இஸ்ரேல் காசா போர் நடந்து வரும் நிலையில், இஸ்ரேலின் கட்டுமான பணிகளை செய்ய 16 ஆயிரம் இந்தியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் காசா இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து போர் நடைபெற்று வருகிறது. காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் பல இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதனால் பாலஸ்தீனத்தின் மக்களும் பணியாளர்களும் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழையோ அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த போர் தொடங்குவதற்கு முன்னரே இஸ்ரேல் நாட்டின் கட்டுமான பணி மற்றும் விவசாய பணிகளைப் பார்க்க மேற்கு கரை மற்றும் காசா முனையில் பாலஸ்தீனர்கள் பணியமர்ந்தப்பட்டனர்.
இந்தப் போரினால் அவர்களை மீண்டும் அந்த வேலைகளுக்கு அழைக்க இஸ்ரேல் மறுத்துவிட்டது. இதனையடுத்து மற்ற நாடுகளிலிருந்து பணியாளர்களை இறக்க இஸ்ரேல் திட்டமிட்டது.
அதன்படி இந்தியாவின் 16 ஆயிரம் பணியாளர்கள் இஸ்ரேல் கட்டுமான பணிக்கு பணியமர்த்தியது. இந்தியாவைச் சேர்ந்த ராஜு நிஷாத் (வயது 35) என்பவர் மத்திய இஸ்ரேலில் உள்ள பீர் யாகோவ் என்ற இடத்தில் நடைபெறும் கட்டுமான பணியில் முன்னணி ஊழியராக திகழ்ந்து வருகிறார்.
அவருடன் ஏராளமான இந்தியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு ஹமாஸ் அமைப்பினரின் தொந்தரவுகள் இருக்கும் நிலையில், இதை எப்படி சமாளிக்கிறார்கள் என்பது குறித்து பேசியிருக்கிறார். அதாவது "ஒவ்வொருமுறையும் எச்சரிக்கை ஒலி விடுக்கப்படும். அது நின்றவுடன் நாங்கள் வேலையை மீண்டும் தொடர்வோம் " எனக் கூறும் நிஷாத் "இங்கே (இஸ்ரேலில்) பயப்படக் கூடியதற்கு ஒன்றுமில்லை" என சர்வ சாதாரணமாக தெரிவித்துள்ளார்.
மேலும், “ பணம் சம்பாதிப்பது அவசியமானது. குடும்பத்திற்காக எந்த சூழ்நிலையிலும் உழைத்துதானே ஆக வேண்டும்.” என்று கூறியிருக்கிறார்.
இப்படி இவர்கள் இந்தியாவிலிருந்து இஸ்ரேல் சென்று பணி செய்வதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளதாம். இஸ்ரேலில் கட்டுமான தொழிலில் ஈடுபடும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகமாக கிடைக்கும் என்பதால் இப்படி சென்று வேலை பார்க்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
இஸ்ரேலில் பல தலைமுறைகளாக இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் வயதான இஸ்ரேலியர்களைப் பராமரிக்கும் பராமரிப்பாளர்களாகவும், மற்றவர்கள் வைர வியாபாரிகளாகவும், ஐடி நிபுணர்களாகவும் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.