
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு லட்சக்கணக்கான பெண்கள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு உரிமைத்தொகை திட்டத்துக்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையைப் பொறுத்தவரை முகாம்களில் எங்கே வேண்டுமானாலும் பெற்று, சரியான தகவல்களை பூர்த்தி செய்து, அங்கேயே தரலாம் எனவும் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் வெளியில் யாரிடமும் கிடைக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த முகாம்களில் வருகின்ற விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு உரிய பயனாளிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதியுள்ள / விடுபட்ட மகளிர், முகாமில் வழங்கப்படும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அளித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஏற்கனவே ஒரு கோடியே 14 லட்சம் பேர் பயனாளர்களாக உள்ள நிலையில் புதிய பயனாளர்களை இணைக்கும் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நீண்ட காலமாக காத்திருப்பவர்களும், புதிய ரேஷன் அட்டை தாரர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை 12 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. தினமும் விண்ணப்பிப்பர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருவதால் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த எல்லோருக்கும் ரூ.1000 கிடைக்குமா? என்ற மிகப்பெரிய கேள்வி மக்களிடத்தில் பரவலாக எழத் தொடங்கியுள்ளது.
12 லட்சத்திற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பித்திருந்தாலும் அரசு வகுத்துள்ள விதிகளின்படி, தகுதியானவர்களுக்கு மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கொடுக்கப்படும் என திட்டவட்டமாக அரசு தெரிவித்துள்ளது.
விதிமுறைகள் அனைத்தும் தெரிந்தபிறகே தகுதியுடைய பெண்கள் ஆர்வத்துடன் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பித்து வருவதால் பெரும்பாலானோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. அந்தவகையில் பார்க்கும்போது, இத்தனை லட்சம் பெண்களுக்கும் மகளிர் உரிமைதொகை கொடுக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஒருவேளை புதிதாக விண்ணப்பித்தவர்களில் விதிமுறைகளின் படி தகுதியுள்ள பெண்களில் ஒரு பகுதியினருக்கும் மட்டும் முதலில் 1000 ரூபாயை கொடுத்து விட்டு, பின்னர் சிலமாதங்கள் கழித்து மீதம் உள்ளவர்களுக்கு அடுத்த கட்டமாக மாதம் 1000 ரூபாய் கொடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் எந்த முறையில் பரிசீலிக்கப்படும், முதல்முறை நிராகரிப்பப்பட்டவர்களுக்கு மீண்டும் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படுமோ என்ற அச்சமும் பெண்களிடையே எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி இப்போது விண்ணப்பித்தவர்களுக்கு எப்போது முதல் அவர்களை மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர்த்து, 1000 ரூபாய் கொடுக்கலாம் என்ற முடிவை அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
எது எப்படி இருந்தாலும் இந்த மாதம் (ஆகஸ்டு) இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் 15-ம் தேதிக்குள் மகளிர் உரிமைத்தொகை தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாக வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.