பழனி பாதை யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அனுமதியின்றி அன்னதானம் வழங்கினால் 1000 ரூபாய் அபராதம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் பெயரில் அந்த இடத்தையே அசுத்தப்படுத்துகின்றனர். இதனால், பக்தர்களால் கால்களையே வைக்கமுடியாத அளவு இருக்கிறது. குறிப்பாக பாதை யாத்திரை செல்லும் பக்தர்கள் செருப்பு அணியாமல் செல்வதால், இது மேலும் சிரமமாகி விடுகிறது.
அதேபோல், உணவை ப்ளாஸ்டிக் தட்டிலும், பாக்ஸிலும் சிலர் வழங்குகிறார்கள். இது இன்னும் ஆபத்தாகி விடுகிறது. சுட சுட உணவை ப்ளாஸ்டிக்கில் வைக்கும்போது அது ஆபத்தை விளைவிக்கும். சாப்பிடும் பக்தர்களுக்கு மட்டுமல்லாது, சுற்றுச்சூழல் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. அப்படியே சாப்பிட்டு தூக்கிப்போடும்போது மக்காத ப்ளாஸ்டிக் பல ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது. இதனால்தான் பழனி கோவிலில் அன்னதானம் செய்பவர்களுக்கு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிக பக்தர்கள் செல்லும் கோவிலாக பழனி முருகன் கோவில் இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் இந்த கோவிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து பாதை யாத்திரை வருவார்கள். அப்படி செல்லும் பக்தர்களுக்கு முருகன் பக்தர்களால் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானம் வழங்கும்போது பிளாஸ்டிக் பையுடன், பிளாஸ்டிக் சார்ந்த உணவு பொருட்கள் அடங்கிய டப்பாக்களை பயன்படுத்தி அதனை அப்புறப்படுத்தாமல் சாலை ஓரங்களிலும், விவசாய நிலங்களில் அப்படியே விட்டு செல்கின்றனர்.
இதனால், சுற்றுபுற சூழல் மாசடைதல் போன்ற பல விளைவுகளை ஏற்படுத்துவது அச்சுறுத்தலாகியுள்ளது. இதனை முழுமையாக கட்டுபடுத்த உணவு பாதுகாப்புத்துறையின் அனுமதி இல்லாமல் அன்னதானம் வழங்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படி வழங்கினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்பு துறையிடம் கண்டிப்பாக அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உணவு வழங்கும்போது ப்ளாஸ்டிக்கை பயன்படுத்த கூடாது என்று உணவு பாதுகாப்புத் துறை கூறியுள்ளது.
அதேபோல் அன்னதானம் வழங்கிய பின் சம்பந்தப்பட்ட இடத்தை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும் என மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினர் அறிவித்தனர். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வரும் பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெறுவதால் முன் அறிவிப்பாக இதனை தெரிவித்துள்ளனர்.