விண்வெளி வீராங்கனைகள்; பிரத்யேக சவால்கள்!

விண்வெளி வீராங்கனைகள்; பிரத்யேக சவால்கள்!
ஜி.எஸ்.எஸ்.

G.S.SUBRAMANIAN (ஜி.எஸ்.எஸ்.) A postgraduate in Economics, Business Management, Personnel Management and a graduate in law. More than 18,000 articles published in various magazines/newspapers in Tamil and English. More than 250 short stories published under the pen name Arun Charanya. A popular quizmaster and an effective HR trainer for corporates. Author of more than 80 books.

Updated on: 
– ஜி.எஸ்.எஸ்.

'ஒரே ஒரு சிறகைக் கொண்டு ஒரு பறவையால் பறக்க முடியாது. அதுபோல, மனித இனத்தின் விண்வெளிப்பயணம் பெண்களின் உரிய பங்களிப்பு இல்லாமல் நிகழ்ந்து விடாது' – இப்படிக் கூறியவர், வாலண்டினா தெரஸ்கோவா. இவர் விண்வெளியில் பயணம் செய்த முதல் பெண்மணி.

'வருங்காலத்தில் விஞ்ஞானிகளும் பொறியியல் வல்லுநர்களும் அதிக அளவில் தேவை என்றால், நாம் சிறுவர்களுக்கு இந்தத் துறைகளில் ஈடுபாடு வர முயற்சிப்பது போலவே, சிறுமிகளுக்கும் ஊக்கம் கொடுக்க வேண்டும்' – இப்படிக் கூறியவர், முதல் அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சாலி ரைட்.

மார்ச் 2021 முடிய 65 பெண்கள் விண்வெளிக்குச் சென்று வந்திருக்கிறார்கள். 550க்கும் அதிகமானவர்கள் விண்வெளியில் பயணம் செய்து இருக்கிறார்கள் எனும்போது இந்த எண்ணிக்கை குறைவுதான்.

1963 ஜூன் 16 அன்று சரித்திரம் படைத்தார் சோவியத் விண்வெளி வீராங்கனையான வாலண்டினா. ஆனால், அதற்குப் பிறகு ஒரு பெண் விண்வெளிக்குச் சென்றது என்பது மிகப் பல வருடங்களுக்குப் பிறகுதான் நிகழ்ந்தது. சுமார் இருபது வருடங்களுக்குப் பிறகு ஸ்வெட்லானா சாவிட்க்யா என்ற ரஷ்ய வீராங்கனை விண்வெளிக்குச் சென்றார். அதற்குப் பத்து மாதங்கள் கழித்து அமெரிக்க விண்வெளி வீராங்கனை சாலி ரைட் விண்வெளி விஜயம் மேற்கொண்டார்.

1984 ஜூலை 25 அன்று ஸ்வெட்லானா மற்றொரு சாதனை படைத்தார். விண்வெளியில் நடந்த (spacewalk) முதல் பெண் என்ற பெருமை இவருக்குக் கிடைத்தது.

விண்வெளி சரித்திரத்தில் இந்தியப் பெண்களுக்கும் பங்கு உண்டு. விண்கலங்களை சட்டென்று மேல் எழுப்புவது மற்றும் இறக்குவது போன்ற தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்கியவர் கல்பனா சாவ்லா. என்றாலும், 2003ல் அவர் சென்ற கொலம்பியா விண்கலம் பூமிக்குத் திரும்ப பதினாறே நிமிடங்கள் இருக்கும் நேரத்தில் வெடித்துச் சிதறியது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

பலவித விமானங்களை மூன்றாயிரம் மணி நேரம் ஓட்டிய இவர், பின்னர் விண்வெளிக்குச் சென்று வந்துள்ளார். 2006ம் வருடத்தில் 165 நாட்கள் இவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்துள்ளார் என்றபோதிலும், விண்வெளி வீராங்கனைகளின் எண்ணிக்கை, விண்வெளி வீரர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது, மிகக் குறைவாகவே இருக்க என்ன காரணம்? இதற்கு அறிவியல் காரணங்களும் உண்டு.

பூமியைச் சுற்றியுள்ள காற்றுவெளியில் பலவித துகள்களும் கதிர்களும் உள்ளன என்றாலும், அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய கதிர்களிலிருந்து ஓசோன் படலம் நம்மைப் பாதுகாக்கிறது. தவிர, பூமிக்கு வெளியே பல்லாயிரம் கிலோ மீட்டர் வரை அதன் காந்தப் பரப்பு உள்ளது. இதுவும் நம்மைப் பாதுகாக்கிறது. ஆனால், அதற்கு வெளியே உள்ள பகுதி என்பது அதிக அளவு கதிரியக்கம் கொண்டது. இதன் காரணமாக, அந்தப் பகுதியை மனிதர்கள் அடையும்போது, அவர்களுக்குப் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம். இதய நோய்களும், நரம்பு மண்டல பாதிப்பும் கூட உண்டாகலாம்.

விண்வெளி கதிரியக்கத்தின் விளைவுகளை துல்லியமாகக் கணிப்பது என்பது கடினமான ஒரு காரியம். என்றாலும், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இதுகுறித்து சில ஆராய்ச்சிகளை செய்திருக்கிறது. அதன்படி கதிரியக்கத்துக்கு உள்ளான காரணத்தால், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட ஆண்களை விட, பெண்களுக்கு வாய்ப்பு மிக அதிகமாம். இதற்குக் காரணங்கள் உண்டு.

சாலி ரைட்.
சாலி ரைட்.

உலக அளவில் பெண்ணின் ஆயுள், ஆணைவிட அதிகம் என்பது ஒரு காரணம். தவிர மார்பகப் புற்றுநோய் என்பது மிகப் பெரும்பாலும் பெண்கள் தொடர்புடையது. தைராய்டு, புற்றுநோயும்தான். இதன் காரணமாக, விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருக்கும் மொத்த நேரத்தை விட, விண்வெளி வீராங்கனைகள் இருக்கவேண்டிய நேரம் குறைவாகவே இருப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

அதிக பாதிப்பு ஏற்படுத்தாத கதிரியக்க அளவு என்று ஒன்று உண்டு. செவ்வாய் கிரகத்துக்குச் சென்று வரும்போது இந்த அளவு என்பது 150 சதவிகிதம் அதிகரிக்கிறது.

விண்வெளிப் பயணங்களைப் பொறுத்தவரை, ஆண்களுக்கும் பெண்களுக்கும் சில அடிப்படை வேறுபாடுகள் உண்டு. பெண்களுக்கு விண்வெளிக்குச் செல்லும்போது உடல் உபாதைகள் ஏற்படுகின்றனவாம்.

ஆண்களைப் பொறுத்தவரை பூமிக்கு திரும்பும்போது இந்த உடல் சிக்கல்கள் உண்டாகின்றன. விண்வெளியிலிருந்து திரும்புகையில் ஆண்களுக்குப் பார்வைத் திறன் மற்றும் கேட்பதில் சிக்கல்கள் உண்டாகின்றன. பெண்களைப் பொறுத்தவரை பூமிக்குத் திரும்புகையில் அவர்களுக்கு ரத்த அழுத்தம் தாறுமாறாக இருந்து, அவர்கள் மயங்கி விழுந்ததும் உண்டு.

தவிர, விண்வெளிக்கு வீராங்கனைகளை அனுப்புவதில் மாதச் சுழற்சி என்ற கோணமும் அதிகம் அலசப்பட்டது. ஆனால், அதை ஒரு பிரச்னையாகக் கருத வேண்டாம் என்று கூறினர் வீராங்கனைகள். அவர்கள் சானிட்டரி நாப்கின்களை எடுத்துச்செல்ல வேண்டும். மாதச் சுழற்சியை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள உரிய மாத்திரைகளும் வந்துவிட்டன. சர்வதேச விண்வெளி நிலையங்களில் பொதுவாக இரண்டு கழிவறைகள் இருக்கும். அங்கு சிறுநீர் கூட வீணாகக் கூடாது. மறுசுழற்சி செய்யப்பட்டு, அது குடிநீராக மாற்றப்படும். ஆனால், மாத சுழற்சி வெளியேற்றங்களை நிர்வகிப்பது விண்வெளியில் மேலும் சிக்கலானது.

விண்வெளிக்குச் செல்லும் வீராங்கனைகளுக்கு குழந்தைப்பேறு தடைப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், பின்னர் அது தவறு என்று ஆனது. விண்வெளிப் பயணம் சென்ற ஆண்கள், பெண்கள் ஆகிய இரு தரப்பினருக்குமே விண்வெளிப் பயணத்துக்கு பிறகு குழந்தைகள் பிறந்திருக்கின்றன. என்றாலும், முன்னெச்சரிக்கையாக இரு தரப்பினருமே விண்வெளிப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னால் ஆண்கள் தங்களது விந்துவையும் பெண்கள் தங்களது முட்டையையும் பாதுகாத்து வைக்கிறார்கள்.

மேற்படி விஷயங்கள் காரணமாக, பெண்கள் விண்வெளிப் பயணங்களில் ஈடுபடுவது குறைந்துவிடக்கூடாது என்பதும், அந்த வேறுபாடுகளை சரிசெய்ய அல்லது நிர்வகிக்க போதிய வழிமுறைகள் தேவை என்பதும் உணரப்பட்டிருக்கிறது. இது மிக ஆறுதலான விஷயம்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com