பொதுவாகவே அனைவருக்குமே, ஆண் பெண் யாராக இருந்தாலும் சரி, பதட்டத்தை சமாளிப்பது என்பது மனதிற்குள்ளேயே நடக்கும் ஒரு அமைதியான போராட்டத்தை போன்றது. ஆனால் அதற்கான மூல காரணம் நமது ஹார்மோன்களில் மறைந்திருந்தால் என்ன செய்வது? பெண்களுக்கு தான் இந்த பிரச்சனை அதிகமாக இருக்கிறது.
பெண்கள் மன அழுத்தத்தை எவ்வாறு அனுபவிக்கிறார்கள் மற்றும் சமாளிக்கிறார்கள் என்பதை தீர்மானிக்கு காரணிகள் ஒன்றல்ல, பல இருக்கின்றன. ஹார்மோன்களின் (Women's hormones) ஏற்ற இறக்கங்கள், மரபணு பாதிப்புகள், குடும்ப சூழ்நிலை, பொருளாதாரம், கலாச்சார எதிர்பார்ப்புகள் என சொல்லிக் கொண்டே போகலாம்.
இவையெல்லாம் ஒன்று சேர்ந்து அவர்களின் வாழ்க்கையை தனிப்பட்ட முறையிலும் பாதிக்கின்றன. பெண்கள் அன்றாடம் எவ்வாறு செயல்படுகிறார்கள், அவர்களின் உறவுகள் மற்றும் வாழ்க்கைத் தரம் உட்பட அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் இது பாதிக்கிறது.
ஹார்மோன்களால் உண்டாகும் தாக்கம்:
பெண் ஹார்மோன்களாகிய ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன், இவை இரண்டினால் பெண்களுக்கு பதட்டக் கோளாறுகளுக்கு ஆளாகும் தன்மையானது அதிகமாகலாம். இந்த ஹார்மோன்கள் மாதவிடாய் சுழற்சி, கர்ப்பம், பிரசவத்திற்குப் பிந்தைய மற்றும் மாதவிடாய் நிறுத்தத்தின் போது ஏற்ற இறக்கமாக இருக்கும். ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன், மற்ற ஹார்மோன்களுடன் சேர்ந்து, மனநிலையை ஒழுங்குபடுத்தவும் மன அழுத்தத்தை நிர்வகிக்கவும் உதவும் செரோடோனின் மற்றும் GABA போன்ற நரம்பியல் கடத்திகளைப் பாதிக்கலாம்.
இந்த ஹார்மோன் மாற்றங்கள் உணர்ச்சி உணர்திறன், மனநிலை மாற்றங்கள் மற்றும் மன அழுத்தத்திற்கு எதிர்வினையாற்ற வழிவகுக்கும். PMS (மாதவிடாய்க்கு முந்தைய நோய்க்குறி) மற்றும் PMDD (மாதவிடாய்க்கு முந்தைய டிஸ்ஃபோரிக் கோளாறு) போன்ற நிலைமைகள் இன்னும் தீவிரமானவை. அந்த சமயத்தில் நிகழும் ஹார்மோன் மாற்றங்கள் பதட்ட அறிகுறிகளை மேலும் தீவிரப்படுத்தும்.
பெண்களின் அன்றாட வாழ்க்கையில் உண்டாகும் அழுத்தங்கள்:
பெண்களை பொறுத்த வரையில் தாய், மகள், மனைவி, சகோதரி, பராமரிப்பாளர், பணியாளர், முதலாளி என பலவிதமான ரோல்களை மேனேஜ் செய்ய வேண்டி இருக்கிறது. வீட்டுப் பொறுப்புகளை வேலைப் பொறுப்புகளுடன் சேர்ந்து சமநிலைப்படுத்தும் போது அவர்களுக்கு உணர்ச்சி ரீதியான அழுத்தமும் ஏற்படுகிறது.
பணியிடத்திலிருந்து வரும் மன அழுத்தம், வீட்டில் உள்ளவர்களின் எதிர்பார்ப்புகள் என எல்லாம் இணைந்து, அவர்களுக்கு உடல் ரீதியாகவும் மனதளவிலும் சோர்வு ஏற்படுகிறது. இந்த அழுத்தங்கள் ஒரு பெண்ணின் மன நலனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, வயிற்று வலி, சோர்வு, mood change, irritation என பலவிதமான பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். இது பெண்கள் மன அழுத்தத்தை உள்வாங்கிக் கொள்ளும் விதத்தின் மூலமாக அதிகரிக்கலாம் மேலும் பதட்டமும் உண்டாகலாம்.
இதற்கான தீர்வு:
ஹார்மோன்களின் பாதிப்பு ஒரு பக்கம் இருக்கும் நிலையில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக மேற்கூறிய குடும்பம் மற்றும் பணியிடங்களில் ஏற்படும் பிரச்னைகளின் காரணமாக பெண்களுக்கு மன அழுத்தம் அதிகரித்து பதட்டமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
பெண்கள் அதிகப்படியான மனஅழுத்தத்தை உணரும் போது அதை வெளிப்படையாக மருத்துவரிடம் போய் கூறி அதற்கான ஹார்மோன் சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லா வேலைகளுக்கும் இடம் ஒதுக்குவது போல் தனக்கென சிறிது நேரத்தை ஒதுக்கி ஓய்வெடுக்க வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனைப்படி ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக வீட்டில் உடனிருக்கும் பெற்றோர்கள், கணவன்மார்கள், மகன்/மகள் மற்றும் உள்ள அனைவரும் அவர்களை அனுசரித்து தங்களால் முடிந்த வேலைகளை செய்து கொடுத்து அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.