
உலக நாடுகள், கடந்த சில வருடங்களாக காலநிலை மாற்றத்தில் சிக்கி திண்டாடி வருகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் அதிக வெப்பம், கடும் குளிர், அதிதீவிர மழை போன்ற பிரச்சனைகளால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளும் அவதிப்பட்டு வருகின்றன. கடந்த சில வருடங்களாக இந்த காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் கோடைக்காலங்களில் அதிகளவு வெப்பத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதே போல் மழைக்காலங்களில் அதிதீவிர மழைபொழிவு மற்றும் புயல் போன்றவற்றால் மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் கடந்த 7-ம் தேதி ஏற்பட்ட காட்டுத்தீயால் கடுமையான பாதிப்பை சந்தித்த அமெரிக்கா, தற்போது பனிப்புயல் பாதிப்பால் அல்லல்பட்டு வருகிறது. அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் அதாவது டெக்சாஸ், லூசியானா, மிசிசிப்பி, அலபாமா, ஜார்ஜியா, தென் கரோலினா மற்றும் புளோரிடாவின் பல பகுதிகளில் 10 அங்குலம் அளவிலான பனிப்பொழி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் கடும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
லாஸ் ஏஞ்சல்சில் ஏற்பட்ட காட்டுத்தீ சுமார் 60,000-க்கும் அதிகமான ஏக்கர் பரப்பை எரித்து நாசமாக்கியது மட்டுமில்லாமல் 16,000-க்கும் அதிகமான கட்டமைப்புகளை தீயால் அழிந்தது. இந்த காட்டுத்தீக்கு இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 31,000 க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த தீவிபத்தில் பல செல்வந்தர்கள் மற்றும் பிரபலமானவர்களின் வீடுகளும் எரிந்து சாம்பலானது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் இது போன்று பெரியளவில் காட்டுத்தீ ஏற்பட்டதில்லை என்றே கூறப்படுகிறது. காட்டுத்தீயில் சிக்கி மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில் தற்போது பனிப்புயலின் கோரதாண்டவத்தால் அமெரிக்கா என்னசெய்வது என்று தெரியாமல் திணறி வருகிறது.
அமெரிக்காவில் ஏற்பட்ட இந்த பனிப்புயலால் சுமார் 108,000 க்கும் மேற்பட்ட மக்கள் தண்ணீர் கிடைக்காமல், வீடுகளில் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், சாலை, ரெயில், விமான போக்குவரத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்கமுடியால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த கடுமையான பனிப்புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சுத்தம் செய்வதற்கான தேவையான உபகரணங்கள் பற்றாக்குறையாக இருப்பதால் இந்த பாதிப்புகளை சரிசெய்ய பல நாட்கள் ஆகும் என கூறப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வேலைசெய்பவர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவு பனிப்புயல் பாதிப்பால் 2,100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. டெக்சாஸ் மாகாணத்தில் பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டது. கடுமையான பனிப்பொழிவால் 4 பேர் மரணம் அடைந்து உள்ளனர். புளோரிடா மாநிலம் வரலாற்றில் மிகப் பெரிய அளவிலான பனியைப் பதிவு செய்கிறது. புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ், வரலாற்றில் இதுவரை புளோரிடா குளிர்காலத்தில் இந்தளவு பனிப்பொழிவை பார்த்தில்லை என்று கூறியுள்ளார்.
நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல், மேற்கு நியூயார்க்கில் உள்ள ஒரு டஜன் மாவட்டங்களில், மக்கள் பனிப்பொழிவு மற்றும் கடுமையான குளிரை எதிர்கொள்வதால் அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
லூசியானா மாகாண கவர்னர் ஜெப் லாண்ட்ரி, அடுத்த 7 நாட்களுக்கு கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளார்.
இந்நிலையில் பனிப்பொழிவு நின்ற பிறகும் கூட, திடீர் பனிப்புயல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக NWS (National Weather Service) எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.