கடந்த மாதம் தீபாவளி அன்று பொதுமக்கள் பலரும் சொந்த ஊருக்குச் சென்ற போது, ரயில் நிலையங்கள் மற்றும பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பியது. தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து சொந்த ஊருக்குச் சென்று வந்த நிலையில், தற்போது அடுத்த பண்டிகைக்கான முன்பதிவு தொடங்கி விட்டது.
தீபாவளிக்குப் பிறகு பெரிய பண்டிகை என்றால், அது பொங்கல் தான். பொங்கலுக்கு தொடர் விடுமுறை விடப்படும் என்பதால், கடைசி நேரத்தில் ரயில் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும். ஏனெனில் நிச்சயமாக பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், ரயில் முன்பதிவை இப்போதே தொடஙகி விட்டது தெற்கு ரயில்வே.
இந்நிலையில் இன்று காலை முதல் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் செல்வதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. பொதுவாக விரைவு ரயில்களில் பயணிக்க இரண்டு மாதங்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது. அதேபோல் பேருந்துகளில் 90 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
இதன் மூலம் பயணிகள் தங்கள் பயணத்தை முன்னரே திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவை செய்து வருகின்றனர். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் தற்போது ஜனவரி 9 ஆம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது
வருகின்ற ஜனவரி 13ஆம் தேதி போகிப் பண்டிகையுடன் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாள் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 14 ஆம் தேதி தைப்பொங்கலும், 15 ஆம் தேதி மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினமும், 16 ஆம் தேதி உழவர் திருநாளும் கொண்டாடப்பட இருக்கிறது.
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருக்கும் பெரும்பாலான மககள், சென்னையில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். விசேஷ நாட்கள் மற்றும் பண்டிகைகளின் போது இவர்கள் சொந்த ஊருக்குச் சென்று வருவது வழக்கம். சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அதேபோல் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்தையும் முன்கூட்டியே அறிவித்து பயணிகளுக்கு உதவுகிறது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி, மதுரை, மயிலாடுதுறை, சிதம்பரம், திருநெல்வேலி, தஞ்சாவூர் மற்றும் கன்னியாகுமாரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து இன்று அடுத்த வருடம் ஜனவரி 9 ஆம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியதால், பயணிகள் பலரும் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர். நெல்லை எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ் மற்றும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில்களில் டிக்கெட் முன்பதிவு மிக வேகமாக நடந்து வருகிறது.
பொங்கல் பண்டிகைக்கு ஓரிரு நாட்கள் முன்னரே சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் பயணிகள், இன்றிலிருந்து டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். அதே நேரம் பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 10, 11, 12, 13 மற்றும் 14 ஆகிய தினங்களில சொந்த ஊருக்குச் செல்பவர்கள், அடுத்தடுத்த தினங்களில் டிக்கெட் முன்பதிவு மேற்கொள்ள ஆயத்தமாக உள்ளனர்.
அதேபோல் சென்னைக்கு திரும்புவதற்கான டிக்கெட் முன்பதிவு இன்னும் சில நாட்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி நேர சிரமத்தைத் தவிர்க்க பயணிகள் விரைந்து டிக்கெட் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.