

தமிழகம் முழுவதும் தைப்பொங்கல் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அவ்வகையில் மதுரையில் புகழ்பெற்ற அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நேற்று முடிவடைந்தன. இந்நிலையில் இன்று காலை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அதோடு இன்று காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் சுற்றுலா தலங்கள், கடற்கரைகள் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பொது இடங்களில் கூடும் பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் காவல்துறை சிறப்பு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மருத்துவ முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி கடற்கரைகள், சுற்றுலா தலங்கள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழகம் முழுக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூரில் மட்டும் 200 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. EMRI கிரீன் ஹெல்த் சா்வீஸ் நிறுவனத்தின் மூலமாக ஆம்புலன்ஸ் சேவையை மருத்துவத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
பொதுமக்கள் காணும் பொங்கலை குடும்பத்துடன் வெளியில் சென்று கொண்டாடுவார்கள். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழியும் என்பதால், பாதுகாப்பு முன்னேற்பாடுகளில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.
போக்குவரத்தை நெறிப்படுத்தும் வகையில் காவல்துறையும் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும் வாகனங்கள் நிறுத்துவதற்கும் தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் உடனடி மருத்துவ சேவை வழங்கவும் மருத்துவ முகாம்கள் ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சென்னையைப் பொருத்தவரையில் கடற்கரைகள், மாமல்லபுரம், வண்டலூர் மற்றும் கேளிக்கை பூங்காக்களில் மாவட்ட நிா்வாகங்கள் முன்னேற்பாடுகளை செய்துள்ளன. காணும் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் பொது மக்களுக்கு எவ்வித சிரமமும் நேர்ந்து விடக்கூடாது என்பதில் போக்குவரத்து துறையும், மருத்துவ துறையும் கவனமாக செயலாற்றி வருகின்றன.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இங்கு ரத்த அழுத்த அளவு மற்றும் சா்க்கரை அளவு பரிசோதிக்கப்படும். சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு மாத்திரைகள் மற்றும் உப்பு சா்க்கரை கரைசல் ஆகியவ இந்த மருத்துவ முகாம்களில் கிடைக்கும்.
பொதுமக்களின் பாதுகாப்புக்காக அவசர கால கட்டுப்பாட்டு மையமும் தயார் நிலையில் உள்ளது. சுற்றுலா தளங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவது திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகையால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
மேலும் இன்று தமிழக முழுக்க பல்லாயிரக்கணக்கான போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். காணும் பொங்கலை பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், விழிப்புணர்வுடனும் கொண்டாட வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.