கொல்கத்தாவில் இருக்கும் ஒரு விமான நிலையத்தில் ஒரு டீயின் விலை 10 ரூபாயாம். இது பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சில இடங்களில் 10 ரூபாய்க்கு வாங்கும் ஒரு பொருள் 100 ரூபாய், 300 ரூபாய் என்று விற்கப்படும். இதனால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாவர். குறிப்பாக விமான நிலையம், தியேட்டர், சில மால் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்த இடங்களில் விலையை குறைக்கச் சொல்லி மக்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டுதான் வருகின்றனர்.
அதேபோல்தான் விமான நிலையங்களில் விற்பனை செய்யப்படும் டீ, காபி, உணவுகளின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதனால்தான் தற்போது மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உதான் யாத்ரி கஃபே என்ற பெயரில் மலிவு விலை உணவகங்களை விமான நிலையங்களில் தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் முதல்முறையாக கொல்கத்தாவில் இருக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் உதான் யாத்ரி கஃபே என்ற மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டது. இங்கே ஒரு டீயின் விலை 10 ரூபாய் தான்.
இந்த விமான திறக்கப்பட்ட ஒரே மாதத்தில் பயணிகளின் பிடித்த உணவகமாக அமைந்திருக்கிறது. விலை குறைவு மட்டுமல்ல, தரமாகவும், சுவையாகவும் இருப்பதாக பயணிகள் கருத்துக்கள் தெரிவிக்கின்றனர். நாள் ஒன்றுக்கு சுமார் 900 பேர் இந்த கடைக்கு வருகின்றனர். கடந்த டிசம்பர் 21ஆம் தேதியிலிருந்து ஜனவரி 21ஆம் தேதி வரை இந்த மலிவு விலை உணவகத்திற்கு 27,000 பேர் வந்துச் சென்றுள்ளனர் என இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவிக்கிறது.
இந்த உணவகத்தைத் திறந்து வைக்கும்போது விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராமமோகன் நாயுடு பேசியிருந்தார். அதாவது, “நான் விமான போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து இந்தியாவில் விமான போக்குவரத்து மலிவானதாக மாற வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். அதன் ஒரு பகுதியாக தான் உதான் யாத்ரி கஃபே திட்டத்தைத் தொடங்கி இருக்கிறேன்." என்று பேசினார்.
இதுபோலவே இந்தியா முழுவதும் விமான நிலையங்களில் மலிவான உணவகம் இருந்தால் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்று கருத்துக்கள் எழுகின்றன.