்ட் கொடுக்கும் திடமான ‘மெமரி போம்’ (Solid Memory Foam) தலையணைகளை கிழித்துவிடக்கூடும் என்பதால் எக்காரணத்தை முன்னிட்டும் வாஷிங் மெஷினில் அவற்றை துவைக்கக்கூடாது.
அதிக கனமான போர்வைகளை (Bedsheet) வாஷிங் மெஷினில் துவைக்கலாம் என்று விற்பனையாளர்கள் கூறினாலும் வாஷிங் மெஷின் கொள்ளளவை யோசித்து அதில் போர்வைகளை துவைப்பதை தவிர்ப்பது நல்லது.
பழைய உடைகளையும், மென்மையான துணிகளான பட்டு, சூட் (Suede), லேஸ் போன்றவற்றையும் மெஷினில் துவைக்காமல், மைல்டான டிடர்ஜென்ட் பயன்படுத்தி குளிர்ந்த நீரில் கைகளால் துவைக்க வேண்டும்.
பட்டுப்புடவை, பட்டுப்பாவாடை போன்ற பட்டுத்துணியால் (Silk) ஆன உடைகளையும், விலை உயர்ந்த உடைகளையும் வாஷிங் மெஷினில் துவைக்கக் கூடாது. மெஷினில் உள்ள சுழற்சி பட்டு நூல்களைப் பலவீனப்படுத்தி, ஆடைகளைக் கிழித்துவிடும். மெஷினும் சேதமடையலாம்.
அதேபோல் மடிப்பான ஸ்கர்ட்கள் (Pleated Skirts), லெதர் துணிகள், மணிகள், எம்பிராய்டரி செய்த ஆடைகள் (Embroidered dress), மினுமினுப்புகள் (Sequins) அல்லது லேஸ், கண்ணாடி வேலைப்பாடு உள்ள துணிகள் பாழாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அவற்றை டிரை கிளீனிங் செய்வதே சிறந்தது.
வாஷிங் மெஷினில் கம்பளி (Woollen Clothes) ஆடைகளை துவைத்தால் அவை மெஷினின் அதிர்வு மற்றும் சுழற்சியில் கம்பளி இழைகளைச் சுருக்கி, வடிவம் மாறி, இழைகள் சேதமடைந்து ஆடைகளின் அளவைக் குறைத்துவிடும். ஆடையின் பராமரிப்பு லேபிளில் 'Machine Washable' அல்லது 'Hand Wash Only' என்று உள்ளதா எனப் பார்க்கவும்.
லெதரில் உள்ள இயற்கையான ஈரப்பதமும் எண்ணெயும் நீங்கி, தோல் ஆடை (Leather) விறைத்து வெடித்துவிடும். மெஷினில் அதிக சுழற்சி, அதிக வெப்பத்தின் காரணமாக லெதர் ஆடைகள் சுருங்கி வெடிப்பு ஏற்பட்டுவிடும். ஆகவே தோல் ஆடைகளான லெதர் ஜாக்கெட்டுகள், பேண்டுகளை வாஷிங் மெஷினில் துவைக்க வேண்டாம்.
வெள்ளை நிற ஆடைகள் மற்றும் அடர் நிற ஆடைகளைத் (ஆடை பராமரிப்பு) தனித்தனியாகப் பிரிக்கவும். குறிப்பாக வெள்ளை துணிகள், பிற துணிகளுடன் கலந்து துவைத்தால் மங்கும் வாய்ப்பு அதிகம்.
மெஷினில் அதிகப்படியான துணிகளை ஒரே நேரத்தில் திணிக்க வேண்டாம்.
வாஷிங் மெஷினில் துணிகளைத் துவைக்கும்போது குளிர்ந்த நீரை தேர்வு செய்வது சிறந்தது. இது துணிகளின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதுடன், துணிகளின் நிறங்கள் விரைவாக மங்குவதைத் தடுக்கிறது. சூடான நீர் நூல்களுடன் இணையும்போது, அவை தளர்வாகி, துணிகள் சுருங்குகின்றன.
ஜீன்ஸ் பேண்ட், ஜிப்புகள் வைத்த ஜாக்கெட்டுகள் போன்றவற்றை வாஷிங் மெஷினில் துவைக்கும் போது ஜிப்புகள் திறந்திருந்தால் அதன் பற்கள் மற்ற துணிகளை எளிதில் கிழித்துவிடும். எனவே பேண்ட் ஜிப்பை மூடி இருக்கிறதா என்பதை பரிசோதித்த பின்னர் வாஷிங் மெஷினில் துவைக்க வேண்டும். அதேபோல் ஜிப்பை லாக் செய்து மெஷ் லாண்டரி பைகளையும் மெஷினில் துவைக்கலாம்.
துணிகளை வாஷிங் மெஷினில் துவைக்க போடுவதற்கு முன்பு சட்டை, பேண்ட் பாக்கெட்டுகளில் ஏதாவது பணமோ, பொருளோ இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டியது மிகவும் அவசியம்.
இல்லையெனில் அதில் இருக்கும் நாணயங்கள், சாவிகள் மெஷினின் உட்புறத்தை சேதப்படுத்திவிடும். மேலும் டிஷ்யூ பேப்பர், பழைய ரசீதுகள், லிப் பாம்கள் போன்றவை இருந்தால் அவை கரைந்து மற்ற துணிகளில் பரவி துணிகளை பாழக்கிவிடக்கூடும்.
அடர் நிறங்களான சிவப்பு, ஆரஞ்சு நிறம் கொண்ட துணிகள் சாயம் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவற்றை மிஷினில் துவைக்கக் கூடாது. மீறி துவைத்தால் சாயம் போகும் துணியில் இருந்து வெளியேறும் வண்ணங்கள் மற்ற துணிகளில் கலந்து அவற்றின் நிறத்தை மாற்றிவிடும்.
சிறிய கவனிப்புகள் பெரிய மாற்றத்தை உருவாக்கும். எனவே இனிமேல் வாஷிங் மெஷினைப் பயன்படுத்தும் போது இந்த அடிப்படை வழிமுறைகளை பின்பற்றினால், உங்கள் துணிகள் நீண்ட நாட்கள் புது தோற்றத்துடன் மிருதுவாகவும் நறுமணமுடன் இருக்கும். சரியான பராமரிப்பு, உங்கள் ஆடைகளின் ஆயுளை நீட்டிக்கும் சிறந்த வழி என்பதை மறந்துவிட வேண்டாம்.