

தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி (வியாழக்கிழமை) தைப்பொங்கல் திருநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழக மக்கள் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழக அரசு ரூ.3,000 ரொக்கப் பணத்துடன், பரிசுத் தொகுப்பையும் அறிவித்திருந்தது.
பொங்கல் பரிசுத் தொகுப்பை கடந்த ஜனவரி 8 ஆம் தேதி தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல் நாளே லட்சக்கணக்கான ரேஷன் கார்டுதாரர்கள் பரிசுத் தொகுப்பை வாங்கிய நிலையில், இதற்கான கால அவகாசம் ஜனவரி 13 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் விடுபட்டவர்களுக்கும், வெளியூரில் வசிப்பவர்களும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்க ஜனவரி 14-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்னமும் பொங்கல் பரிசை வாங்காதவர்கள், வருகின்ற திங்கள்கிழமை முதல் வாங்கிக் கொள்ளலாம் என தமிழக கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ வெல்லம், ஒரு முழு நீளக் கரும்பு மற்றும் ரூ.3,000 ரொக்கப் பணம் ஆகியவை அடங்கிய பரிசுத் தொகுப்பை தமிழக அரசு அறிவித்தது.
தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 2026 தைப்பொங்கலுக்கு ரூ.3,000 வழங்கப்பட்டுள்ளது. கடைசியாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது ரூ.2,500 வழங்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது. இந்நிலையில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில், பொங்கல் பரிசுத் தொகையும் இந்த வருடம் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 ரேஷன் கார்டுதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கும் பொங்கல் பரிசுத் தொகையை வழங்க தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வந்தன.
இதன்படி தற்போது வரை 90% பொங்கல் பரிசுத் தொகுப்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும் இதுவரை பொங்கல் பரிசு வாங்காதவர்கள் வருகின்ற திங்கள்கிழமை முதல் (ஜனவரி 19) வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், “தமிழ்நாட்டில் இதுவரை 90 சதவீதத்திற்கும் மேலான பொங்கல் பரிசுத் தொகுப்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதுவரையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்காத ரேஷன் கார்டுதாரர்கள் நாளை மறுதினம் ஜனவரி 19 ஆம் தேதி முதல் வாங்கிக் கொள்ளலாம்.
மறு அறிவிப்பு வரும் வரை பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான விநியோகம் தொடரும். அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு விநியோகம் திங்கட்கிழமை முதல் மீண்டும் தொடங்கும். இதுவரை பொங்கல் பரிசு வாங்காதவர்கள் இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என அதிகாரிகள் தெரிவித்தனர்.