
சமீபமாக வந்த சில வெற்றிப் படங்களுக்குப் பிறகு ஆல்ஃபா ஆண்கள் என்கிற பெயர் பிரபலமடைந்தது. ஆண்களில் மட்டும் தான் ஆல்ஃபாக்கள் இருக்க வேண்டுமா? ஆல்ஃபா பெண்மணிகளும் உலகத்தில் உண்டு என்ற கருத்து சமீபமாக விரிவடைந்து வருகிறது.
ஆல்ஃபா என்ற அடைமொழி உண்மையில் குறிப்பிடுவது என்ன? எதை? தன்னுடைய திறமைகளை தைரியத்தை தலைமைத்துவத்தை வெளிப்படுத்தி சமூகத்தில் ஒரு வலுவான பிடிமானத்தை வைத்திருக்கும் தன்மை கொண்டவர்களை ‘ஆல்ஃபா’ என்ற அடைமொழி இட்டு அழைப்பது வழக்கம். இப்போது சொல்லுங்கள்.. பெண்கள் ஆல்ஃபாக்களாக இருக்க முடியாதா என்ன?
ஆல்ஃபா பெண்ணாக நீங்கள் வளர்ந்திருக்கிறீர்களா? என்பதை இக்கட்டுரையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஆல்ஃபா பெண்ணிடம் இருக்கும் ஐந்து ஆளுமைக் கூறுகள்.
1. தலைவி
ஆல்ஃபா பெண்ணாக நீங்கள் இருப்பதற்கான முதல் அறிகுறி உங்களிடம் இயற்கையாகவே விரவிக் கிடக்கும் தலைமைப் பண்பாகும். வலியச் சென்று தலைமைப் பொறுப்பை ஏற்பீர்கள். ஒரு உதாரணமாக முன்னால் நிற்பீர்கள். அடி எடுத்து வைக்கத் தயங்க மாட்டீர்கள். முடிவுகள் எடுப்பீர்கள். சூழ்நிலையின் கண்ட்ரோலினைக் கைப்பற்றுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கையும், பிடிவாதமும் நீங்கள் செய்யும் அனைத்திலும் மிளிரும். அது உங்களின் தனிப்பட்ட வாழ்விலும் பணியிடத்திலும் உங்களைத் தலைமைப் பதவிக்கு உயர்த்திச் செல்லும்.
2. சாராத நிலை
எதற்கும் ஒருவரையும் எதிர்ப்பார்க்கும் பழக்கமே உங்களுக்குக் கிடையாதா? சொந்த கால்களில் நின்று சுயநிறைவு பெற்றுவிட்டவரா? உங்களின் மதிப்பினை உங்களுக்கே உணர்த்த, உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒருவரும் தேவையில்லை என்ற நிலையை அடைந்துவிட்டீர்களா? உங்களின் பாதையை நீங்களே செதுக்கிக் கொள்ளும் துணிவு கொண்டவரா? எனில் நீங்கள் ஒரு ஆல்ஃபா பெண்மணி தானுங்க.
3. உறுதித் தன்மை
அல்ஃபா பெண்கள் தன் மனதில் பட்டதை உடைத்துப் பேசத் தயங்குவதே இல்லை. தன் எல்லைகளை உறுதிப்படுத்திக் கொள்ளத் தவறுவதும் இல்லை. பூசி மெழுகும் பழக்கமும் அவர்களுக்குக் கிடையாது. தனக்கு வேண்டியதன் பின்னால் செல்லத் தாமதிப்பதும் இல்லை. நீங்களும் அப்படித்தானா? எனில் ஆல்ஃபா பெண் தான் நீங்களும்.
4. இலக்கு
ஆல்ஃபா பெண் நீங்கள் என்றால், இலக்கில் குறியாய் இருப்பீர்கள். கனவுகளை விடாமல் துரத்தும் குணம் உண்டு உங்களுக்கு. எங்கே நாம் சேரப்போகிறோம் என்ற தெளிவு உங்களிடம் இருக்கும். இலக்கு வைப்பதோடு நின்று விடாமல் அர்ப்பணிப்போடு மிக மிகக் கடின உழைப்பு போட்டு அந்த இலக்கினை அடைந்தும் காட்டுவீர்கள்.
5. ஈர்க்கும் இருப்பு
ஆல்பா பெண்கள் ஓரிடத்தில் இருக்கிறார்கள் என்றால் அது நன்றாகத் தெரியும். கூட்டத்தில் தனித்துத் தெரிவார்கள். கவனம் ஈர்ப்பார்கள். அவர்களின் சக்திவாய்ந்த ஆரா சுற்றி உள்ளவர்களின் மனதில் முத்திரை பதிக்கத் தவறாது. காந்தத் தன்மையான ஆளுமையும் கவனிக்க வைக்கும் இருப்பும் அனைவரையும் வசீகரிக்கும். சில சமயங்களில் பயமுறுத்தும்.
இந்த ஐந்தும் ஆல்ஃபா பெண்களிடம் இருக்கும் பண்புகளாகும். உங்களிடம் இவை உள்ளனவா? எனில் நீங்களும் ஆல்ஃபா பெண்.