
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பர்களில் தகுதியானவர்களை மட்டும் அடையாளம் கண்டு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு கட்டாயம் ரூ.1000 கொடுக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், யாரெல்லாம் விண்ணப்பிக்கக்கூடாது, யாருக்கெல்லாம் விதிவிலக்கு இருக்கிறது என்பது தொடர்பான விதிமுறைகளையும் தமிழ்நாடு அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் தற்போது ஒரு கோடியே 14 லட்சம் பெண்கள் பயனாளிகளாக இருக்கும் நிலையில் விரைவில் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர்.
அதற்காக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவரும் ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’களில் கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை நாள்தோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த திட்டத்துக்காக, நகர்ப்புறத்தில் 1428 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 2135 முகாம்களும் வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய 4 நாட்கள் நடத்தப்படுகின்றன.
இந்த முகாம் தொடங்கப்பட்டு 30 நாட்களில் மகளிர் உரிமைத்தொகை கோரி மட்டும் 15 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இரண்டாம் கட்டமாக நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்த பலருக்கு ரூ.1000 கிடைக்கும் என தெரிகிறது.
இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் பதில் அளிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த மாதம் 28ம் தேதியுடன் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கி 45 நாட்கள் ஆகப்போகிறது. இந்த முகாமில் முதல் வாரத்தில் மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பித்தவர்கள் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி முதல் பதில்களை பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் பெறப்பட்ட மகளிர் உரிமை தொகைக்குக்கான விண்ணப்பங்கள் பகுதி வாரியாக பரிசீலனை செய்யப்பட்டுவரும் நிலையில் அவர்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்குமா என்ற பதில் ஆகஸ்ட் 28ம் தேதி முதல் தெரியவரும்.
அதேபோல் செப்டம்பர் 15-ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை எப்போது பயனாளிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும், எத்தனை பேர் இந்த திட்டத்தில் இணைக்கப்பட உள்ளனர் போன்ற தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.
ஏனெனில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முதன்முதலாக 2023-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி தான் தொடங்கி வைக்கப்பட்டது என்பதால் அன்றைய தினம்(செப்டம்பர் 15-ம் தேதி) அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கலைஞர் மகளிர் தொகைக்காக விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் கடந்த ஒரு மாதமாகப் பரிசீலனை செய்யப்பட்டு வரும் நிலையில் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் மனுவின் நிலையை https://kmut.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளும் வகையிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.