
நாற்பத்தைந்து வயதைத் தொட்டு விட்டாலே, உடலின் முக்கிய உறுப்புகளான இதயம், மூளை, சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடுகளை சீர்குலைப்பதற்கான அறிகுறிகளாக உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் போன்ற உடல் பிரச்னைகள் அழையா விருந்தாளிகளாக உடலுக்குள் வந்து அமர்ந்து கொள்வது சகஜமாகிவிட்டது. இவற்றை சமநிலையில் வைக்கத் தவறினால் வருவதே ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக், கிட்னி ஃபெயிலியர் போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வியாதிகள். இவற்றில், 'மாரடைப்பு' எனப்படும் ஹார்ட் அட்டாக் உடனடி மரணத்தை ஏற்படுத்தவல்லது. ஹார்ட் அட்டாக் அபாயத்தைத் தடுக்கக்கூடிய வழிகளுக்கான பத்து டிப்ஸ்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைப்பது. ஒருமுறை இது வந்துவிட்டால், மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளை வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்வது அவசியம்.
2. சர்க்கரை நோய் வரும்போது மருத்துவரைக் கலந்தாலோசித்து மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதையும் வாழ்நாள் முழுக்க எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
3. உடல் கொழுப்பின் அளவைக் கட்டுப்பாட்டில் வைப்பது.
4. உடல் எடை அதிகரிக்காமல் சீராகப் பராமரிப்பது.
5. எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது. அநேக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நடை பயிற்சியே சிறந்ததாகக் கருதப்படுகிறது.
6. 'ஸ்ட்ரெஸ்' எனப்படும் மன அழுத்தம், ஹார்ட் அட்டாக் வருவதற்கான முக்கிய காரணியாகக் கூறப்படுகிறது. மன அழுத்தம் இல்லாத அமைதியான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டியது அவசியம்.
7. உங்கள் திறனை (capacity) மீறி வேலை செய்ய முயற்சிக்க வேண்டாம். அதாவது, ஒரு வேலையை முடிக்க பத்து நிமிடம் தேவைப்பட்டால் ஏழு நிமிடத்தில் முடிக்க நினைக்க வேண்டாம்.
8. அதிக அளவு உப்பு, காரம், புளிப்பு, கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்த்து சாத்வீகமான உணவு முறைகளைப் பின்பற்றுவது நல்லது.
9. உடலுக்குத் தேவையான ஓய்வு மற்றும் தூக்கம் கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியம்.
10. ‘ஹார்ட் அட்டாக் வந்துவிடுமோ’ என்று பயம் கொள்வது தவறு. பயமே முதல் எதிரி.
மேற்கூறிய டிப்ஸ்களைப் பின்பற்றி அமைதியான, ஆரோக்கியம் நிறைந்த வாழ்க்கை முறைகளைப் பின்பற்றப் பழகிக்கொண்டாலே ஹார்ட் அட்டாக் நம்மை அணுகாது என நம்புவோம்.