116 வயதில் திருப்பதி மலை ஏறிய பாட்டி.! வயது ஒரு தடையல்ல.!

116 வயதில் திருப்பதி மலையேறிய சாதனை பாட்டி - முழு விவரம்.!
திருப்பதி நடைபயணம்
Tirupathi Temple
Updated on

ஏழுமலையான் வீற்றிருக்கும் ‘திருப்பதிக்கு சென்று வந்தால் திருப்பம் வரும்’ என்று சொல்வார்கள். அதற்கேற்ப இந்தியா முழுவதிலும் இருந்து எண்ணற்ற பக்தர்கள் திருப்பதிக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.

ஆண்டு முழுவதுமே திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். குறிப்பாக புரட்டாசி மாதத்தில் வழக்கத்தை விடவும் கூட்டம் அதிகரித்து காணப்படும். இந்நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த 116 வயதுடைய பீமவ்வா பாட்டி, திருப்பதி மலையில் நடந்து சென்றே சாமி தரிசனம் செய்துள்ளார்.

தள்ளாடும் வயதிலும் திருப்பதி மலையில் ஏறியிருக்கிறார் என்பதைக் கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது. திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்வோர், கீழ் திருப்பதியில் இருந்து பேருந்து மூலமாகவோ அல்லது மலைவழிப் பாதையில் நடந்து சென்றோ சாமி தரிசனம் செய்வர்.

மலையேற சிரமப்படுவர்கள் தான் பேருந்தில் செல்வர். ஆனால் 116 வயதில் ஒரு பாட்டி சுமார் 3,550 படிகட்டுகளை ஏறி சாமி தரிசனம் செய்திருப்பது மிகப்பெரிய சாதனை தான்

நேற்று (ஜூலை 4) கர்நாடகாவைச் சேர்ந்த பீமவ்வா என்ற லட்சுமவ்வா பாட்டியின் குடும்பத்தினர் திருப்பதிக்கு சென்றனர். அவர்கள் கீழ் திருப்பதியை அடைந்ததும், அங்கிருந்து பேருந்து வழியாக மலைக்குச் செல்லத் திட்டமிட்டனர். ஆனால், பீமவ்வா பாட்டி மலைவழிப் பாதையாக நடந்து சென்று தான் சாமி தரிசனம் செய்வேன் என விடாப்படியாக கூறியுள்ளார்.

பாட்டியை குடும்பத்தினர் சமாதானம் செய்ய முயற்சித்தும், அவர் பேருந்தில் செல்ல சம்மதிக்கவில்லை. அதன்பிறகு பீமவ்வா பாட்டியுடன் குடும்பத்தினர் அனைவரும் திருப்பதி மலையில் நடந்து சென்றே ஏறினர். கையில் ஒரு கைத்தடியை மட்டுமே பிடித்துக் கொண்டு, பீமவ்வா பாட்டி மலையேறினார். பீமவா பாட்டி அலிபிரி மலையில் ஏறிச் சென்ற போது அவரைப் பார்த்த மற்ற பக்தர்கள், பாட்டிக்குத் தேவையான உதவிகளை செய்யவும், தண்ணீர் வழங்கவும் முன்வந்தனர்.

மலையேறும் போது பக்தர்கள் ஆங்காங்கே ஓய்வெடுப்பார்கள். பீமவ்வா பாட்டி மலையேறுவதைக் கண்ட சில பக்தர்கள், ஓய்வெடுப்பதைக் கூட தவிர்த்து விட்டு, உத்வேகத்துடன் மலையேறினர்

திருப்பதி மலையில் ஏறுவதற்கு இளம் வயதினரே அதிகம் சிரமப்படுவர். ஆனால் 116 வயதில் சுமார் 9 கி.மீ. தொலைவுள்ள அலிபிரி மலைப்பாதையில் நடப்பது என்பது சாதாரண விஷயமல்ல. 50 வயதைக் கடந்தாலே நடந்து செல்ல திணறுபவர்கள் மத்தியில், 116 வயதில் மலையேறுவது மாபெரும் சாதனை தான். அப்படியெனில் பாட்டியின் உடல்நலம் எந்த அளவிற்கு சீராக இருந்திருக்கும்.

இந்த வயதிலும் பாட்டியின் தளராத உடல் வலிமையைக் கண்டு குடும்பத்தினரே ஆச்சரியம் அடைந்தனர். இந்த உடல் வலிமைக்கு பாட்டியின் உணவுமுறையும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.

tirupati
Tirupati
இதையும் படியுங்கள்:
ஆதார் பயனர்களுக்கு குட் நியூஸ்: இனி 6 மாதத்திற்கு கட்டணமே கிடையாது!
திருப்பதி நடைபயணம்

116 வயதான பீமவ்வா பாட்டி முதுமையையும் பொருட்படுத்தாமல், தீவிர பக்தியுடன் திருப்பதி மலையில் எவ்வித தடையுமின்றி நடந்து சென்ற பாட்டியின் மன உறுதி, பக்தர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பாட்டியின் உடல் வலிமை மற்றும் இறைவன் மீதான நம்பிக்கையானது, உண்மையிலேயே வியக்கத்தக்க மற்றும் பலருக்கும் ஊக்கமளிக்கக் கூடிய ஒரு நிகழ்வாகும்.

பாட்டியின் இந்த செயல் மூலம் வயது என்பது வெறும் எண் மட்டுமே என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. தனது வாழ்நாள் முழுவதும் பாட்டி கடைபிடித்து வந்த எளிய மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான பலன் தான் இது.

இதையும் படியுங்கள்:
நீங்கள் வாங்கும் மருந்து ஒரிஜினலா? இனி QR கோடை ஸ்கேன் செய்தால் போதும்..!!
திருப்பதி நடைபயணம்
logo
Kalki Online
kalkionline.com