இதற்காகவா ஒரு கொலை? – 2

இதற்காகவா ஒரு கொலை? – 2
ஜி.எஸ்.எஸ்.

G.S.SUBRAMANIAN (ஜி.எஸ்.எஸ்.) A postgraduate in Economics, Business Management, Personnel Management and a graduate in law. More than 18,000 articles published in various magazines/newspapers in Tamil and English. More than 250 short stories published under the pen name Arun Charanya. A popular quizmaster and an effective HR trainer for corporates. Author of more than 80 books.

Updated on: 
-ஜி.எஸ்.எஸ்.

ஸ்டீவன், ஹீதர் தம்பதிகளுக்கிடையே கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிரிந்து விடலாம் என்று தீர்மானித்தார்கள். தனித்தனியாக வாழத் தொடங்கினார்கள். ஆனால் அவர்களது ஒன்றரை வயதுக் குழந்தையை யார் வைத்துக் கொள்வது? இருவருமே தன்னிடம்தான் குழந்தை இருக்க வேண்டும் என்று கூற, சண்டை உக்கிரமானது. விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர். நீதிமன்றம் குழந்தை அதன் அம்மாவிடம் வளர வேண்டும் என்றது.

அன்று ஸ்டீவன் குழந்தையை அதன் தாயிடம் ஒப்படைக்க வேண்டிய நாள். இருவருமே மற்றவர் தங்கி இருக்கும் பகுதிக்கு வரத் தயாராக இல்லை. எனவே அங்கிருந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டின் கார் நிறுத்தப் பகுதியில் சந்தித்து குழந்தையை ஒப்படைக்கத் தீர்மானித்தனர்.

நீதிமன்றத் தீர்ப்பின்படி குழந்தையை ஸ்டீபன் ஹீதரிடம் ஒப்படைத்தான். பின்னர் ஸ்டீவ​ன் அங்கிருந்து செல்ல, ஹீதர் தன் காரை நோக்கிக் குழந்தையுடன் சென்றாள். தனக்குப் பக்கத்து இருக்கையில் குழந்தையை உட்கார வைத்து விட்டு அவன் விழுந்துவிடாமல் இருக்க பெல்ட் போட்டு இறுகக் கட்டினாள் ஹீதர். அந்த சமயத்தில் ஒரு உருவம் அவளை நெருங்கியது. அதன் கையில் துப்பாக்கி. நேரடியாக அந்தக் காரை நெருங்கி ஹீதரை சுட்டுக் கொன்றது. பின் அங்கிருந்து சென்று விட்டது. குழந்தையை அந்த உருவம் எதுவும் செய்யவில்லை.

காவல்துறையின் சந்தேகம் ஸ்டீவன் மீது விழுந்தது. அவனைப் பல விதங்களில் குடைந்து குடைந்து கேள்விகள் கேட்டார்கள். அவன் பதில்களைக் கொண்டு எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை.
சூப்பர் மார்க்கெட்டின் கார் நிறுத்தும் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைப் போட்டுப் பார்த்தார்கள். கொலை செய்த உருவம் நடந்து வந்ததும் துப்பாக்கியால் சுட்டதும் பதிவாகியிருந்தன. ஆனால் அந்த உருவத்தின் முகம் தெளிவாகத் தெரியவில்லை. உயரம், நடக்கும் விதம் ஆகியவற்றை ஆய்வு செய்ததில் அது ஸ்டீவன் இல்லை என்ற முடிவுக்கு வந்தார்கள். அப்படியானால் யார் கொலை செய்திருப்பார்கள்? எதற்காக அந்த கொலை?

வேறுவிதத்தில் விசாரணை நடக்கத் தொடங்கியது. ஹீதருக்கு வேறு காதலர்கள் யாராவது உண்டா? ஆனால் விசாரணையில் அப்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்தக் கட்டத்தில் காவல்துறைக்கு வேறு யோசனை தோன்றியது. சூப்பர் மார்க்கெட்டில் கொலை நடந்தபோது சிசிடிவி கேமரா பதிவு செய்த காட்சிகளை ஸ்டீவனுக்குப் போட்டுக் காட்டியபோது அவன் முகத்தில் பெரும் அதிர்ச்சி தெரிந்தது. கலவரமாகக் காணப்பட்டான். ஆனால் விதவிதமாகக் கேட்டும் அவன் புதிதாக எந்தத் துப்பையும் கொடுக்கவில்லை. பின் எதனால் அவன் முகத்தில் அப்படி ஒரு அதிர்ச்சி? கலவரம்? காவல் துறையினர் அந்த சிசிடிவி பதிவுகளை மேலும் ஆழமாக ஆராய்ந்தனர். கொலைகாரன் நெருங்கியபோது ஹீதரின் முகத்தில் பயத்தோடு ஒருவித நம்பமுடியாத உணர்வும் வெளிப்பட்டது தெரிந்தது.

ஹீதர்
ஹீதர்

மேலும் நடைபெற்ற விசாரணையில் ஹீதரைக் கொன்றது அவளது மாமியார்தான் என்ற முடிவுக்கு வந்தது காவல்துறை. விவாகரத்து பெறும்போது பேரக்குழந்தை சிறியவன் என்பதால் அதை வளர்க்கும் பொறுப்பை தன் மருமகளுக்கு நீதிபதி வழங்கியதை அந்த மாமியாரால் ஏற்க முடியவில்லை. பேரனை விட்டு பிரிய முடியவில்லை என்பதை விட மருமகளுக்கு இப்படி ஒரு 'வெற்றி' கிடைப்பதை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே மருமகளை கொல்லத் தீர்மானித்தாள். மகன் குழந்தையை ஒப்படைக்க இருக்கும் நேரமும் இடமும் அவளுக்குத் தெரியவந்தது.

ஆணைப் போல வேடமிட்டு மருமகளுக்கு காத்திருந்தாள். குழந்தையை இருக்கையோடு கட்டுவதற்கு சிறிது நேரம் ஆகும் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. மருமகளை நெருங்கினாள். தலைக்கு விக், காக்கி பேண்ட், அதற்குள் செருகப்பட்டிருந்த சட்டை, ஒரு பொய் மீசை ஆகியவற்றை அணிந்திருந்தாலும் தன் மாமியாரை ஹீதர் அடையாளம் கண்டிருக்க வேண்டும். அதனால்தான் தன்னை துப்பாக்கியுடன் நெருங்கும் உருவத்தைக் கண்டு அவள் அதிர்ச்சியுற்றாள். அவள் வயிற்றில் மாமியார் துப்பாக்கியால் சுட ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தாள்.

நீதிமன்றத்தில் ஹீதரின் தோழிகள் சாட்சி கூறினர். தன் மாமியார் குறித்து அவர் பயந்தார் என்றும் தனது மாமியாரின் நடவடிக்கைகள் எப்போதுமே அவருக்கு அச்சத்தை ஊட்டுவதாக இருந்தது என்றும் ஹீதர் தங்களிடம் கூறியதுண்டு என்றனர்.

கொலை நடந்த சமயத்தில் தொலை தூரத்தில் இருந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பொருள்களை வாங்கிக் கொண்டிருந்ததாகவும் தான் வாங்கிய பொருட்களுக்கான பில்லையும் நீதிமன்றத்தில் ஹீதர் சமர்ப்பித்தார். ஆனால் கொலை செய்த பின் காரை வேகமாக ஓட்டிச் சென்றால் கூட இது சாத்தியம்தான் என்று காவல்துறை நிரூபித்தது.

கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பதிவு செய்யப்படாதது. எனவே கள்ள மார்க்கெட்டில் இதை வாங்கி இருக்க வேண்டும். துப்பாக்கியை உருக்குவது தொடர்பாக அந்த மாமியார் தனக்கு தெரிந்த ஒருவரிடம் விவரங்கள் கேட்டது நீதிமன்றத்தில் தெரியவந்தது. (இறுதிவரை அந்த துப்பாக்கி காவல்துறைக்கு கிடைக்கவில்லை).

கொலை நடந்து எட்டு மாதங்கள் கழித்து டிசம்பர் 2009 அந்த மாமியார் கைது செய்யப்பட்டு கொலை குற்றம் சாட்டப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com