2026 பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 மாதங்களே இருப்பதால், சொந்த ஊருக்கு செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி விட்டது. தினந்தோறும் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விரைவில் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வழக்கத்தை விடவும் பொங்கல் பண்டிகைக்கு பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், 150 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தெற்கு ரயில்வேயில், மொத்தம் ஆறு ரயில்வே கோட்டங்கள் உள்ளன. சென்னையில் தினசரி 170 பயணிகள் ரயில்கள் உட்பட மொத்தம் 500-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கல் பண்டிகை வரவிருப்பதால், அதற்கான சிறப்பு ரயில்கள் இயக்கம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
நடப்பாண்டில் தீபாவளி மற்றும் ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகைகளின் போது, பயணிகளின் வசதிக்காக 150-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகைக்கும் 150 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு வாரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்தனர். இந்நிலையில் நான்கு நாள் பண்டிகையாக கொண்டாடப்படும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக 150 சிறப்புகள் இயக்கப்பட உள்ளன. டிசம்பர் 15 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
சிறப்பு ரயில்களின் தேதி, நேரம் மற்றும் முன்பதிவு குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இது தவிர பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு சென்ற பயணிகள் சென்னைக்குத் திரும்பும் வகையில், ஜனவரி 16ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
பொங்கல் பண்டிகைக்கு ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் நிரம்பி வழியும் என்பதால், இதனைத் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே வாரியத்திடம், தெற்கு ரயில்வே அனுமதி கோரியது.
இதற்கான அனுமதி தற்போது வழங்கப்பட்ட நிலையில், சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது தெற்கு ரயில்வே. பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்லும் பயணிகள் கடைசி நேர சிரமத்தைத் தவிர்க்க, முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.