
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த ஜனவரி 13-ம்தேதி தொடங்கி இந்த மாதம் 26-ந்தேதி வரை கிட்டதட்ட 45 நாட்கள் நடைபெறுகிறது.
கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறும் இந்த புனிதமான காலகட்டத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் இணையும் திருவேணி சங்கமத்தில் புனித நீராடுவது ஒருவரின் பாவங்களை சுத்தப்படுத்துவதாக நம்பப்படுகிறது. இதனாலேயே திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஆன்மிகவாதிகள் மட்டுமல்ல மக்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தினமும் சராசரியாக 50 லட்சம் முதல் சுமார் ஒரு கோடி வரை மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் கும்பமேளா செல்லும் மக்களின் கூட்டம் அலை மோதுகிறது. அந்த வகையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விழா பிப்ரவரி 26-ம் தேதியுடன் முடிவடைவதால், மகா கும்பமேளா செல்வதற்கான ரயில்களிலும், பிரயாக்ராஜ் வழியாக செல்லும் ரயில்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
இந்நிலையில் டெல்லி ரயில் நிலையத்தில் நடந்த கூட்ட நெசலில் சிக்கி 11 பெண்கள், 4 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த பலரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
கும்பமேளாவில் நீராட விடுமுறை நாட்களில் அதிக கூட்டம் காணப்படுகிறது. அந்த வகையில் ஞாயிற்று கிழமை என்பதால் கும்பமேளாவில் புனித நீராட, பிரயாக்ராஜ் செல்வதற்காக பக்தர்கள் நேற்று இரவு டெல்லி ரயில் நிலையத்தில் அதிக அளவில் குவிந்தனர். நடைமேடை 14 மற்றும் 15ல் பிரயாக்ராஜ் வழியாக செல்லும் ரயில் வரும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் கும்பமேளாவிற்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக எழுந்த வதந்தியால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்ப்பட்டது.
இதனால் நடைமேடை 13,14,15 -ல் நின்றிருந்த உ.பி செல்லும் ரெயில்களில் ஏற பயணிகள் முண்டியடித்ததால் அங்கு பயங்கர கூட்டம் நெரிசல் ஏற்பட்டு பயணிகள் இடையே ஏற்பட்ட தள்ளு முள்ளில் ஏராளமானவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பெண்கள், 4 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 29-ம் தேதி கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியான நிலையில் தற்போது டெல்லி ரெயில் நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டு 18 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்திற்கு பிறகு ரயில் நிலையத்தில் நிலைமையைக் கட்டுப்படுத்த கூடுதல் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நான்கு தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கூட்ட நெரிசல் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என ரயில்வே அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உயிர் இழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் துயரம் அடைந்துள்ளேன். எனது எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த நெரிசலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிகாரிகள் உதவுகிறார்கள்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி ரயில் நிலைய சம்பவம் குறித்து விளக்கமளித்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.