
சென்னையில் அனைத்துப் போக்குவரத்து சேவைகளையும் ஒன்றிணைக்கும் வகையில் தமிழக அரசு கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி ‘சென்னை ஒன்’ செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலியில் புறநகர் மின்சார இரயில், மெட்ரோ இரயில் மற்றும் பேருந்து உள்ளிட்ட போக்குவரத்திற்குத் தேவையான ஒரே க்யூ-ஆர் டிக்கெட்டை எடுக்க முடியும். அதோடு வாடகை ஆட்டோ மற்றும் கார் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த வசதி சென்னையில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு உதவிகரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஏசி மின்சார இரயிலுக்கும் இந்த செயலியில் டிக்கெட் எடுக்க முடியுமா என்ற சந்தேகம் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போது இதற்கான விளக்கத்தை தெற்கு இரயில்வே அளித்துள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நாள்தோறும் இலட்சக்கணக்கான பொதுமக்கள் இரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். இவர்களின் பயண நேரத்தைக் குறைக்கும் வகையில் மெட்ரோ இரயில் சேவையும் இயங்கி வருகிறது. முன்பை விட தற்போது மெட்ரோ இரயிலிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, பேருந்து போக்குவரத்தும் சென்னைப் பயணிகளுக்கு அத்தியாவசியமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த மூன்று முக்கியப் போக்குவரத்தையும் ஒன்றிணைக்க கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு ஆலோசனை செய்து வந்தது. முடிவில் இதற்காகவே ‘சென்னை ஒன்’ என்ற செயலி பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. செப்டம்பர் 22 முதல் பயன்பாட்டில் உள்ள இந்தச் செயலியின் மூலம், இலட்சக்கணக்கான பயணிகள் பயனடைவார்கள் எனத் தெரிகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் புறநகர் ஏசி மின்சார இரயில் பயன்பாட்டுக்கு வந்தது. சென்னை ஒன் செயலியில் ஏசி மின்சார இரயிலுக்கு டிக்கெட் எடுக்க முடியாது என தற்போது தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு இரயில்வே மேலும் கூறுகையில், “புறநகர் மின்சார இரயில்களில் பயணிக்க UTS செயலி மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி கடந்த சில ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. இந்தச் செயலியைப் போலவே சென்னை ஒன் செயலியிலும் இரயில் டிக்கெட்டை எடுக்கலாம். புறநகர் இரயில் டிக்கெட் கட்டணத்தில் இதுவரை மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. டிக்கெட் பரிசோதகர் டிக்கெட்டை காண்பிக்கச் சொன்னால், செயலியில் உள்ள ‘அசல் பயணச்சீட்டைக் காட்டு’ என்பதை கிளிக் செய்து காட்டலாம். டிக்கெட் எடுக்கப்பட்ட 3 மணி நேரத்திற்குள் அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இருப்பினும் இந்த டிக்கெட்டைப் பயன்படுத்தி புறநகர் ஏசி மின்சார இரயிலில் பயணிக்க முடியாது. தற்போது ஏசி இரயிலில் பயணிக்க சென்னை ஒன் செயலியைப் பயன்படுத்த இயலாது. இனி வரும் காலங்களில் ஏசி மின்சார இரயில் டிக்கெட்டையும் சென்னை ஒன் செயலியில் இணைக்க அதிக வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.