
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பொதுமக்கள் மத்தியில் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘சென்னை ஒன்’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை ஒருங்கிணைந்த பெருநகர் போக்குவரத்து ஆணையமானது, சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்துடன் இணைந்து சென்னை ஒன் செயலியை உருவாக்கியது.
இந்த செயலியின் மூலம் ஒரே பயணச்சீட்டை எடுத்து மாநகர் பேருந்துகள், மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில்களில் எளிதாக பயணிக்க முடியும். கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட சென்னை ஒன் செயலிக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது சென்னை ஒன் செயலியில் மாதாந்திர பயண அட்டையை கொண்டு வர போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அனைத்து பொதுப் போக்குவரத்துகளையும் இணைக்கும் :சென்னை ஒன்’ செயலி நாட்டிலேயே முன்மாதிரியான திட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த செயலியை தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் பயன்படுத்தக்கூடிய சென்னை ஒன் செயலியை பயணிகள் தங்கள் மொபைல்போன்களில் எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த செயலியின் மூலம் பயணிகளின் போக்குவரத்து எளிதாவதோடு, இனி டிக்கெட் பெறுவதற்கு வரிசையில் நிற்க வேண்டிய அவசியத்தையும் குறைக்கும். சென்னை ஒன் செயலி அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சில நாட்களிலேயே 1.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும் முதல் 15 நாட்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணிச்சீட்டைப் பெற்று, பயணம் செய்துள்ளனர்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சென்னை மக்களுக்கு சென்னை ஒன் செயலி ஒரு வரப் பிரசாதமாகவே கருதப்படுகிறது. பொதுமக்களின் பேராதரவைத் தொடர்ந்து தற்போது சென்னை ஒன் செயலியில் மாதாந்திர பயண அட்டையைக் கொண்டுவர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள், சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்துடன் இணைந்து மாதாந்திர பயண அட்டையை உருவாக்குவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வெகு விரைவில் மாதாந்திர பயண அட்டை நடைமுறைக்கு வரும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஒன் செயலியில் மாதாந்திர பயண அட்டை நடைமுறைக்கு வரும் பட்சத்தில், அடிக்கடி டிக்கெட் எடுக்க வேண்டிய சிரமம் பயணிகளுக்கு இருக்காது.