
முன்பெல்லாம் குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்து இன்றி இயல்பான எடையைவிட குறைவான எடையுடன் பிறந்தார்கள். இருந்தார்கள். எனவே, உலகம் முழுவதுமே ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகள் மிகப்பெரிய பிரச்னையாக இருந்தார்கள். ஆனால் இப்போது பிறக்கும் குழந்தைகளில் பெரும்பாலான குழந்தைகளுக்கு உடல் பருமன் ஒரு பெரிய பிரச்னையாக மாறிவருகிறது. பல நாடுகளில் உடல் பருமன் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகிய இரண்டையும் பல குழந்தைகள் எதிர்கொள்கின்றனர்.
இது உலக வரலாற்று சுகாதாரத்தில் பெரிய உருமாற்றம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். யூனிசெஃப் அளித்துள்ள தரவுகளின்படி 5 முதல் 19 வயதுக்கு உட்பட்ட 18.8 கோடி குழந்தைகளின் தோராயமாக பத்தில் ஒருவருக்கு தற்போது உடல் பருமன் இருக்கிறது. 2000ம் ஆண்டில் இது வெறும் 3 விழுக்காடாக இருந்தது. ஆனால் தற்போது இது 9.4 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதற்கு முழுக் காரணம் அவர்கள் உண்ணும் உணவுதான் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
முன்பெல்லாம் காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், புரதம் நிறைந்த உணவுகள் நமது வாழ்க்கையின் உனவு முறையில் அதிகம் இருந்தன. இவை குறைந்த கலோரிகளுடன் நம் உடலுக்கு அதிக ஊட்டச்சத்துக்களையும் வழங்கி வந்தன. ஆனால் இப்போதெல்லாம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குழந்தைகள் அதிகமாக உண்கின்றனர். இதனால் குழந்தைகளுக்கு உடல் பருமன் டைப் 2 நீரிழிவு,இதய நோய், புற்று நோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுகின்றன. குழந்தைகளின் வளர்ச்சி, அறிவாற்றல், மனநலம் ஆகியவையும் இந்த உணவுமுறையால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
குழந்தைகளின் உடல் பருமன் அதிகரிப்பதாக 190 க்கும் மேற்பட்ட நாடுகளின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு யூனிசஃப் தெரிவிக்கிறது துணை சஹாரா, ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு ஆசியாவை தவிர கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளிலும் குறைவான குழந்தைகளை விட எடை அதிகமான குழந்தைகள்தான் அதிகமாக இருக்கின்றார்கள். உலக அளவில் 5 குழந்தைகளில் ஒருவருக்கு உடல் பருமன் உள்ளது.பசிபிக் தீவு, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளிலும் குழந்தைகளின் உடல் பருமன் பிரச்னை அதீத கவலையை ஏற்படுத்தி உள்ளது.
குளிர்பானங்கள், பிஸ்கட் போன்ற அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் குழந்தைகளின் உடல்பருமனுக்கு காரணமாக இருப்பதாகக் ஆய்வுகள் கூறுகின்றன. இவற்றில் பெரும்பாலும் சர்க்கரை, கொழுப்பு, உப்,பு செயற்கை இனிப்புகள் அதிகமாக உள்ளன. கவர்ச்சிமிகு விளம்பரங்கள் இந்த பொருள்கள் மூலம் குழந்தைகளின் உணவு விருப்பத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பழங்கள், காய்கள், புரதம் நிறைந்த பாரம்பரிய உணவுகளால் மட்டுமே இந்த பிரச்னையை சரிசெய்ய முடியும் என்ற நிபுணர்கள் கூறுகின்றனர்.
குழந்தை பருவத்தில் அதிக எடை அல்லது உடல் பருமனாக அவர்கள் இருப்பது அவர்களின் வாழ்நாள் முழுவதும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். குழந்தைகளின் அறிவாற்றலையும் மன ஆரோக்கியத்தையும் இது வெகுவாக பாதிக்கிறது என்பதே உண்மை. குழந்தைகளின் உடல் பருமன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர்கள் பள்ளிகளிலும், வீடுகளிலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.
அரசு இவ்வாறான உணவுகளுக்கு கூடுதல் வரிகளை விதிப்பதன் மூலம் இவற்றின் பயன்பாட்டை குறைக்கலாம். பொதுமக்களிடையே இதைச் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு கலை நிகழ்ச்சிகளை சமூக ஆர்வல அமைப்புகள் பொது வெளிகளில் நடத்தலாம். தற்போது குழந்தைகளின் உடல் பருமன் பிரச்சனையை தடுக்கத் தவறினால் அது பிற்காலத்தில் மிகப்பெரிய பொருளாதாரத்தில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
குழந்தைகளிடையே அதீத உடல் பருமனைத் தவிர்க்க அவர்களை ஆரோக்கியமான இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்ள பெற்றோர்கள் பழக்க வேண்டும். அதற்கான சூழலையும் வீட்டிலும், சமூகத்திலும் ஏற்படுத்த வேண்டும்.
உடல் பருமன் குழந்தைகளின் வாழ்நாள் முழுவதும் உடல் ரீதியான பிரச்னை ஏற்படுத்தும் எனவே தொடக்கத்திலேயே இதில் தலையிட்டு அவர்கள் ஆரோக்கியமான வாழ்வு வாழ்வினை வாழும் சூழ்நிலையை உருவாக்குவது நம் அனைவரின் கடமையாகும். பருமனானக் குழந்தைகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கலாம். ஆனால், அதுவே அவர்களுக்கு ஆபத்தினைக் கொண்டுவரலாம். இதனை மனதில் கொண்டு இனியாவது செயல்படுவோம்.உறுதிமிக்க எதிர்கால இந்தியாவை உருவாக்குவோம்.