மனோரமாவின் பேச்சும் 'தாய் கிழவி' ராதிகாவும்!

Thaai Kizhavi Radhika - Manorama
Thaai Kizhavi Radhika - Manorama
Published on
Mangayar malar strip
Mangayar malar strip

இந்த திரைப்படத்தை நேற்று பார்த்தேன். இடைவேளையின் போது ஒரு சின்ன நெருடல். இந்தப் படத்தில் ஏன் ராதிகா நடிக்க வேண்டும், வேறு யாரையாவது போட்டு எடுத்து இருக்கலாமே, இதுல வேற விளம்பரம் எல்லாம் ரொம்ப பில்டப் கூட்டி ஓவரா சீன் போட்டுட்டாங்க என்று தான் நினைத்தேன்.

ஆனால் கிளைமாக்ஸ்-ல் ராதிகா இது எனக்கான படம் என்பதை நிரூபித்து விட்டார்.

தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி Women empowerment, feminism போன்ற வார்த்தைகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் அவர், படத்தில் அதைப் பற்றி பேசும் போது 'இவர் தான் சரியான செலக்சன்' என்று கைதட்ட தோன்றுகிறது. அதிலும் கடைசி காட்சியில் தன் மகளிடம் "தலையை நிமிர்த்தி தாலியை வாங்குடி" என்று சொல்லும் போது மனதுக்குள் புல்லரித்தது.

ஒருமுறை தொலைக்காட்சி இன்டர்வியூவில் மனோரமா பேசும் போது, "என் கணவர் இறந்தாலும் நான் இப்பொழுதும் பூவும் பொட்டும் வைத்துக் கொள்கிறேன்" என்று பேசிக் கொண்டிருந்தார்.

இதைப் பார்த்த என் பாட்டி, "இதையெல்லாம் ஒரு 30 வருஷத்துக்கு முன்னாடியே சொல்லி இருந்தா இந்த நீல சேலைய கழத்தி தூர போட்டுட்டு எனக்கு பிடிச்ச மஞ்ச கலர் செவ்வந்தி பூவ கொண்டை முழுசும் சுத்தி கண்டாங்கி சேல கட்டிகிட்டு கோயிலுக்கு போயிருப்பேன்".

பாட்டியின் ஆசை நிராசையாக போனதென்றாலும் அந்த வயதில் என் மனதில் அப்படியே பதிந்து விட்டது.

என் அப்பா இறந்த பிறகும் என் அம்மா நீல சேலை அல்லது வெள்ளை சேலை தான் உடுத்த வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை. இப்போது வரையிலும் அவருக்கு பிடித்த சேலையை கட்டிக் கொண்டுதான் இருக்கிறார். எங்கள் ஊரில் மட்டுமல்ல, இப்பொழுது குக்கிராமங்களில் கூட கணவனை இழந்த பெண்கள் பூ, பொட்டு வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

மனோரமா போன்ற சினிமா நடிகைகள் தைரியமாக இதைப்பற்றி பேசி மக்கள் மனதில் பதிய வைத்ததும் இந்த மாற்றத்துக்கு ஒரு முக்கியமான காரணம்.

அது போல தான் ராதிகாவும். பெண்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் உழைத்து முன்னேற வேண்டும் என்பதை நிறைய பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
"மனைவியா? கணவரா? - ராதிகாவின் 'தாய் கிழவி' vs சரத்குமாரின் 'ஆழி'... எது பெஸ்ட்?
Thaai Kizhavi Radhika - Manorama

90-களில் சுஹாசினி இயக்கிய 'பெண்' தொலைக்காட்சி தொடரிலும் இது மாதிரியான கதாபாத்திரத்தில் அதாவது 'தனித்து நின்று ஜெயித்துக் காட்டுவேன்' என்ற கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பார். ஒருவேளை அந்த மாதிரியான பாத்திரங்கள் தான் அவரை வாழ்க்கையில் சுயமாய் முன்னேற வேண்டும் என்று ஊக்கப்படுத்துகிறதா அல்லது அவரின் மனதில் இருக்கும் இந்த எண்ணம் தான் இது மாதிரியான கதாபாத்திரங்களை அவர் தேர்வு செய்ய உதவுகிறதா! எது எப்படியோ சொந்தக்காலில் நின்று ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற வெறி அவரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி இன்றுவரையிலும் உழைக்க வைக்கிறது.

இந்தப் படத்தில் ராதிகாவை நடிக்க வைத்ததன் மூலம் அந்த கேரக்டருக்கு நூறு சதவீதம் நியாயம் செய்திருக்கிறார் இயக்குனர் சிவகுமார் முருகேசன். அவருக்கு பாராட்டுக்கள்.

கடைசி கட்சியில் தன் வீட்டுப் பெண்கள் அனைவரையும் மாடிக்கு அழைத்து அவர்களிடம் 'பெண்கள் யாருக்கும் பயப்படக்கூடாது, சொந்தமாக முயற்சி செய்து முன்னேற வேண்டும்' என்று ராதிகா பேசுவது பிரசங்கம் மாதிரி இருந்தாலும் இதுவும் மனோகரமாவின் தொலைக்காட்சி இன்டர்வியூ மாதிரி தான். கண்டிப்பாக ஒவ்வொருவரின் மனதிலும் பதிந்து உடை விஷயம் முதல் உள்ள விஷயம் வரை பெண்கள் மூடிக்கொண்டு தான் இருக்க வேண்டும் என்ற ஆண்களின் சுயநல வலையில் இருந்து வெளியே வர இதுவும் ஒரு நாள் உதவும்.

வாழ்த்துக்கள் ராதிகா!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com