உலகையே பதைபதைக்க வைக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் 16 பேர் பலியாகியுள்ளதாகவும், இன்னும் தீயை அணைக்கும் போராட்டம் நீடித்து வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காட்டுத் தீ பரவி மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து ஆறு நாட்களாக தீ பரவி வரும் நிலையில், 4 லட்சம் பேர் வெளியேற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 10,000 வணிக கட்டிடங்கள், 30,000 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன. சுமார் ரூ.13 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நகரத்தில் ஹாலிவுட் பகுதி உள்ளதால், அங்கு முன்னணி திரைப்பட நிறுவனங்கள், அவற்றின் திரைப்பட நகரங்கள் அமைந்துள்ளன. இதன்காரணமாக ஹாலிவுட் திரையுலகின் தலைநகராக லாஸ் ஏஞ்சல்ஸ் விளங்குகிறது. இதனால் ஹாலிவுட் வட்டாரத்திற்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது.
இப்படி முக்கிய நகரமாக விளங்கும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த 7ம் தேதி காட்டுத் தீ பரவியது. மலைப்பகுதிகள், எளிதில் தீப்பற்றி எரியும் பைன் மரங்களால் காட்டுத் தீ அதிவேகமாக பரவியது. தற்போது பாலிசேட்ஸ், ஈட்டன், ஹர்ஸ்ட், லிடியா ஆகிய பகுதிகளில் கட்டுக்கடங்காமல் தீ பரவி வருகிறது.
கடந்த 10ம் தேதி 10 பேர் பலியானதாக செய்திகள் வந்த நிலையில், இன்றைய நிலவரப்படி சுமார் 16 பேர் உயிரிழந்துள்ளனர். ஈட்டன் பகுதியில் 11 பேரும், பாலிசேட்ஸ் பகுதியில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். சாண்டா அனாஸ் என்றழைக்கப்படும் பாலைவன காற்று மணிக்கு 50 கி.மீ வேகத்தால் தீ பரவல் மேலும் தீவிரமாகியது. தீயை கட்டுப்படுத்த 7,500 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர், ஆனால் தண்ணீர் மற்றும் மின்சார வசதிகளின் குறைபாடு தீ அணைக்கும் பணிகளை தடை செய்துள்ளது.
ஈட்டன் பகுதியில் 15 சதவிகித அளவும், பாலிசேட்ஸ் பகுதியில் 11 சதவிகித அளவு தீயும் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தீ பரவலால் சுமார் 12,000 கட்டிடங்கள் முழுமையாக நாசமடைந்துள்ளன. கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் தீ அணைக்கும் உதவிகளை வழங்கி வருகின்றன. ஆனால் சூறாவளிக் காற்றின் காரணமாக விமானங்கள் மற்றும் பிற மூலவளங்கள் முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.