
"கல்யாணமா இப்பவேயா நோ வே" என்று மறுக்கும் ஹர்ஷிதாவுக்கு இருபத்தியோரு வயது என்று நினைத்தால் அது தவறு, முப்பதை நெருங்கிக்கொண்டிருக்கும் ஹர்ஷி தனியார் நிறுவனத்தில் சீனியர் மேனேஜர். அவர் வயதையொத்த பல பெண்கள் இன்று திருமணத்தைத் தள்ளிப் போடுவதன் காரணம் என்ன என்று கீதா தெய்வசிகாமணி, உரிமையாளர், கீதம் மேட்ரிமோனியல், மனோதத்துவ டாக்டர் அபிலாஷா ஆகியோரை சந்தித்துப் பேசினோம்.
கீதா தெய்வசிகாமணி
18 வருடங்கள் ஆகிறது இந்த கவுன்சிலிங் மையம் தொடங்கி, முன்பு 100 வரன்களில் 50க்கு 50 என்ற விகிதத்தில் ஆண் பெண் ஜாதங்கள் வரும். தற்போதைய நிலை 100 ஆண்கள் என்றால் 15 பெண்கள் என்ற நிலைக்கு வந்துவிட்டது. பெண்கள் திருமணம் இப்போது வேண்டாம் என்று சொல்கிறார்கள். இது அதிர்ச்சியான விஷயம். இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு பொருளாதாரச் சுதந்திரம் உள்ளது. அந்தக் காலத்தில் படித்த பெண்கள் தங்களது கல்வி அறிவை வீட்டுப் பொருளாதார விஷயங்களை நிர்வகிக்கவும், குழந்தை வளர்ப்பிலும் மட்டும் பயன்படுத்தினார்கள். ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை, தங்கள் படிப்பு வீட்டளவில் முடங்கிவிடக்கூடாது என்பதில் அதிக கவனத்துடன் இருக்கிறார்கள். வெளி உலக எக்ஸ்போஷர் வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
விலைவாசி ஏற்றங்களால் கணவன் - மனைவி இருவரும் சம்பாதித்தாக வேண்டிய சூழலில், அதிக சம்பளம் கிடைப்பதால் தங்களை அறியாமேலேயே பெண்களுக்கு ஈகோ ஏற்பட்டுவிடுகிறது. நிதானம் இருப்பதில்லை. மன முதிர்ச்சி வரும் முன்னரே கை நிறைய பணம் கிடைத்துவிடுவதால் எதையும் துச்சமாக மதிக்கும் மனோபாவம் பெருகிவிட்டது. தங்களது பெற்றோர்களை மட்டுமல்ல யாரையும் மதிக்க வேண்டிய அவசியம் தனக்கில்லை என்ற எண்ணம் தலைக்கேறிவிடுகிறது. சம்பாதித்து சந்தோஷமாக செலவு செய்வதில் நாட்டம் அதிகரித்துவிட்டது. பெற்றோர்களும் தங்களுக்கு பென்ஷனாகக் கிடைக்கும் பணத்தை மகள் ஒரே வருட சம்பளத்தில் கிடைக்கப்பெறுவதால் அவர்களால் எதிர்த்து எதுவும் கேட்க முடிவதில்லை.
ஷிஃப்ட் முடிந்து நள்ளிரவு அயர்ச்சியாக வீடு திரும்பும் மகள் ஏற்கெனவே டென்ஷன், எரிச்சல் இருப்பதால் வீட்டிலாவது நிம்மதியாக இருக்கட்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் கல்யாணப் பேச்சை எடுக்க தயங்குகிறார்கள். சில குடும்பங்களில் தனி அறையில் கதவை அடைத்துக்கொண்டு ப்ராஜெக்ட் பிஸி என்று நீண்ட நேரம் நெட்டில், போனிலும் இருக்கும் அவர்களிடம் நிறைய பெற்றோர்கள் பேசக்கூட தயங்குகிறார்கள்.
மகள் ஃப்ளாட் புக் பண்ணி இருக்கிறாள். அதன் இ எம் ஐ இன்னும் முடியவில்லை என்று எங்களிடம் சொல்லி, அதை மாப்பிள்ளை வீட்டாரிடம் தெளிவு படுத்தச் சொல்லிவிடுவார்கள். அதாவது பெண்ணின் சம்பளம் முழுக்க வீட்டுக் கடனுக்குப் போய்விடும் என்பதைக் சுட்டிக் காட்டிவிடுவார்கள்.
பொருளாதார சுதந்திரம் பெண்களுக்கு இருந்தால் அதுவே போதும் என்று பெற்றோர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். இன்டுவிஜுவாலிட்டி முக்கியம்தான் ஆனால் அதுவே தலைக்கனமாகிவிடக் கூடாது என்று பெற்றோர்கள் அறிவுறுத்துவதில்லை. அவளுக்கென்ன கை நிறைய சம்பாதிக்கறா யாரையும் நம்பி இல்லை என்று இவர்களே ஏற்றிவிடுவது சரியல்ல. இப்படி அடிக்கடி சொல்வதன்மூலம் அவர்களுக்குத் திருமண வாழ்க்கையில் பிடிப்பு இருப்பதில்லை.
வீட்டில் அம்மா அப்பாவிடம் திருமணத்திற்கு சரியென்று ஒத்துக்கொண்டபின் பல பெண்கள் எங்களை நேரில் சந்தித்து தயவுசெய்து இப்போது மாப்பிள்ளைப் பார்க்க வேண்டாம் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்பார்கள். காரணம் கேட்டால் சரியாக பதில் வராது.
திருமணத்திற்கு முன்பான ப்ரீ மேரிட்டல் கவுன்சிலிங் எங்களிடம் உள்ளது. ஜாதகம் பொருத்தத்திற்குப் பின் இருவரும் சந்திக்கும்போது சில பெண்கள் எடுத்தவுடன் மாப்பிள்ளையிடம் உங்களுக்கு என்ன பேக்கஜ், டேக் ஹோம் எவ்வளவு, சொந்த வீடா என்று பல பொருள் சார்ந்த கேள்விகளை அடுக்க, ஆரம்பமே இப்படியா என்று மாப்பிள்ளை அரண்டு அப்செட் ஆகிவிடுவது உண்டு. தவிர சில பெண்களின் பெற்றோர்கள் தங்கள் மகள் மாப்பிள்ளையுடன் தனிக்குடித்தனம் இருக்க வேண்டும் என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறார்கள்.
மாப்பிள்ளை இந்த நிறத்தில் இந்த உயரத்தில் இந்த சம்பளத்தில் இப்படி இருக்க வேண்டும் என்று மனதிற்குள் ஒரு வரைபடத்தை உருவாக்கிக்கொண்டு அதற்கு இம்மி பிசகினாலும் ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக தாங்கள் நினைக்கும் விதத்தில் மாப்பிள்ளை கிடைக்கும்வரை திருமணத்தைத் தள்ளிப் போட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள்.
எல்லாம் கூடி ஒரு வழியாக பெண் திருமணத்திற்கு சம்மதித்து வரன் அமைவதற்குள் முப்பது வயது தாண்டி விடுகிறது. அதன் பின் விளைவுகளை யாரும் யோசிப்பதில்லை. சில காரணங்களால் திருமணத்தைத் தள்ளிப் போட்டு கடைசியில் அவர்களுக்கு வயதாகும்போது திடீரென்று பதற்றமாகி தன் நட்பு வட்டத்தில் பெரும்பாலானோர் வாழ்க்கையில் செட்டில் ஆகியிருக்க, தனிமைப்பட்டுப் போனது போல் விரக்தி அடைவார்கள். இது தவிர ஆஃபிஸ் வேலைகளில் கடுமையான சூழல்களால் மன அழுத்தம் அதிகரிக்கும்.
தேவையற்ற வியாதிகளை இவர்களே வரவழைத்துக் கொள்வார்கள். அதற்குப் பின் திருமணம் நடந்தாலும் அவர்கள் பெற்றோர்களுக்கு அதிக வயதாகிவிட, பிறக்கும் குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வது என்ற பிரச்னையையும் யோசிக்க வேண்டியுள்ளது. க்ரச்சில் விட்டு விட்டு வேலைக்குச் செல்கையில் இன்னும் மனம் அழுத்தம் கூடி ஏன்தான் திருமணம் செய்துகொண்டோமோ என்று தங்களையே குறை கூறுவார்கள். இந்த நிலை பெருகி வரும்போது சமூகப் பிரச்னையாக மாறிவிடுகிறது.
டாக்டர் அபிலாஷா, மன நல மருத்துவர்
இதுக்கு முந்தைய தலைமுறை ஆண்கள் பெண்களுடன் பழகும் வாய்ப்பு மிகவும் குறைவு. நமக்கு என்று ஒரு ஆண் அல்லது பெண் வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் இப்போது சோஷியலைசிங் அதிகமாகிவிட்டதால், ஆண், பெண் நட்பு சமூகம் ஏற்றுக்கொண்ட ஒரு விஷயமாகிவிட்டது.
மனைவியின் ஆண் நண்பர்களைக் கணவனும் கணவரின் நட்புகளை மனைவியும் புரிதலுடன் அணுகும் காலகட்டமிது. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகத்தில் ஆண்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்துவிட்டதால், ஒரு ஆணுடைய தேவை அதற்கு மேல் எதற்கு என்று பல பெண்கள் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். எப்போ அந்தத் தேவையை உணருவாங்கன்னா, சமூக அங்கீகாரத்துக்கும் குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் மட்டும்தான்.
மற்றபடி ஷாப்பிங், ஹோட்டல், தியேட்டர் என்று எங்கு செல்ல வேண்டுமென்றாலும் முன்பெல்லாம் தந்தை, சகோதரர்கள் அல்லது கணவனுடன் மட்டும் சென்று கொண்டிருந்த பெண்கள் இப்போது நண்பர்களுடன் அலுவலக சகாக்களுடன் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அல்லது தனியே போகும் அளவிற்கு துணிவு பெற்றுள்ளார்கள்.
திருமணத்திற்கு தயங்க சில காரணங்கள்
* திருமணம் நிரந்தர கமிட்மென்ட் என்று நினைப்பதால் பொறுப்பேற்கத் தயங்குவது.
* திருமணமான நண்பர்கள் உறவினர்கள் சந்திக்கும் பிரச்னைகளை பிரிவுகளைப் பார்த்து யோசிப்பது.
* வீட்டில் அதிக செல்லம் சலுகைகளுடன் வளர்வதால் பெண்கள் தனது சுதந்திரம் பறி போய் விடுமோ என்று பயப்படுவது.
* ஒரு குழந்தைக்குத் தாயாகி விடுகையில் குடும்பச்சுமை அழுத்தம் தரும். அதன்பின் சந்தோஷம் கிடைக்காது என்று தேவையற்ற பயங்களை உருவாகிக் கொள்வது.
* ‘என்னுடைய சந்தோஷம் ஒரு திருமண உறவில் மட்டுமில்லை' நான் தனியாகவே சந்தோஷமாக இருந்துகொள்ள முடியும்; என்ற தீர்மானமான முடிவை ஆரம்பத்திலேயே எடுப்பது.
* பெற்றோர்கள் தங்கள் கடமை என்று நினைத்த ஒரு விஷயம் மெள்ள மாறிவருகிறது. அடிப்படையான திருமண அமைப்பே மெள்ள மாறி வருவது.
* திருமண வாழ்க்கையின் ஏமாற்றங்கள் ஏற்பட்டால் என்ன செய்வது என்று யோசிப்பது. நிறைய எதிர்மறை எண்ணங்கள் வளர்க்கிறார்கள். திருமண உறவில் நம்பிக்கை இன்மை ஆண்கள் மேல் தவறான அபிப்ராயம். 'வேண்டாம் சிக்கிப்பே'... 'அவ்ளோதான் இனி ஹோம் மேக்கர் குக்கர்' என்று கேலி செய்தும், நண்பர்கள் கொடுக்கும் முன் எச்சரிக்கை என்று பல விஷயங்களால் குழப்பம் அடைகிறார்கள்.
கடந்த தலைமுறையில் பெற்றோர்கள் எப்படியாவது கெஞ்சியோ கட்டாயப்படுத்தியோ தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லியே பெண்களுக்கு திருமணம் செய்துவிடுவார்கள். ஆனால் இந்த காலகட்டத்தில் பிள்ளைகளிடம் அதிக பேசும் வாய்ப்பே பெற்றோர்களுக்குக் கிடைப்பதில்லை. அப்படியே எதாவது சந்தர்ப்பத்தில் சொன்னாலும் அதைக் கேட்கும் மனநிலையில் இன்றைய பிள்ளைகள் இல்லை.
பின்குறிப்பு:-
மங்கையர் மலர் நவம்பர் 2014 இதழில் வெளியானது இக்கட்டுரை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்