ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து மிரண்ட மருத்துவர்கள்! பெண்ணின் வயிற்றில் 14 பேனாக்கள், 5 மரக்கரண்டிகள்!

ஆந்திராவில் 20 பொருட்களை அகற்றிய மருத்துவர்கள்; பொருட்கள் விழுங்கும் நோயின் விபரீதம்!
பிகா சிண்ட்ரோம்
பிகா சிண்ட்ரோம்source:dinamalar
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on

இயற்கைக்கு மாறான விஷயங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி அதிர்ச்சி தரும். அப்படி ஒரு விஷயம்தான் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 மரக் கரண்டிகள் மற்றும் ஒரு மெழுகுவர்த்தியை அறுவைச் சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றிய அரிய மருத்துவ சம்பவம்.

சமீபத்தில் ஆந்திரப் பிரதேசம் பல்நாடு மாவட்டம் பெட்லூரிவாரிபாலேம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுப் பெண் ஒருவருக்கு கடுமையான வயிற்று வலி காரணமாக நரசராவுபேட்டில் உள்ள மாதாஸ்ரீ (Mathasri) தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் ஆலோசனை பெற்று பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்தபோது அவரது வயிற்றில் ஏராளமான வெள்ளிப்பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

வயிற்றில் பேனா, கரண்டிகள் இருந்தது தெரிய வந்தது; இது தெரியவந்த நிலையில், நிலைமையின் தீவிரம் உணர்ந்த மருத்துவர்கள் உடனடியாக லேப்ராஸ்கோபிக் அறுவைச் சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த 14 பேனாக்கள் 5 மரக் கரண்டிகள், 1 மெழுகுவர்த்தி உள்பட மொத்தம் 20 பொருட்களை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர் .நீண்ட நாட்களாக இவைகள் வயிற்றில் இருந்தபோதும் எவ்வித விளைவுகளும் இதுவரை இல்லை எனினும் தற்போது ஒரு பேனாவுக்கு மூடி இல்லாததால், அது வயிற்றில் குத்திக்கொண்டு வலி ஏற்படுத்தியிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மருத்துவர்கள் மற்றும் குடும்பத்தினர் கூறிய தகவல்கள் முக்கியமானவையாக கருதப்படுகிறது.

அந்தப் பெண்ணின் தந்தை, அவர் சுமார் 10 ஆண்டுகளாக மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், அவருக்கு சமீபத்தில் குடும்பப் பிரச்சினையும் ஏற்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. அந்த பெண்ணுக்கு பிகா சிண்ட்ரோம் (Pica syndrome) என்ற பொருட்களை விழுங்கும் பிரச்னை உள்ளதா என மருத்துவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஆனால், இது Pica syndrome தான் என்று உறுதியாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர் என்றும் கூற முடியாது என்கின்றனர். இது உணவல்லாத பொருட்களை தொடர்ந்து விழுங்கும் பழக்கம் Pica-வின் ஒரு அறிகுறியாக இருக்கலாம் என்றும் இந்தப் பெண்ணின் குறிப்பிட்ட நிலைக்கு மனநல மதிப்பீடு தேவை என்றும் மருத்துவர்கள் பரிந்துரை செய்ததாக தெரிகிறது. மேலும் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அந்தப் பெண்ணின் உடல்நிலை நிலையாக இருப்பதாகவும், அவர் குணமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலே குறிப்பிட்ட அந்தப் பெண்ணுக்கு வந்ததாக கருதப்படும் Pica syndrome என்பது உணவாகக் கருதப்படாத பொருட்களை தொடர்ந்து சாப்பிட வேண்டும் அல்லது விழுங்க வேண்டும் என்ற தூண்டுதல் ஏற்படும் ஒரு உணவு உண்ணும் தொடர்பான கோளாறு என்கிறது மருத்துவம்.

பொதுவாக சிறு குழந்தைகள் சிறுகல், மண், சுண்ணாம்பு போன்ற பொருள்களை சாப்பிடுவதைப் பார்த்து புள்ளைக்கு சத்து இல்லை அதான் இதையெல்லாம் சாப்பிடுது எனப் பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். உண்மைதான். குழந்தைகளிடம் குறிப்பாக இரும்புச்சத்து அல்லது துத்தநாகக் குறைபாடு உள்ளவர்களிடம் குழந்தைகளில் இது சில நேரங்களில் இந்த உணவல்லாத பொருள்களை விழுங்குவது காணப்படலாம். கர்ப்ப காலத்திலும் சில பெண்களுக்கு இப்படிப்பட்ட விருப்பம் தோன்றலாம்.

இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு மண், மணல், களிமண், சுண்ணாம்பு, சுவர் பூச்சு/பிளாஸ்டர், காகிதம், துணி, சோப்பு ,முடி, பனிக்கட்டி, சாம்பல் போன்றவற்றை சாப்பிடும் ஆசை உண்டாகும் என்கின்றனர்.

இதனால் ஆபத்து உள்ளதா எனில் சாப்பிடும் பொருளைப் பொறுத்து ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். சாப்பிடும் பொருள் பொறுத்து வயிறு மற்றும் குடலில் அடைப்பு, மலச்சிக்கல், விஷத்தன்மை அல்லது நச்சு உலோகங்கள் உடலில் சேர்தல், தொற்று அல்லது புழுக்கள் பற்கள் மற்றும் குடலுக்கு பாதிப்பு

போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம்.

இந்த பழக்கம் இருப்பது தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. இதற்கு சிகிச்சையாக முதலில் மருத்துவர் இரும்புச்சத்து, ரத்தசோகை மற்றும் பிற ஊட்டச்சத்து குறைபாடுகளை பரிசோதிக்கலாம். குறைபாடு இருந்தால் அதை சரிசெய்வதற்கான மருந்துகளைத் தந்து உதவலாம். இதுவே தொடர்ந்து பொருட்களை சாப்பிடும் பழக்கம் இருந்தால், குழந்தை மருத்துவருடன் மனநல நிபுணரின் மதிப்பீடும் தேவைப்படலாம்.

மேலும் ஒரு குழந்தை மண், சுண்ணாம்பு, சோப்பு போன்றவற்றை ஒருமுறை சாப்பிட்டதாலேயே Pica என்று சொல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. .

இதையும் படியுங்கள்:
வெங்காயம் முளைக்காமல் இருக்க சிம்பிள் ட்ரிக்... இல்லத்தரசிகளுக்கு சூப்பர் டிப்ஸ்!
பிகா சிண்ட்ரோம்
logo
Kalki Online
kalkionline.com