

திட்டமிட்டு வேலை பார்க்கும் போது எந்த வேலையாக இருந்தாலும் சரி அதை சீக்கிரமாகவே முடித்து விடலாம். ஒவ்வொரு நாளும் இரவில் தூங்கச் செல்லும் முன், மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளை பற்றி குறிப்பெடுத்து வைத்து கொள்ளுங்கள்.
தினமும் காலையில் எழுந்தவுடன், இன்றைக்கு இதைச் செய்ய வேண்டும் அதைச் செய்ய வேண்டும் என்று மனதிற்கு இடும் சுய கட்டளை 'சங்கல்பம்' எனப்படும். இது மிகவும் வலிமை மிக்கதாக கருதப்படுகிறது. இது வாழ்க்கைய இலகுவாக்குகிறது. பிரச்னைகள் முழுவதையும் தீர்க்க உதவுகிறது. இது நம் மனதிடமும், இறைவனிடமும் முறையிட உதவும் சுருக்கெழுத்து. உலகின் பெரும் வெற்றியாளர்கள் உருவாவதற்கு காரணமாக இருப்பது அவர்கள் மேற்கொள்ளும் 'சங்கல்பமே'.
உங்கள் மற்றும் உங்கள் குழந்தைகள் தொடர்புடைய, நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்களை உடனடியாக டைரியில் குறித்து வைத்து விடுங்கள். ஒவ்வொரு நாள் இரவிலும் தூங்கச் செல்லும் முன் அந்த டைரியை புரட்டிப் பார்த்து மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளை பார்த்து அதற்கேற்ப திட்டமிடுங்கள்.
ஒவ்வொரு நாளும் காலையில் இருந்து இரவு வரையுள்ள வேலைகளை திட்டமிட்டு, குறித்த நேரத்திற்குள் செய்து முடிக்க பழகி அதை வழக்கமாக்குங்கள். ஒவ்வொரு வேலைக்கும் போதுமான நேரம் ஒதுக்கினால் அவசரப்பட வேண்டியதில்லை, நிதானமாகவும், அமைதியாகவும் அந்த வேலைகளை செய்து முடிக்கலாம்.
வேலைக்கு கிளம்பினாலும் சரி இல்லை வேறு எங்கும் கிளம்பினாலும் சரி, புறப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கும் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே கிளம்பி விடுங்கள். அது வீண் டென்சனையும், அவசர நிலையையும் தவிர்க்கும்.
எப்போதும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்காமல், இடையறாத வேலைகளில் இருந்து வேலைக்கு இடையூறு இல்லாமல் நாமாக ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு சிறிய பிரேக் தான் 'ரிலாக்ஸ்'. அது வேறு ஒன்றுமில்லை உடலை நெட்டி முறித்து கொள்வது, ரிலாக்ஸாக கொஞ்சம் தண்ணீர் / தேநீர் குடிப்பது, யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டு பேசுவது... அவ்வப்போது உங்களை இப்படி ரிலாக்ஸ் செய்து கொள்வது வேலையை இன்னும் சிறப்பாக செய்ய உதவுவதோடு பிரஷர், சுகர், இதயக் கோளாறுகள் வராது தடுக்கலாம். மனமும் தெளிவடையும்.
வேலைக்கு செல்லும் பெண்கள் (Working women) வேலை முடிந்து வீடு திரும்பும் போதே, வீட்டில் என்னென்ன வேலைகள் உள்ளன? அவற்றில் எது முதலில்? அடுத்தது எது? என்பதை தீர்மானித்து கொள்ளுங்கள். அதை மறந்து விட்டு வீடு சென்றவுடன் டிவி, செல்லை பார்த்தால், அவ்வளவு தான் எல்லாம் பாதிக்கப்பட்டு விடும். டிவி மற்றும் செல் பார்க்க என் குறிப்பிட்ட நேரம் ஒதுக்குங்கள்.
தினமும் சில நிமிடங்கள் உங்களுக்கு பிடித்ததை படியுங்கள், அன்றாடம் சில பக்கங்களையாவது படியுங்கள். நீங்கள் படித்ததில் பிடித்ததை அல்லது உங்களுக்கு தோன்றும் புதிய சிந்தனைகளை குறிப்பு எடுத்து டைரி அல்லது எதிலாவது எழுதுங்கள். புதிதாக ஏதேனும் ஒரு 'ஹாபி'யை கண்டறிந்து அதில் சில நிமிடங்கள் செலவழியுங்கள். இதனால் மனசு லேசாக மாறுவதுடன் உங்கள் மூளைக்கு நல்ல பயிற்சியாக அமையும். மறதி நோய் வராமல் தடுக்கும்.
சமையல் பொருட்களையும், சமையலையும் மட்டும் சுத்தமாக வைத்துக் கொண்டால் போதாது. சமையல் அறையையும் சுத்தமாக வைத்திருந்தால் மட்டுமே முழுமையான ஆரோக்கியம் கிடைக்கும். சமையல் அறை வேலைகளில் ஈடுபடும் போது 'ஏப்ரான்' கட்டி சமைப்பது பாதுகாப்பானதாகவும் சவுகரியமாகவும் இருக்கும்.
வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சி நிலவ சில விஷயங்களில் ரகசியம் காப்பது அவசியம் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். அதில் முக்கியமாக இந்த ஐந்து வாழ்வியல் நெறிமுறைகளை வலியுறுத்தி இருக்கிறார்கள்.
1. அடைய வேண்டிய லட்சியம்
2. உங்கள் பொருளாதார நிலைமை
3. தனிப்பட்ட விஷயங்கள்
4. உங்கள் சின்ன சின்ன ஆசைகள்
5. செய்த நல்ல விஷயங்கள் மற்றும் தர்ம காரியங்கள்.