சுமார் 120 நாட்களாக நீருக்கடியில் இருந்து சாதனை படைத்திருக்கிறார் ஒரு ஜெர்மானியர். யார் என்றுப் பார்ப்போமா?
மனிதர்களைவிட்டு நம்மை தனிமைப்படுத்திக்கொண்டாலே உச்சகட்ட மன அழுத்தத்திற்கு ஆளாவோம். அதுவும் மனிதர்கள் வாழாத இடத்தில் தனிமையாக இருந்தால் அவ்வளவுதான். இதனால்தான் அதுபோன்ற இடங்களில் தனிமையாக வாழ்வது சாதனையாக கருதப்படுகிறது.
இப்படித்தான் ஜெர்மனி நாட்டின் விண்வெளி பொறியியளாளர் ஒருவர் பனாமா கடலுக்கு அடியில் 120 நாட்கள் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அந்த பொறியியளாளருக்கு 59 வயதாகும். ருடிகர் கோச் கடலுக்கு அடியில் இருக்கும் தனது Capsule வீட்டில்தான் 120 நாட்கள் தங்கினார். இந்த வீட்டிலிருந்து நேற்று வெளியே வந்தார்.
இதற்கு முன்னர் ஃபுளோரிடா குளத்தில் நீருக்கடியில் ஒரு லாட்ஜில் 100 நாட்கள் ஜோசப் டிடுரியின் என்பவர் வாழ்ந்தார்.
அந்தவகையில் இப்போது 20 நாட்கள் அதிகமாக நீருக்கடியில் வாழ்ந்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
இதுகுறித்து கோச் கூறும்போது, “இருட்டில் கடல் பிரகாசமாக இருக்கும்போது, அதுவும் அமைதியாக இருக்கும்போது, அதனை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அவ்வளவு அழகாக இருக்கும்.” என்று கூறினார்.
அவர் தங்கியிருந்த இந்த கேப்சுலில் படுக்கை, கழிப்பறை, டிவி, கணினி, இணையம், உடற்பயிற்சிகான சைக்கிள் போன்ற அனைத்தும் இருந்தன.
வட பனாமா கடற்கரையிலிருந்து படகில் 15 நிமிடங்கள் சென்றால், ஒரு படிகட்டு கொண்ட குழாய் இருக்கும். அதன் வழியாக இவருக்கு உணவு வழங்கப்பட்டு வந்தது. அதேபோல், பார்வையாளர்களும் மருத்துவர்களும் அதன் மூலம் உள்ளே சென்று வந்துள்ளனர்.
சூரிய சக்தி தகடுகள் மூலம் மின்சாரம் வந்தது. அவசரத்திற்கு ஒரு ஜெனரேட்டரும் இருந்தது. ஆனால், குளிப்பதற்கு ஷவர் இல்லை.
இந்த capsule க்குள் நான்கு கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தன. இதன்மூலம் அவரது வாழ்க்கை முறை, மன நலம் போன்றவற்றை கண்காணித்து வந்தனர். அதேபோல், எந்த சூழ்நிலையிலும் அவர் வெளியே வரவில்லை என்பதை நிரூபிக்க இந்த கேமராக்கள் உதவின. இதனால், கின்னஸ் உலக சாதனையை எந்தவித சந்தேகமும் இல்லாமல் பெற்றார்.