மூன்று பெரும் போர்களில் மருத்துவ சேவை! இந்திய விமானப்படையில் முதல் பெண் அதிகாரி! யார் இந்த விஜயலட்சுமி?

இந்திய விமானப்படையில் முதல் பெண் அதிகாரியாக தடைகளை தகர்த்த விங் கமாண்டர் டாக்டர் விஜயலட்சுமி ரமணன், மூன்று போர்களிலும் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணராக சேவை செய்து, பெண்களின் இராணுவ பங்களிப்புக்கு புதிய பாதை திறந்த முன்னோடி.
first women wing commander  - Vijayalakshmi Ramanan
first women wing commander - Vijayalakshmi Ramanan
Updated on
MM strip
MM strip

விங் கமாண்டர் டாக்டர் விஜயலட்சுமி ரமணன் அவர்கள், இந்திய ராணுவ வரலாற்றில் ஒரு முன்னோடிப் பெண்மணியாகத் திகழ்ந்தார். இவர், இந்திய விமானப்படையில் அதிகாரியாகப் பதவியேற்ற முதல் பெண்மணி என்கிற‌ பெருமையை பெற்றார்.

பிப்ரவரி 27, 1924 ஆம் ஆண்டில், மெட்ராஸில் பிறந்த இவர், ஆயுதப்படைகளில் பெண்களின் பங்களிப்பு என்று கேள்விப்படாத மற்றும் அப்படிப்பட்ட ஒன்றை சிந்திக்கவே முடியாத  காலகட்டத்தில், பாலினத் தடைகளை உடைத்தெறிந்தார்.

“விஜி” என்று அன்புடன் அழைக்கப்படும் விஜயலட்சுமி ரமணன் அவர்கள், பாரம்பரியம், இசை மற்றும் பொதுச் சேவையில் ஊறிய ஒரு குடும்பத்தில் பிறந்தார். முதலாம் உலகப் போரில் பங்கேற்ற வீரரும் மற்றும் மெட்ராஸில் பொது சுகாதார அதிகாரியாகவும் இருந்த அவருடைய தந்தை டி.டி. நாராயண ஐயர், ஒழுக்கம் மற்றும் தேசிய சேவை ஆகிய நற்பண்புகளை விஜயலட்சுமிக்கு சிறு வயதிலிருந்தே ஊட்டி வளர்த்தார்.

தன் தந்தையின் முன்மாதிரியாலும், சரோஜினி நாயுடு மற்றும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்ற முன்மாதிரி பெண்களாலும் உத்வேகம் அடைந்து, அவர் முழு மனதுடன் மருத்துவத் துறையில் ஈடுபட்டார்.

1943-ல், அவர் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.  கல்வியில் சிறந்து விளங்கிய அவர், மருத்துவத்திற்கான பால்ஃபர் நினைவுப் பதக்கத்தையும், அறுவை சிகிச்சைக்கான மெட்ராஸ் பல்கலைக்கழகப் பரிசையும் பெற்றார்.

இதையும் படியுங்கள்:
இந்திய வரலாற்றின் இலக்கணத்தையே மாற்றிய ஐந்து 'நெருப்புப் பெண்கள்'!
first women wing commander  - Vijayalakshmi Ramanan

1948-ல், அவர் சிறந்த  மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்தில்  எம்.டி. பட்டத்தை முடித்தார். இராணுவ சேவையில் சேருவதற்கு முன்பு, அவர் சென்னையில் உள்ள எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றினார். அதுவே, அவருடைய  மருத்துவத் திறன்களை மெருகேற்றியதென்றே சொல்லலாம்.

1955-ல், விஜயலட்சுமி அவர்கள், இந்திய விமானப்படை அதிகாரியான விங் கமாண்டர் கே.வி. ராமணனைத் திருமணம் செய்து கொண்டார். அவர் விஜயலட்சுமியை விமானப் படையில் சேர ஊக்குவித்தார். இந்திய விமானப்படையில் ஒன்றாகப் பணியாற்றிய ஆரம்பகால கணவன்-மனைவி ஜோடிகளில் இவர்களும் அடங்குவார்கள்.

1955 ஆகஸ்ட் 22 அன்று, விஜயலட்சுமி ரமணன் குறுகிய காலப் பணி நியமனத்தின் கீழ் இந்திய ராணுவ மருத்துவப் படையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டு, உடனடியாக இந்திய விமானப் படைக்கு மாற்றப்பட்டார். இதன் மூலமாக, இந்திய விமானப் படை வரலாற்றில் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை இவர் பெற்றார்.

1956 முதல் அவர் பிரத்தியேகமாக விமானப் படை மருத்துவமனைகளில் பணியாற்றி, படிப்படியாகப் பதவி உயர்வு பெற்றார். பறக்கும் அதிகாரி (1955), விமான லெப்டினன்ட் (1956), ஸ்குவாட்ரன் லீடர் (1960), மற்றும் விங் கமாண்டர் (22 ஆகஸ்ட் 1972). 24 ஆண்டுகள் முன்மாதிரியான சேவைக்குப் பிறகு, 4971 MED என்ற சேவை எண்ணுடன் 1979 ஆம் ஆண்டில், பிப்ரவரி 28, அன்று அவர் ஓய்வு பெற்றார்.

first women wing commander
first women wing commander

தம்முடைய சிறப்பான 24 ஆண்டு காலப் பணியில், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணராக அர்ப்பணிப்போடு பணியாற்றிய இவர், மூன்று பெரும் போர்களின் போது முக்கிய மருத்துவ சேவைகளை வழங்கினார் என்பது மிகவும் போற்றப்பட வேண்டிய விஷயமாகும்.

இன்றளவும் விமானப் படை பெண் அதிகாரிகள் அணியக்கூடிய புகழ் பெற்ற புடவை சீருடையை  இவர் தான் வடிவமைத்தார்; மேலும், தன்னுடைய முன்மாதிரியான சேவைக்காக விசிட்ட சேவா பதக்கத்தையும் பெற்றார்.

இதையும் படியுங்கள்:
50 வயதிலும் 25 வயது தோற்றம்.. தளபதி விஜய்யின் சூப்பர் ஃபிட்னஸ் சீக்ரெட் இதுதான்!
first women wing commander  - Vijayalakshmi Ramanan

அக்டோபர் 18, 2020 அன்று தன்னுடைய 96-வது வயதில் இவர் காலமானார். இவர் மறைந்த போதிலும், பெண்களுக்கு முன்மாதிரியாக துணிச்சல், எதையும் எதிர் கொள்ளும் திறன் மற்றும் அமைதியான உறுதிப்பாடு ஆகியவற்றை ஒரு மரபுச் சின்னமாக விட்டுச் சென்றுள்ளார். 

logo
Kalki Online
kalkionline.com