உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் எனுமிடத்தில் மகா கும்பமேளா (Maha Kumbh Mela) 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. ஜனவரி 13 ஆம் நாளில் தொடங்கி பிப்ரவரி 26 ஆம் நாள் வரை 44 நாட்கள் நடைபெற இருக்கிறது. சுமார் 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இந்தக் கும்பமேளா வரலாற்றுச் சிறப்பு முக்கியத்துவம் கொண்டதாகக் கருதப்படுகிறது.
மகா கும்பம் என்பது நதிகள், கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் சங்கமம். மகா கும்பமேளாவின் பிறப்பிடமாகக் கருதப்படும் சாகர் மந்தன் என்ற தெய்வீக நிகழ்வைப் பற்றி ரிக்வேதம் குறிப்பிடுகிறது. இந்து சமயப் புராணங்களின் படி, கடவுள்கள் (தேவர்கள்) மற்றும் அசுரர்கள் (அரக்கர்கள்) இறப்பின்றி இருக்க வேண்டுமென்பதற்காக, அதற்குரிய அமிர்தத்தைப் பெறுவதற்காக மந்தாரா மலையை மத்தாகப் பயன்படுத்தி ஆதிகாலப் பெருங்கடலைக் கடைந்தனர்.
பெருங்கடலிலிருந்து கிடைக்கும் அமிர்தத்தைத் தேவர்களும், அசுரர்களும் சமமாகப் பகிர்ந்து கொள்வது என்று ஒப்பந்தம் செய்து கொண்டு, இரு தரப்பினரும் கடலைக் கடைந்தனர். இரு பிரிவினரின் கூட்டு முயற்சிக்குப் பலனாக, கடலிலிருந்து அமிர்தம் வெளிப்பட்டது. அதன் பிறகு, அமிர்தத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக, இரு பிரிவினருக்குமிடையே போர் ஏற்பட்டது. அமிர்தத்தை அசுரர்களிடம் இருந்து காக்க, மகாவிஷ்ணு, மோகினியின் வடிவில் தோன்றி, அமிர்தம் அடங்கிய கலசத்தை (கும்பம்) இரு பிரிவினரின் கைகளிலிருந்து பிடுங்கித் தூக்கி எறிந்தார்.
அப்போது, அந்த கும்பத்தில் இருந்து அமிர்தத்திலிருந்து நான்கு துளிகள் பூமியில் வந்து விழுந்தது. இந்தியாவிலுள்ள ஹரித்வார், பிரயாக்ராஜ், உஜ்ஜைன் மற்றும் நாசிக் என்று அழைக்கப்படும் நான்கு நகரங்களில் அந்த அமிர்தத் துளிகள் விழுந்தன. எனவே, இந்த நான்கு இடங்களும் வரலாற்று ரீதியாகப் புனிதமானதாகக் கருதப்படுகின்றன.
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே அமிர்தம் க்டைந்தெடுக்கும் முயற்சி 12 ஆண்டுகள் நீடித்தது என்பதை அடிப்படையாகக் கொண்டு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடைபெறுகிறது. இந்த நிகழ்வு, பிரயாக்ராஜ் மட்டுமின்றி, ஹரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய இடங்களிலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகா கும்பம் 2025 மேளா கீழே உள்ள அட்டவணையின்படி நான்கு வெவ்வேறு இடங்களில் நடைபெறும்.
ஹரித்வார் - சூரியன் மேஷத்திலும், வியாழன் கும்பத்திலும் இருக்கும் சந்தர்ப்பத்தில் ஹரித்வாரில் மேளா நடத்தப்படுகிறது.
பிரயாக்ராஜ் - சூரியன் மகர ராசியில் இருக்கும் சந்தர்ப்பத்தில் பிரயாக்ராஜில் மேளா நடத்தப்படுகிறது.
நாசிக் - சூரியனும் வியாழனும் குறிப்பிட்ட நிலையில் இருக்கும் சந்தர்ப்பத்தில் நாசிக்கில் மகா கும்பமேளா நடைபெறுகிறது.
உஜ்ஜயினி - சூரியன் மேஷ ராசியிலும், வியாழன் சிம்ம ராசியிலும் இருக்கும் சந்தர்ப்பத்தில் உஜ்ஜயினியில் மகா கும்பமேளா நடைபெறுகிறது.
பிரயாக்ராஜில் நடைபெறும் இந்த 2025 ஆம் ஆண்டு மகா கும்பமேளாவில், ஜனவரி 13 அன்று பௌஷ் பூர்ணிமா, ஜனவரி 14 அன்று மகர சங்கராந்தி, ஜனவரி 29 அன்று மௌனி அமாவாசை, பிப்ரவரி 3 அன்று பசந்த் பஞ்சமி, பிப்ரவரி 12 அன்று மாகி பூர்ணிமா, பிப்ரவரி 26 அன்று: மகாசிவராத்திரி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 44 நாட்கள் நடைபெறும் இந்த மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள இந்தியா முழுவதும் இருந்தும், சில வெளிநாடுகளிலிருந்தும் மொத்தம் 40 கோடி பேர் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் உடல் நலத்தை உறுதி செய்வதற்காக, 407 மருத்துவர்கள் மற்றும் 700-க்கும் மேற்பட்ட துணை மருத்துவப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்புக் கவனிப்புடன் 24 மணி நேர மருத்துவ சேவை வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. 100 படுக்கைகள் கொண்ட தற்காலிக மத்திய மருத்துவமனை நிறுவப்பட்டுள்ளது. இவை தவிர, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கழிவறைகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு 10 கழிவறைகளுக்கும் ஒரு துப்புரவாளர் மற்றும் 10 துப்புரவு பணியாளர்களைக் கொண்ட ஒரு குழுவை மேற்பார்வையாளர் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.