
இந்தியாவில் 5.5 கோடி கைம்பெண்களும், தமிழகத்தில் 41 லட்சம் கைம்பெண்களும் இருப்பதாகக் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பெண்கள் கணவரை விதியால் இழக்கிறார்கள். விரும்பி இழப்பதில்லை. எதிர்வரும் பிரச்னைகளை எதிர்கொள்வதை விட, பலர் இறக்க விரும்புகிறார்கள். ஆனால் தம் குழந்தைகளின் நிலை கருதி வாழ முற்படுகிறார்கள். அவர்கள் அனாதைகளாகிவிட்டால், குழந்தைகளை யாரும் கவனித்துக் கொள்ள மாட்டார்கள் என நினைக்கிறார்கள்.
கணவனின் வேலையின்மை, அதீதக் குடிப்பழக்கம், விபத்து, நோய் ஆகியவற்றால் இளம்வயதிலேயே பலர் கைம்பெண்கள் ஆகின்றனர். கிராமப்புறமோ, நகர்ப்புறமோ கைம்பெண்களின் முன் இருக்கும் சவால்கள் பல. கணவன் இறந்த பிறகு எல்லா பெண்களுமே பொது நிகழ்வுகளில் சுதந்திரமாகக் கலந்துகொள்ளும் உரிமையை இழந்துவிடுகிறார்கள். அவர்கள் நல்ல உடை உடுத்துவதோ, அலங்காரங்கள் செய்துகொள்வதோ இன்றுமே தவறாகவே பார்க்கப்படுகிறது. காலையில், அவர் முகத்தில் விழித்தால் எந்த நல்ல செயலும் நடக்காது என்று இன்றைக்கும் பலர் கருதுகின்றனர். தான் பெற்று வளர்த்த மகள்/ மகன் திருமண நிகழ்வுகளை அவரே முன்நின்று நடத்த முடிவதில்லை.
கணவரின் திடீர் மறைவு பெண்களில் பலரை ஒரு பெரிய மன அழுத்தத்திற்கு ஆளாக்குகிறது. இது மனச்சோர்வு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளில் சென்று முடிகிறது. இவ்வாறான பெண்கள் மனதைரியத்தை மீளப்பெறுவது மிகவும் அவசியம்.
மேம்பட்ட தொழில்நுட்ப திறன்களைக் கொண்ட இளம் தலைமுறையினருடன் இவர்களால் வேலைச்சந்தையில் போட்டியிடவும் முடிவதில்லை. அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வேலை வாங்கித் தருவது, அவர்களின் படிப்புக் கட்டணத்தை செலுத்துவது, அவர்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வது ஆகியவற்றை செய்ய வேண்டி உள்ளது. முறைசாரா துறைகளில் மட்டுமே இவர்களால் வேலைகளை பெற முடிகிறது. அங்கும் அவர்கள் மிகவும் ஏய்க்கப்படுகிறார்கள்.
கைம்பெண்கள் பணியிடத்திலும், அவர்களது சுற்றுப்புறங்களிலும் பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதை ஊடகங்கள் மூலம் தெரியவருகிறோம். சமீபத்தில் திருமண இணையதளங்கள் மூலம், தனியாக இருக்கும் விவாகரத்து செய்யப்பட்ட மற்றும் விதவை பெண்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதை ஊடகங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தன.
ஆனால் எந்த ஒரு பெண்ணும் தமக்கு இழைக்கப்படும் கொடுமைக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதில்லை. குடும்ப உறுப்பினர்களின் ஆதரவின்மை மற்றும் சமூகத்தின் அலட்சியமே இதற்குக் காரணம். பெரும்பாலான பெண்கள் அச்சத்தால் காவல்துறையை அணுகுவதில்லை. இவ்வாறான பெண்கள் ஆதரவற்று இருக்கிறார்கள்.
வயதான கைம்பெண்களை சரியான பராமரிப்பின்மை, உணவு பற்றாக்குறை, அதிகரித்து வரும் மருத்துவ செலவுகள் ஆகியவை தற்கொலைக்கு கூட தள்ளிவிடுகின்றன. இவர்களில் பலர் வேலைக்குச் சென்றாலும் போதிய வருமானம் கிடைப்பதில்லை. அத்துடன் பொது வெளியில் பலரின் பழிச்சொல்லுக்கும் ஆளாகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் போன்றவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசால், ‘கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்’ அமைக்கப்பட்டது. அவர்களுக்கான கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் போன்றவற்றை வழங்குவது இதன் நோக்கமாகும்.
நிதி சார்ந்த சுதந்திரம் கைம்பெண்களின் மன அழுத்தத்தை ஓரளவு குறைக்கும். கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்குக் கல்வித் தகுதியின் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். கைம்பெண்களுக்கு அரசு நிதியுதவி வழங்கி, நிலம் வாங்குவதற்கும் வீடு கட்டுவதற்கும் உதவ வேண்டும். மேலும் புறம்போக்கு பகுதிகளில் வசித்துவரும் பெண்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவினை அரசு வழங்க வேண்டும். தரிசு நிலங்களை கைம்பெண்களின் சுய உதவிக் குழுக்களுக்கு இலவசமாகக் கொடுத்துக் கூட்டு இயற்கை விவசாயம் செய்ய உதவலாம்.
தமிழகத்தில் உள்ள கைம்பெண்கள் குறித்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். அந்த அடையாள அட்டை அரசு சலுகைகளை பெறுவதற்கு அவர்களுக்கு உதவும். பெண்களின் உரிமைகளை பாதுகாக்க ‘கைம்பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம்’ கொண்டுவரப்பட வேண்டும்.
‘தேசியக் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட மகளிர் ஆணையம்’ ஒன்றை மத்திய அரசு உருவாக்கி, அதன் மூலம் தேசிய அளவில் கைம்பெண்கள், மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களை ஒருங்கிணைத்து, அவர்களுடைய பிரச்னைகளை தீர்க்க அவ்வாணையம் உதவ வேண்டும்.
கைம்பெண்கள் வாழ்வு குறித்த சமூகத்தின் பார்வை மாற வேண்டும். எல்லா மதங்களும், மத்திய மாநில அரசுகளும் கைம்பெண்களுடைய மறுமணத்தை ஆதரிக்கின்ற வகையில் சட்டமியற்ற வேண்டும். இவர்களின் வாழ்க்கை எல்லா நிலைகளிலும் மேம்பட வேண்டும். அவர்களும் மாண்புடனும் மதிப்புடனும் சமூகத்தில் வாழ வேண்டும். அதற்கான முனைப்புகளை அரசும், சமூகமும் தீவிரமாக எடுக்க வேண்டும்.