
வாகனச் சந்தையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் அவ்வப்போது புதுப்புது மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. எலக்ட்ரிக் வாகனங்களை சந்தைக்கு கொண்டு வருவதில் ஓலா நிறுவனம் முன்னணியில் உள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று தான் ஓலா நிறுவனம் முதன்முதலாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சந்தையில் அறிமுகப்படுத்தியது. தற்போது ஓராண்டு கழித்து மீண்டும் அதே சுதந்திர நாளான இன்று இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த இருக்கிறது.
ஓலா நிறுவனம் இன்று நடத்தும் ‘சங்கல்ப்’ என்ற விழாவில் ஒரு புதிய ப்ரீமியம் பைக் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது வரை ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் மூவ் ஓஎஸ்5 (MoveOS5) என்ற இயங்குதளம் தான் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இனி அறிமுகமாக இருக்கும் ஸ்கூட்டர்களில் மூவ் ஓஎஸ்6 (MoveOS6) என்ற இயங்குதளத்தைப் பயன்படுத்த ஓலா முடிவு செய்துள்ளது.
புதிய ப்ரீமியம் பைக்:
பட்ஜெட் விலையிலேயே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி வந்த ஓலா, தற்போது முதன்முறையாக ப்ரீமியம் பைக்குகளை அறிமுகம் செய்யவுள்ளது. இதன்மூலம் அல்ட்ராவைலட்டின் F சீரிஸ் வகை பைக்குகளுடன் நேரடியாக போட்டிக் களத்தில் இறங்கியுள்ளது ஓலா. ப்ரீமியம் பைக் என்பதால் இதன் விலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதல் அம்சங்களும் இருக்கும் என பைக் பிரியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதற்கு முன்பாக கான்செப்ட் வடிவில் டைமண்ட்ஹெட் (DiamondHead) என்ற பைக்கை ஓலா அறிமுகம் செய்திருந்தது. இதே தயாரிப்பு வடிவத்தைத் தான் தற்போதைய ப்ரீமியம் பைக்கிலும் பயன்படுத்தியுள்ளது ஓலா நிறுவனம். கான்செப்ட் பைக்குகள் தயாரிப்பு நிலைக்கு ஒத்து வராது என சந்தை நிலவரங்கள் தெரிவித்தன. இருப்பினும் இம்முறையும் கான்செப்ட் வடிவ பைக்குகளை சந்தையில் களமிறக்க திட்டமிட்டுள்ளது.
புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்:
புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும் இன்று அறிமுகப்படுத்த உள்ளது ஓலா. இந்த பைக்கின் டீஸர் வீடியோவையும் இந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. இது ஸ்போர்ட்டியான எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும் என பலரும் யூகித்து வருகின்றனர். அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஸ்கூட்டர்களை தயாரித்து வந்த ஓலா நிறுவனம், தற்போது ஏத்தர் நிறுவனத்தின் 450 சீரிஸ் ஸ்கூட்டர் போல ஸ்போர்ட் பைக்குகளையும் வெளியிட உள்ளது.