புது வாழ்க்கை!

புது வாழ்க்கை!
Updated on

சுசீலா மாணிக்கம்

ஓவியம்: வேதா

ருத்துவமனை ரிசப்ஷன். ஒரு சேரில் அமர்ந்திருக்கிறாள் சசி.

"மருந்து வாங்கிக் கொடுங்க"

"கஞ்சி வாங்கிட்டு வாங்க"

"தமிழரசி அட்டண்டர் யாருங்க?"

மைக்கில் விதவிதமான அறிவிப்புகள்.

அறிவிப்புக்குத் தகுந்தாற்போல, ஓர் அப்பாவோ, அம்மாவோ, அண்ணனோ, தங்கையோ, கணவனோ மனைவியோ மகனோ மகளோ மருத்துவ மனைக்குள் ஓடுவதும் திரும்புவதுமாய் அங்கே ஒரு  சூழ்நிலை. அங்கிருந்தவர்களின் ஏதோ ஓர் உயிர் இணைப்பு அமைதியாய் ஐ.சி.யூவில் துயில்கொண்டிருக்க ரிசப்ஷனில் அமர்ந்திருக்கும் உறவுகள் துயிலிழந்து தவித்துக்கொண்டிருந்தார்கள்.

இவை அனைத்தையும் கவனித்துக்கொண்டே தனது நினைவுகளில் மூழ்கிக் போகிறாள் சசி. சசியின் கணவன் இப்போது ஐ.சி.யூவில் ஆஞ்சியோ பண்ணப்பட்டிருக்க இரண்டு வருடங்களுக்கு முன் தனக்கும் கணவனுக்குமான உறவில் ஏற்பட்ட பிணக்கும் அதனால் தன்னையும் தன் மகளையும் விட்டுவிட்டு ஓடிவிட்ட கணவரையும் நினைத்து புன்னகைத்துக் கொள்கிறாள். முப்பது வருடங்களான வாழ்க்கை பொய்யானதை நினைத்தும் இரண்டு வருடங்களில் அவள் பட்ட மனஅழுத்தங்களும் குடும்ப சமுதாய உறவுச் சிக்கல்களையும் எல்லாவற்றையும் தனி ஒரு பெண்ணாகச் சமாளித்த வீரத்தையும் அந்தப் போராட்டங்கள் கொடுத்த மனஉறுதியும் மனதில் நிழற்படமாய் ஓட நிமிர்ந்து உட்கார்ந்துகொள்கிறாள் சசி.

அந்த இருதயச் சிறப்பு மருத்துவமனையில் எந்த ஒரு நோயாளிக்கும் துணை இருக்க அனுமதி இல்லை என்பதால் தான்மட்டும் தனியே வந்துள்ளதாக நினைத்துக்கொண்டு ஆயாசமாக கண்களை மூடிக்கொள்கிறாள்.

திடீரென "தெய்வமே" என்றொரு தீனக்குரல் அந்த ரிசப்ஷனையே உலுக்குகிறது. சசிக்கு முன்னால் ஒரு பெண் அழுது புலம்பி உருள்கிறார். வயது கிட்டத்தட்ட நாற்பத்தைந்து இருக்கும். நடுத்தரக் குடும்பம் போல காட்சி அளிக்கிறார்கள். அந்தப் பெண்ணை யாராலும் கட்டுப்படுத்த இயலவில்லை.

"எஞ்சாமி, என் தெய்வமே என்ன உட்டுட்டு போயிட்டியா! அட சமயபுரத்தாளே உன்னதான நம்பி இருந்தேன். பராசக்தீதீதீ…"

உருள்கிறாள். எங்கிருந்து வந்தார்கள் கிட்டத்தட்ட நூறு பேர். கல்லூரி படிக்கும் பையன் முதல் குலுங்கி குலுங்கி அழுவதைக் காணமுடிகிறது. பெண்களின் இடுப்பில் உள்ள குழந்தைகள் அந்தக் கதறலின் தாக்கத்தில் வீறிட்டு அழ பெண்கள் அனைவரும் ஒருமித்த துக்கத்தில் வெடிக்க கிட்டத்தட்ட ஐம்பது பேர் அமர்ந்திருந்த அந்த ரிசப்ஷனில் அரைமணி நேரம் மிகக் கனமான மௌனம்.

அதோ அந்த பெண்ணை மற்றோர் அணைத்து தூக்கிச் சென்று சேரில் அமர வைத்து ஆசுவாசப்படுத்த முயல்கிறார்கள். அடடா… இதுவல்லவோ வாழ்க்கை. போன உயிர் ஒன்று. கதறும் உயிர்கள் நூறு. அனிச்சையாகத் தன்னை அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறது சசியின் மனம். அப்போது நான் வாழ்ந்த வாழ்க்கைமுறை சரி இல்லையா? பணம் சம்பாதித்த அளவு தன் கணவர் மனிதர்களைச் சம்பாதிக்கவில்லையா? ஏற்கனவே முப்பது வருட வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிட்ட பெரும் மன உளைச்சலில் இருந்த சசிக்கு மனதில் பல்வேறு கேள்விகள். கதறியழும் கூட்டத்தைப் பார்த்தபடியே நிர்சலனமாய் அமர்ந்திருக்கிறாள். மரணப்படுக்கையிலும் தன் முகத்தில் விழிக்க மறுக்கும் கணவனுக்காய் விரதமிருந்ததும் கடவுளிடம் மன்றாடியதையும் நினைத்தும் பணத்தால் எதையும் வாங்கிவிடலாம் என்ற கொள்கை மட்டுமே தன் வாழ்நாள் குறிக்கோளாகக்கொண்டு வாழ்ந்த கணவனையும்  அதற்காகத் தானும், அவன் மனம் நோகாமல் வாழ்ந்த அறியாமையையும் எண்ணி வெட்கப்பட்டுக் கொள்கிறாள். வாழ்வதற்குப் பணம் தேவைதான். ஆனால், அது  பிறமனங்களை ஏமாற்றியும் நோகடித்தும் சம்பாதிப்பது அல்ல. தன் மரணப்படுக்கையிலும் கட்டிய மனைவி முகம் பார்க்க மறுத்து, தன் நண்பர்கள் துணைக்குப் போதும் எனச் சொல்லி அனுப்பிய கணவனுக்காய் இரண்டு நாட்கள் நாய் போல் காத்திருந்ததை எண்ணியபோது கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததைத் தடுக்கத்தான் முடியவில்லை சசிக்கு.

கணவனுக்காய் கதறி அழும் அப்பெண்ணைப் பார்த்து சசியின் கண்கள் கலங்குவதாக அருகிலிருப்போர் நினைக்க , "ஆம்… நம்பிக்கை தோற்கா மணவாழ்வின் வலிமை அப்பெண்ணின் கதறலும் கண்ணீரும். நம்பிக்கை துரோகம் தந்த வலிகளின் வெளிப்பாடு தனது மெளன கண்ணீர். மனந்திருந்தி வந்துவிடுவார் என மயிரிழையில் தொடுத்திருந்த நம்பிக்கை இழையும் அறுந்து போக இனி எனக்கான மனிதர்களின் நல் உறவுகளைப் பலப்படுத்திக்கொள்வேன்."

தனது ஐம்பத்தைந்து வயது கணவனின் விருப்பப்படி அவரின் இளவட்ட நண்பர்களிடம் செய்தி சொல்லிப் பார்த்துக் கொள்ள வரச் சொல்லிவிட்டு இத்தனை உறவுகளையும் தன் பாசத்தால் பின்னி பிணைத்து வாழ்ந்து இன்று உயிர் பிரிந்ததும் கதறியழும் உறவுக் கூட்டத்தைச் சம்பாதித்து வைத்திருக்கும் அந்த முகம் தெரியாத  மனிதரைத் தெய்வமாய் நினைத்து தன் புதிய வாழ்க்கைக்கான ஆசிகளை மானசீகமாய் வேண்டி நின்றது சசியின் மனம்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com