நடப்பாண்டின் தொடக்கத்தில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றார். அதிபர் பதவியை ஏற்றதும் டாலரை உலகப் பொருளாதாரச் சந்தையில் முன்னிலைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்காக டிரம்ப் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தான் வரி.
உலக நாடுகளுக்கு அதிகபட்ச வரியை விதித்து, தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிறார் டொனால்ட் டிரம்ப். சமீபத்தில் இந்தியப் பொருட்களுக்கு 50% வரியை விதித்தது இன்று வரை மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு வரிவிதிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் டிரம்ப். இதன்படி இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 100% வரியை விதித்துள்ளார் டிரம்ப். மருந்து பொருட்களுக்கு 100%, சமையலறை மற்றும் கழிவறை உபகரணங்களுக்கு 50%, ஃபர்னிச்சர்களுக்கு 30%, கனரக லாரிகளுக்கு 25% இறக்குமதி வரியை நிர்ணயித்துள்ளார் அதிபர் டிரம்ப்.
இந்த வரிவிதிப்பு முறை வருகின்ற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பு இந்தியாவைச் சேர்ந்த மருந்து உற்பத்தியாளர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
வரிவிதிப்பு முறை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், “வருகின்ற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற அனைத்து வகையான மருந்துப் பொருட்களுக்கும் 100% வரி விதிக்கப்படும். மருந்து உற்பத்தி நிறுவனம் அமெரிக்காவில் உற்பத்தி ஆலையைக் கட்ட வேண்டும். அப்படி உற்பத்தி ஆலை இல்லாத மருந்து நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்து பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படுவது நிச்சயம். ஒருவேளை அமெரிக்காவில் மருந்து நிறுவனம் கட்டுமான வேலைகளைத் தொடங்கினால் வரி விதிக்கப்படாது” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்த நடவடிக்கையால் மீண்டும் இந்தியா தான் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மலிவு விலை ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்ய அமெரிக்கா தான் முக்கிய சந்தையாக உள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் இந்தியா $3.6 பில்லியன் மதிப்புள்ள மருந்துகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. இது இந்திய மதிப்பில் ரூ.31,626 கோடியாகும். நடப்பாண்டில் இதுவரை $3.7 பில்லியன் (ரூ.32,505 கோடி) மதிப்புள்ள மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் இந்த வரிவிதிப்பு நிச்சயமாக இந்திய மருந்து உற்பத்தியாளர்களைப் பாதிக்கும்.
இதுதவிர வீட்டு உபயோகப் பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளதால், புதிதாக வீடு வாங்குவோர் அதிக சிரமங்களை சந்திக்க வாய்ப்புள்ளது. இதனால் அமெரிக்காவில் வீடு வாங்குவதற்கான செலவுகள் அதிகரிக்கும்.
கனரக லாரிகள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால், இது உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதிக்கிறது. இதனைத் தடுக்கும் நோக்கத்துடன் தான் வரிவிதிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வரிவிதிப்பு முறைகள் குறிப்பாக இந்தியாவைத் தான் அதிகம் பாதிக்கிறது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.